Published:Updated:

நில அபகரிப்பில் கே.என்.நேரு... வன்கொடுமையில் பரஞ்சோதி..

திருச்சி வளையத்தில் திணறும் முன்னாள்கள்..

பிரீமியம் ஸ்டோரி
##~##

டிசம்பர் 13-ம் தேதி, திருச்சி மாநகரக் குற்றப்பிரிவு உதவி ஆணையர் அலுவலகத்தில், நில அபகரிப்பு வழக்கு தொடர்பான விசாரணைக்காக முன்னாள் அமைச்சர் கே.என்.​நேரு ஆஜரானார். அதற்கு அடுத்த நாள், பரஞ்சோதி மீது புகார் அளித்த டாக்டர் ராணி, தில்லை நகர் காவல் நிலையத்துக்குச் சென்று, ஸ்ரீரங்கம் உதவி கமிஷனரிடம் தனது புகாருக்கான ஆதாரங்​களை சமர்ப்பித்துவிட்டு வந்தார். இந்த இரண்டு சம்பவங்கள்தான் திருச்சி அரசியல் வட்டாரத்தில் பரபர டாக். இடைத்தேர்தலில் ஜெயித்தவரும் தோற்றவரும் மாறி மாறி போலீஸார் வளையத்துக்குள் வந்துகொண்டு இருக்கிறார்கள். 

முதலில் நேரு மேட்டர்...

நில அபகரிப்பில் கே.என்.நேரு... வன்கொடுமையில் பரஞ்சோதி..

திருச்சி கே.கே.நகரில் ரியஸ் எஸ்டேட் பிசினஸ் செய்து​வரும் லேரோஸ் முராய்ஸ் என்பவர், 'எங்களுக்குச் சொந்தமான இடத்தைக் கேட்டு கே.என்.நேரு, அவரது சகோதரர் ராமஜெயம், முன்னாள் துணை மேயர் அன்பழகன் ஆகியோர் மிரட்டினார்கள். அதற்கு நான் மறுப்பு தெரிவித்ததால், நிறுவன வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் சிலையை அடித்து நொறுக்கினார்கள்’ என்று கே.கே.நகர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்திருந்தார். வேறு சில வழக்குகளுக்காக நேரு சிறையில் இருந்தபோது, இந்த வழக்கையும் அவர் மீது பாய்ச்சி இருந்தனர் போலீஸார். அது தொடர்பான விசாரணைக்காகத்தான் மூவரையும் அழைத்து வாக்குமூலங்களைப் பதிவு செய்து வருகின்றனர் போலீஸார்.

டிசம்பர் 9-ம் தேதி முதல் கட்ட விசாரணைக்குமூவரும் அழைக்கப்பட்டனர். அவர்களிடம் தனித்தனியாக 12 கேள்விகளைக் கேட்டு, அவர்களது பதில்களைப் பதிவு செய்தார் உதவி கமிஷனர் மாதவன். இரண்டாம் கட்டமாக டிசம்பர் 13-ம் தேதி விசாரணைக்கு அழைக்கப்பட்ட நேரு மற்றும் அவரது சகாக்களிடம் 30 கேள்விகள் கேட்கப்பட்டதாம்.

லேரோஸ் முராய்ஸ் கொடுத்த புகாரில், 'போகிப் பண்டிகை அன்று நேருவும் அவரது சகோதரர் ராமஜெயமும்  ஒரு தனியார் வாகனத்தில் வந்து தன்னை மிரட்டினார்கள்’ என்று குறிப்பிட்டு இருந்தார். அதற்கு, ''முராய்ஸ் என்ற நபரை எனக்குத் தெரியாது. அவரை நான் பார்த்ததும் இல்லை. போகிப் பண்டிகை அன்று நான் திருச்சியிலேயே இல்லை. நான் அமைச்சர் பொறுப்பில் இருந்த காலத்தில், எங்கு சென்றாலும் முழுக்க முழுக்க அரசு வாகனத்தையும் அரசு டிரைவரையும் மட்டுமே பயன்படுத்துவேன்'' என்று பதில் அளித்தாராம் நேரு. பெரும்பாலான கேள்விகளுக்கு, 'தெரியாது, ஞாபகம் இல்லை’ என்று பதில் அளித்து இருக்கிறார். நேரு, ராமஜெயம், அன்பழகன் மூவரும் தனித்தனியாக விசாரிக்கப்பட்டனர்.

விசாரணை முடிந்து வந்த நேருவிடம் பேசியபோது, ''போலீஸார் என்னிடம் கேட்ட கேள்விகளுக்கு, தெரிந்த விவரங்களைச் சொல்லி இருக்கிறேன். அடுத்து, மூன்றாவது கட்ட விசாரணைக்கு அழைப்பு வந்துள்ளது. எத்தனை முறை போலீஸ் அழைத்தாலும், நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பேன்'' என்றார் கூலாக.

இது பரஞ்சோதி விவகாரம்...

நில அபகரிப்பில் கே.என்.நேரு... வன்கொடுமையில் பரஞ்சோதி..

டிசம்பர் 14-ம் தேதி தில்லைநகர் காவல் நிலையத்தில், ஸ்ரீரங்கம் உதவி கமிஷனர் வீராசாமி முன் ஆஜரானார் டாக்டர் ராணி. 'இரண்டாவது திருமணம் செய்துகொண்டு ஏமாற்றினார்’ என்று இவர் கொடுத்த புகாரின் பேரில்தான், திருச்சி அரசு மருத்துவமனை போலீஸார் பரஞ்சோதி மீது வன்கொடுமைச் சட்டம் உள்ளிட்ட ஏழு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள். அதனை அடுத்தே பரஞ்சோதியின் அமைச்சர் பதவி பறிபோனது.

மதியம் 3 மணிக்கு தில்லைநகர் காவல் நிலையத்துக்கு வந்த ராணி, மாலை 5 மணி வரை உதவி கமிஷனர் வீராசாமியிடம், தன்னிடம் உள்ள ஆதாரங்களையும் ஆவணங்களையும் சமர்ப்பித்து விளக்கம் அளித்தார். மொத்தம் 11 ஆவணங்களை சமர்ப்பித்திருக்கிறார் ராணி. தன்னை மனைவியாக ஏற்றுக்கொள்வதாக பரஞ்சோதி கைப்பட எழுதிக் கொடுத்த இரண்டு பத்திரங்களும் அதில் அடக்கம். ராணிக்குச் சொந்தமான ஸ்கார்பியோ மற்றும் ஃபோர்டு பியஸ்டா கார்கள் ஆகியவற்றை, பரஞ்சோதி ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ-வாக இருந்தபோது பயன்படுத்தியதற்கான ஆதாரமாக... சட்டப்பேரவையில் வழங்கப்பட்ட வாகன அனுமதிச் சீட்டுகளின் நகல்களை சமர்ப்பித்து உள்ளார். வேலூர், குற்றாலம், சென்னை, திருச்செந்தூர் ஆகிய ஊர்களில், பரஞ்சோதியுடன் ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கிய விவரங்களையும், தேதி வாரியாகச் சொல்லி இருக்கிறாராம் டாக்டர் ராணி.

நில அபகரிப்பில் கே.என்.நேரு... வன்கொடுமையில் பரஞ்சோதி..

ஸ்ரீரங்கம் உதவி கமிஷனர் வீராசாமியிடம் பேசினோம். 'ராணி கொடுத்துள்ள ஆவணங் களையும் ஆதாரங்களையும் ஆய்வு செய்து வருகிறோம். அவரிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. எங்களுக்குப் போதுமான தகவல்கள் கிடைத்த பின் பரஞ்சோதியிடம் விசாரணை நடத்துவோம். அதன்பிறகு, சட்ட நிபுணர்களை கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுப்போம்'' என்றார்.

திருச்சி மேற்குத் தொகுதி இடைத்தேர்தலில் நேருக்கு நேர் மோதிய கே.என்.நேருவும் பரஞ்சோதியும், இப்போது வழக்கு, விசாரணை என்று ஆளுக்கு ஒரு பக்கமாக ஓடுவதுதான் காலத்தின் கோலம்!

- அ.சாதிக் பாட்சா

படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு