Published:Updated:

`என்ன வேலை வேணும்; அமைச்சரிடம் பேசுகிறேன்!' - ஒரு வருடத்துக்குப் பின் சிக்கிய மோசடிப் பெண்

எம்.திலீபன்
`என்ன வேலை வேணும்; அமைச்சரிடம் பேசுகிறேன்!' - ஒரு வருடத்துக்குப் பின் சிக்கிய மோசடிப் பெண்
`என்ன வேலை வேணும்; அமைச்சரிடம் பேசுகிறேன்!' - ஒரு வருடத்துக்குப் பின் சிக்கிய மோசடிப் பெண்

அரியலூரில், அரசு வேலை வாங்கித் தருவதாக 25 பேரிடம் மோசடிசெய்த அரசு பெண் ஊழியரை அதிரடியாகக் கைதுசெய்திருக்கிறார்கள் போலீஸார்.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் உள்ள வேலாயுத நகரைச் சேர்ந்தவர் ஜெயந்தி. இவர், மீன்சுருட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆய்வகத்தில் பணிபுரிந்துவந்தார். இந்நிலையில் அலுவலக உதவியாளர், சமையலர்  உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் அரசு வேலை வாங்கித் தருவதாகப் பணம் வாங்கிக்கொண்டு ஜெயந்தி  தலைமறைவாகிவிட்டார் என ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் 25-க்கும் மேற்பட்டோர் புகார் அளித்தனர்.

இதையடுத்து, போலீஸார் வழக்குப்பதிவு செய்து ஜெயந்தியைத் தேடிவந்தனர். இந்நிலையில், பள்ளி முடிந்து வீட்டுக்குச் சென்ற ஜெயந்தியின் மகனைப் பின்தொடர்ந்த பாதிக்கப்பட்டவர்கள், வீட்டில் ஜெயந்தி இருப்பதைக் கண்டு காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, ஜெயந்தியை போலீஸார் கைதுசெய்து விசாரணை  நடத்திவருகின்றனர். தலைமறைவாக இருந்த ஜெயந்தி, ஒரு வருடத்துக்குப் பிறகு காவல் துறையினரிடம் சிக்கியுள்ளார்.

வழக்கை விசாரித்துவரும் போலீஸாரிடம் பேசினோம், ”ஜெயந்தி அ.தி.மு.க-வைச் சேர்ந்த பல அமைச்சர்கள் என் கையில் இருக்கிறார்கள். எந்த வேலை வாங்குவதாக இருந்தாலும், அந்தத் துறை அமைச்சருக்கே போன்  போட்டு பேசும் அளவுக்கு நெருக்கம் இருப்பதாகச் சொல்லி, பல நபர்களை ஏமாற்றியிருக்கிறார். இது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் விசாரித்துக்கொண்டிருக்கிறோம்'' என்று முடித்துக்கொண்டனர்.