Published:Updated:

உயிரோடு விளையாட்டு!

நடுங்கவைக்கும் பைக் ரேஸ்

பிரீமியம் ஸ்டோரி
##~##

னி, ஞாயிறுகளில் சென்னைக் கடற்கரைச் சாலைகளில் பயணிப்பவர்கள், 'விர்ர்ர்ரூம்... விர்ர்ர்ரூம்’ என்று அதிவேகத்தில் சீறிப் பறந்து, பலரின் உயிரோடு விளையாடும் பைக் இளைஞர்களைப் பார்த்துப் பதறாமல் திரும்ப முடியாது. முரட்டுத்தனமாக சீறும் இந்த பைக்குகளில் சிக்கி, பலர் படுகாயம் அடைந்தும் சிலர் பலியாகியும் இருக்கிறார்கள். ஆனாலும், பைக் ரேஸ் இன்னமும் எவ்வித தடங்கலும் இன்றி நடக்கிறது.

 கடந்த வருடம் மெரீனா கடற்கரையில் நடைபெற்ற பைக் ரேஸ் காரணமாக ஒரு கலவரம் வெடித்து, ஏராளமான வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. கடந்த மாதம் சென்னை சாந்தோம் சாலையில் பைக்கில் பயணம் செய்துகொண்டு இருந்த தந்தையும் மகனும் ஒரு ரேஸ் இளைஞனால் இடித்துத் தள்ளப்பட்டு படுகாயம் அடைந்தனர். கடந்த வாரம் கிழக்கு கடற்கரைச் சாலையில், ரேஸில் கலந்துகொண்ட அரவிந்தன் என்பவரது பைக் மோதி, காவலாளி ஒருவர் மரணம் அடைந்தார்.

உயிரோடு விளையாட்டு!

பைக் ரேஸ் மட்டும் அல்ல, ஆட்டோ ரேஸும் சென்னையில் நடக்கிறது. ஆர்யா, பூஜா நடிப்பில் வெளிவந்த 'ஓரம்போ’ படத்தைப் போலவே நண்பனுடன், காதலியுடன், மனைவியுடன் எனப் பல

உயிரோடு விளையாட்டு!

பிரிவுகளில் நடக்கும் பைக், ஆட்டோ ரேஸ், பெரும்பாலும் மெரீனா பீச்சில் தொடங்கி கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக மாமல்லபுரம் வரை நடக்கிறது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு ஆயிரங்​களில் பரிசுத் தொகையும், சில நேரங்களில் 10 பவுன், 15 பவுன் தங்கச் செயினும் பரிசாகக் கிடைக்கும். இவர்களில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற சூதாட்டத்திலும் பல ஆயிரங்கள் புழங்குகிறது. போட்டியில் பங்கேற்பவர்கள் பாதுகாப்புக்கு ஹெல்மெட்கூட அணிவது இல்லை. எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காகக் கண்மூடித்தனமான வேகத்தில் பறப்பதால், இடையில் சிக்கிக் காயம் அடைபவர்கள், உயிர் இழப்பவர்கள் பற்றி எல்லாம் இந்த இளைஞர்கள் கவலைப்படுவதே இல்லை. சாலை விபத்துகளில் ஒன்றாகவே இது கவனிக்கப்பட்டு முடிந்து விடுகிறது.

''இந்த பைக் ரேஸுங்கிறது எப்பவோ மாதத்துக்கு ஒரு தடவை, வருஷத்துக்கு ஒரு முறை நடக்கிறது இல்லை. வாராவாரம் பெசன்ட் நகர், கிழக்கு கடற்கரைச் சாலைகளில் நடக்கிறது. இந்த பைக் ரேஸில் ஈடுபவர்கள் எல்லோருமே கிட்டத்​தட்ட 17 வயது முதல் 22 வயது வரையுள்ள இளைஞர்கள்தான். பைக்கை வேகமாக ஓட்டுவதை அவர்கள் ஏதோ மாபெரும் சாதனையாக நினைத்துச் செயல்​படுகிறார்கள். அவர்களின் எதிர்காலத்தை, ஸ்பீடு தரும் த்ரில்லிங்கான  சந்தோஷத்துக்காக இழக்கிறார்கள்.

அவர்கள் அதிவேகத்தில் போவதால், சின்ன அடி விழுந்தால்கூட பெரிய ஆபத்தில் முடியும். முதல் உதவி கொடுத்து உயிரைக் காப்பாற்றுவதும் கஷ்டம். ஓவர் ஸ்பீடு, ரேஷ் டிரைவிங், சிக்னல்களை மீறுவது, அடுத்தவர்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவது என்று இந்த இளைஞர்கள் மீது சட்டப்படி பல நடவடிக்கைகள் எடுக்க முடியும். அதனால் போலீஸ் இனியாவது இந்த ரேஸை தடுத்து நிறுத்த வேண்டும்'' என்று கோரிக்கை வைக்கிறார்,  'அலர்ட்’ தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் கலா பாலசுந்தரம்.

''சென்னையில் மட்டும்தான் ரேஸ் மைதானம் இருந்தது. இப்போது கோயம்புத்தூரிலும் ரேஸ்

உயிரோடு விளையாட்டு!

மைதானம் திறக்கப்பட்டு உள்ளது. ரேஸில் ஆர்வம் உள்ள இளைஞர்கள், அந்த ரேஸ் டிராக்கிற்குச் சென்று வண்டி ஓட்டலாம். பைக் வைத்திருக்கும் எல்லோருமே ரேஸ் டிராக்கிற்கு வந்து அதற்கான கட்டணம் செலுத்தி விட்டு, ஆசை தீர பைக்கை ஓட்டலாம். வெற்றிபெற்றால் சாம்பியன் பட்டம் கிடைக்கும். மீடியாக்களும் பெருமைப்படுத்தும். மற்றவர்கள் உயிரைப் பறித்து, ஜெயிலுக்குப் போக வேண்டிய சூழல் ஏற்படாது'' என்கிறார் எட்டு முறை தேசிய பைக் ரேஸ் சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கும், கிருஷ்ணன் ரஜினி.

சென்னை சாலைகளில் பைக் சாகசங்களில் ஈடுபட்டு வரும் மனோஜ், ''பைக் ஸ்டண்ட், ரேஸை எல்லாம் டி.வி-யில் பார்க்கிறோம், இன்டர்நெட்டில் பார்க்கிறோம். அதைப் பார்க்கும்போது எங்களுக்கும் அதுபோல ஓட்டுறதுக்கு ஆசை வருது. எங்களோட பைக் சாகசங்களைப் பார்த்து சில போலீஸ்காரங்களே ஊக்கப்படுத்தி இருக்காங்க. பப்ளிக்கை டிஸ்டர்ப் பண்ணினா, எங்க மேல கேஸ் போடலாம். மத்தபடி நாங்க ஜாலியா ரேஸ் போறதை போலீஸ் தடுக்கக் கூடாது. ரேஸ் மைதானத்தில் போய் ஓட்டுவதில் எந்த த்ரில்லும் இல்லை'' என்கிறார்.

இந்த விவகாரம் குறித்து வடக்கு மண்டல ஐ.ஜி. சைலேந்திர பாபுவிடம் பேசினோம். ''பைக் ரேஸ் தொடர்பாகப் பல புகார்கள் வருகின்றன. கிழக்குக் கடற்கரைச் சாலை, பழைய மகாபலிபுரம் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலைகளில்தான் பெரும்பாலும் இதுபோன்ற ரேஸ்கள் நடைபெறுகின்றன. பைக் ரேஸில் ஈடுபடுவது சட்டப்படி குற்றம். இது சாலையில் செல்லும் மற்றவர்களுக்குப் பய உணர்வையும், பீதியையும், விபத்தையும் விளைவிக்கும். ரேஷ் டிரைவிங் அதாவது தாறுமாறாக பைக் ஓட்டுகிறார்கள் என்று கேஸ் போட்டால், இவர்களுக்கு 500 ரூபாய் மட்டுமே அபராதம். தாறுமாறாக பைக் ஓட்டுவதோடு மற்றவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய செயலில் ஈடுபட்டால், மூன்று வருட சிறைத் தண்டனை வரை கிடைக்கும். இந்தச் சட்டத்தில் இப்போது பலரைக் கைது செய்துவருகிறோம். விரைவில், சாலையில் பைக் ரேஸ் என்கிற விஷயம் அடியோடு முடிவுக்கு வந்துவிடும்'' என்கிறார்.

த்ரில்லிங் அனுபவத்துக்காக உயிரை விடலாமா?

சார்லஸ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு