Published:Updated:

தூத்துக்குடியில் 3வது நாளாகத் தொடரும் சிபிஐ விசாரணை!

இ.கார்த்திகேயன்
தூத்துக்குடியில் 3வது நாளாகத் தொடரும் சிபிஐ விசாரணை!
தூத்துக்குடியில் 3வது நாளாகத் தொடரும் சிபிஐ விசாரணை!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ அதிகாரிகள் குழு 3-வது நாளாகத் துப்பாக்கிச்சூடு நடைபெற்ற இடங்களில் ஆய்வு செய்ததுடன் துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்ட துணைத் தாசில்தார்கள், உயிரிழந்தவர்களின் வீடுகளிலும் விசாரணையை மேற்கொண்டது.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட வலியுறுத்தி கடந்த மே 22-ம் தேதி நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இதில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இச் சம்பவம் தொடர்பாகத் தூத்துக்குடியில் உள்ள 4 காவல் நிலையங்களில் 243 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் முக்கியமான 5 வழக்குகள் மட்டும் சி.பி.சி.ஐ.டி பிரிவு விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, 5 வழக்குகளும் ஒரே வழக்காகப் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி ஏ.டி.எஸ்.பி மாரிராஜா தலைமையிலான குழுவினர் விசாரணையையும் நடத்தினர். பின்னர், 243 வழக்குகளில் சிப்காட் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட  173 வழக்குகளை ஒரே வழக்காக மாற்றப்பட்டது.

இந்த நிலையில், துப்பாக்கிச்சூடு சம்பந்தமான வழக்குகளை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநலன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதன் அடிப்படையில்,  இச்சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சி.பி.ஐ-க்கு மாற்றி கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து சி.பி.சி.ஐ.டி போலீஸார் சில நாள்களுக்கு சி.பி.ஐ-யிடம் ஆவணங்களை முன்பு ஒப்படைத்தனர். அந்த ஆவணங்களின் அடிப்படையில் முதல் கட்டமாக வியாபாரிகள் சங்கம், மீனவர்கள் சங்கம், வீராங்கணை அமைப்பு உள்ளிட்ட 20 அமைப்புகள் மீது 12 பிரிவுகளில் சி.பி.ஐ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர். 

சி.பி.ஐ சிறப்பு புலனாய்வுப் பிரிவு அதிகாரி சரவணன் தலைமையில் துணைக் கண்காணிப்பாளர் ரவி மற்றும் 4 பேர் கொண்ட குழுவினர் கடந்த 13-ம் தேதி, துப்பாக்கிச்சூடு மற்றும் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்ற எல்லைகளுக்கு உட்பட்ட தென் பாகம், வட பாகம், மத்திய பாகம் மற்றும் சிப்காட் ஆகிய காவல் நிலையங்களுக்கு நேரடியாகச் சென்று இந்தச் சம்பவம் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் பல்வேறு ஆவணங்களைப் பெற்றுக்கொண்டனர்.

இரண்டாவது நாளான நேற்று (14.10.2018) வன்முறைச் சம்பங்களில் வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகப் பகுதிகளில் ஆய்வு செய்தனர். தொடர்ந்து இந்திய உணவுக்கழக குடோன், ரவுண்டானா உள்ளிட்ட பகுதிகளிலும் ஆய்வு செய்தனர். மூன்றாம் நாளான இன்று (15.10.2018) துப்பாக்கிச்சூட்டுக்கு உத்தரவிட்ட துணைத் தாசில்தார்கள், 4 காவல் நிலையங்களின் ஆய்வாளர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த மாணவி ஸ்னோலின், கார்த்திக் ஆகியோரது வீட்டுக்குச் சென்று அவரின் பெற்றோர்கள், உறவினர்களிடமும் விசாரணை நடத்தியுள்ளனர். தொடர்ந்து இவ்வழக்கில் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை தொடரும் என சி.பி.ஐ அதிகாரிகள் குழு தெரிவித்துள்ளது.