Published:Updated:

அந்த 1,068 ஹால் டிக்கெட்டுகள்!

சூடு பிடிக்கும் டி.என்.பி.எஸ்.சி. விவகாரம்

பிரீமியம் ஸ்டோரி
##~##

ரசுப் பணியாளர் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக, மூன்றாவது முறையாக கடந்த 13-ம் தேதியும் ரெய்டு. சென்னை உட்பட 14 மாவட்டங்களில் ஒரே நாளில் 42 இடங்களில் ஊழல் தடுப்பு போலீஸார் அதிரடித் சோதனை நடத்தினார்கள். முதலில், அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் வீடுகளில் நடத்தப்பட்டது. இரண்டாவது ரெய்டு, அங்கு பணியாற்றும் முக்கிய ஊழியர்களின் வீடுகளில் நடந்தது. மூன்றாவது ரெய்டு, புரோக்கர்களைக் குறிவைத்து நடத்தப்பட்டது! 

'அந்த வேலை வாங்கித் தர்றேன், இந்த வேலையை முடிச்சுத் தர்றேன்...’ என்று எல்லா ஊர்களிலும்

அந்த 1,068 ஹால் டிக்கெட்டுகள்!

புரோக்கர்கள் இருப்பார்கள். இது டி.என்.பி.எஸ்.சி.யைப் பொறுத்தவரை ரொம்பவே அதிகம். இவர்களில் பெரும்பாலானவர்கள் தேர்வு ஆணையத்தின் உறுப்பினர்களின் உறவினர்கள்.

தேர்வு ஆணைய உறுப்பினர் கே.கே.ராஜா, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே  மலைப்பட்டியைச் சேர்ந்தவர். உசிலம்பட்டியில் உள்ள இவரின் மைத்துனரும் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரி முன்னாள் முதல்வருமான அக்கினி, ராஜாவின் அக்கா மகன் மாணிக்கம்,  சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் இருக்கும் ராஜாவின் மைத்துனர் பால்பாண்டி ஆகியோரின் வீடுகளிலும் ராஜாவின் பினாமிகள் எனக் கூறப்படும் திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அய்யப்பன், ஒப்பந்தக்காரர் வனராஜ் ஆகியோரின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

  ''மாணிக்கம், அக்கினியிடம் பணம் கொடுத்து ஏமாந்த பலரும் புகார் கொடுத்துள்ளனர். மதுரைக்கு ராஜா வரும்போதெல்லாம் தலைமை அஞ்சலகம் அருகே இருக்கும் ஒரு  ஹோட்டலில்தான் தங்குவார். அங்குள்ள கேமரா மூலம் ராஜாவைச் சந்திக்க வந்தவர் களைப்பற்றி விசாரித்தோம். அய்யப்பனும் வனராஜும் ராஜாவைத் தொடர்ந்து சந்தித்துள்ளனர். அய்யப்பன் பெயரில் பன்றிமலை அடிவாரத்தில் பண்ணை வீடு மற்றும் பல சொத்துக்களை வாங்கி யுள்ளார் ராஜா. அதேபோல, பழநி முருகன் கோயிலில் பல ஒப்பந்தங்களை வனராஜ் பெயரில் எடுத்துக் கொடுத்துள்ளார்'' என்று சொல்லும் அதிகாரி ஒருவர், அதன் தாக்கமாகத்தான் இத்தனை பெரிய தேடுதல் வேட்டை நடந்தது என்கிறார்.

ராஜாவுக்குத் தொடர்புள்ளதாகக் கூறப்படும் போட்டித் தேர்வுப் பயிற்சி மையங்களிலும், மதுரை ஆதித்யா ஐ.ஏ.எஸ். அகடமியின் உரிமையாளர் வெங் கடேஸ்வரனின் வீட்டிலும் சோதனை நடந்தது.

அந்த 1,068 ஹால் டிக்கெட்டுகள்!

தேர்வாணையத்தின் மற்றொரு உறுப்பினர் சண்முக முருகனின் மனைவி கிருஷ்ணவேணியின் பூர்வீக வீட்டிலும் சோதனை நடந்தது. காஞ்சிபுரத்தில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் சங்கரன், தேர்வு ஆணைய உதவிப் பிரிவு அலுவலர் செந்தில்குமார் வீடுகளிலும் சோதனை நடந்தது. வேலூர் மாவட்டம் ஆம்பூர் டி.எஸ்.பி. அன்புவின் வீடு மற்றும்  அலுவலகத்திலும் தேடுதல் வேட்டை நடந்தது. பள்ளி ஆசிரியராக இருந்த இவர், தேர்வு ஆணையத்தின் மூலம் சமீபத்தில்தான் டி.எஸ்.பி. பணியில் சேர்ந்தார். இவருடைய சொந்த ஊரான கரூர் மாவட்டம் ஈட்டியம்பட்டியிலும் தேடுதல் நடத்தப்பட்டது. ஆம்பூர் சோதனையில் லேப்டாப், செல்போன்கள் கைப்பற்றப்பட்டன. ''17 பேருக்கு வேலை பெற்றுத் தந்தது தொடர்பான விவரங்கள் கிடைத்துள்ளன.'' என்கிறது லஞ்ச ஒழிப்பு போலீஸ்.  

நாமக்கல்லைச் சேர்ந்த தேர்வு ஆணையத்தின் முன்னாள் ஊழியரான ராசப்பன் நடத்தும் பயிற்சி மையம் மூலம் முறைகேடு செய்வதாகப் புகார் வந்ததால், அங்கும் சோதனை நடத்தப்பட்டு, தீவிர விசாரணை நடக்கிறது.

சென்னையில் கூட்டுறவுத் துறைத் துணைப் பதிவாளரான 'டீம்’ என்ற அடைமொழியுடன் அழைக்கப்படும் முருகானந்தத்தின் எழும்பூர் வீட்டிலும் தேடுதல் நடத்தப்பட்டது. பயிற்சி மையத்தில் தீவிரமாக இருந்த இவரும், தூத்துக்குடியைச் சேர்ந்த தி.மு.க. புள்ளி ஒருவரும்  சில உறுப்பினர்களிடம் உடன்பாடு செய்துகொண்டு, பலரையும் தேர்வில் வெற்றி பெறவைத்தார்களாம்.

தேர்வு ஆணையத்தின் முன்னாள் சார்புச் செயலாளரான பிச்சையப்பா, போஸ்ட் செலக்ஷன் என்ற பிரிவில் நீண்ட காலம் பணியாற்றியவர். இவர்மீது, வேலையில் சேராமல் காலியாக இருக்கும் இடங்களை நிரப்புவதில், சில உறுப்பினர்களுக்குத் தரகராக இருந்ததாகப் புகார் இருப்பதாக போலீஸார் சொல்கிறார்கள்.

சென்னை சூளைமேடு வன்னியர் தெருவில் வசிக்கும் ஜெயராஜ் என்ற தேர்வு ஆணையத்தின் பிரிவு அலுவலர் வீட்டிலும் தேடுதல் நடந்தது. இவர், பல ஆண்டுகளாக துறைரீதியான தேர்வுகளைக் 'கவனித்து’ப் பழம் தின்று கொட்டை போட்ட வராம்.

ஒட்டுமொத்த சோதனை குறித்துப் பேசிய ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸ் அதிகாரி ஒருவர், ''ஒரே ஒரு உறுப்பினரின் தொடர்பு உடையவர்களிடம் இருந்து மட்டும் 1,068 ஹால் டிக்கெட்டுகள் கிடைத்தது. இன்னொருவர் வீட்டில் இருந்து சமீபத்தில் அரசுப் பணிக்குத் தேர்வானவர்களின் பட்டியலும் சம்பந்தம் இல்லாத ஒருவரின் தேர்வுச் சீட்டும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, ஜேசுராஜா, கே.கே.ராஜா, சண்முகமுருகன், பெருமாள்சாமி உட்பட தேர்வு ஆணையத்தின் பல உறுப்பினர்களின் சொத்து விவரங்களைப்பற்றி தீவிர விசாரணை முடுக்கி விடப்பட்டு உள்ளது. வேலைக்காகப் பணம் பெற்றதற்கான ஆதாரங்களுடன் சொத்துக் குவிப்பு ஆவணங்களும் கிடைக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட தேர்வு ஆணையத்தின் உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள். மகாராஷ்டிரா, ஹரியானா ஆகிய மாநிலங்களில், இது போல மாட்டியவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். அதே போன்ற நடவடிக்கை இங்கேயும் எடுக்கப்படலாம்'' என்கிறார்.

அப்படி ஒரு நிலைமை ஏற்படாமல் தவிர்ப்பதற்காக,  குற்றச்சாட்டில் மாட்டிக்கொண்ட உறுப்பினர்கள், அவர்களாகவே பதவி விலகவும் வாய்ப்பு உண்டு என்கிறது தேர்வு ஆணைய வட்டாரம்.

இந்த இரண்டில் ஏதாவது ஒன்று நடந்தால்தான், இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்ட 5,000 பேரின் நியமனமும், அடுத்த கட்டமாக குரூப்-2, குரூப்-4 தேர்வுகளை எழுதக் காத்திருப்பவர்களின் கனவும் நிறைவேறும்!

- நமது நிருபர்கள்

படங்கள்: பா.காளிமுத்து

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு