Published:Updated:

காதலனுக்கு பரிசு கொடுக்க சைக்கிள் திருடிய மாணவி!

டீன் ஏஜ் தீர்வுகள்

பிரீமியம் ஸ்டோரி
##~##

சம்பவம் ஒன்று: ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி பரீட்சை எழுத வரவில்லை. ஆதங்கப்பட்ட பள்ளி ஆசிரியை, பெற்றோருக்கு போன் செய்து விசாரிக்க, 'அவள் பள்ளிக்குத்தானே வந்தாள்’ என்று பெற்றோர் பதறிவிட்டனர். அன்று மாலை எந்தச் சலனமும் இல்லாமல் வீட்டுக்குத் திரும்பினாள் மாணவி. பெற்றோர் டென்ஷனாக, காதலனுடன் ஊர் சுற்றப் போனது தெரியவந்தது. 'இந்த வயதில் காதல் தேவையா?’ என்று அடியும் வசவும் கிடைத்திருக்கிறது. அன்று இரவே அந்த மாணவி தூக்கில் தொங்கி விட்டாள்.

காதலனுக்கு பரிசு கொடுக்க சைக்கிள் திருடிய மாணவி!

 சம்பவம் இரண்டு: அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாணவியின் சைக்கிள் ஒன்று காணாமல் போய்விட்டது. காவல் துறையில் பள்ளி நிர்வாகம் புகார் செய்தது. விசாரணையில், அந்தப் பள்ளியில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவி அந்த சைக்கிளைத் திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. 'காதலனுக்குப் பிறந்த நாள் பரிசு கொடுக்க பணம் இல்லாத காரணத்தால், சைக்கிளைத் திருடி விற்றேன். கிடைத்த பணத்தில் அவனுக்குப் பரிசு வாங்கிக் கொடுத்தேன்’ என்று அவள் கூறியதைக் கேட்டு, பெற்றோர், ஆசிரியைகள் மட்டும் அல்ல... காவல் துறையினரும் அதிர்ந்து விட்டனர்.

சம்பவம் மூன்று: 'காதல்’ படத்தில் வருவது போலவே, பள்ளிக்குச் செல்லும் வழியில் இருந்த மெக்கானிக் செட் பையனைப் பார்த்திருக்கிறாள், 10-ம் வகுப்பு மாணவி. தினமும் பார்த்து, பேசி, பழகி கடைசியில் ஒரு நாள், அந்தப் பையனுடன் சென்று விட்டாள்.

இது போன்று நிறைய சம்பவங்கள் நடக்கின்றன. இவை அனைத்தும் ஒரு பள்ளி ஆசிரியை நம்மிடம் வருத்தப்பட்டுப் பகிர்ந்துகொண்ட சாம்பிள்கள்தான்.

''எனக்கு ஒரு காதலன் இருக்கிறான், காதலி இருக்கிறாள்னு சொல்லிக்கிறதை பெருமையா நினைக்கிறாங்க இந்தக் காலத்துப் பசங்க. பேருந்துகளில் வரும் மாணவிகள் டிரைவர் மடியில் அமராத குறையாக இடித்துப் பிடித்து வருவதும், கண்டக்டரிடம் அளவுக்கு மீறிப் பேசிச் சிரிப்பதும், முன்பின் தெரியாதவர்களிடம் வழிவதும் அதிகரிக்கிறது. ஹோட்டல், பார்க், பீச் என்று கூப்பிட்டால்... யோசிக்காமல் போய்விடுகிறார்கள்.

பெண்கள் இப்படி என்றால்... சிகரெட், மது என்று பையன்கள் கெட்டுப் போகிறார்கள். எங்களால் முடிந்தவரை பள்ளிகளில் அறிவுரை சொல்லத்தான் செய்கிறோம். யாரோ ஒருவர் அல்லது இருவர்

காதலனுக்கு பரிசு கொடுக்க சைக்கிள் திருடிய மாணவி!

தவறு செய்தால் தனியே கூப்பிட்டுக் கண்டிக்கவோ, விளக்கவோ முடியும். ஆனால், இப்படிப்பட்ட மாணவ, மாணவியரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வருகிறது. யாரோ பெத்த பிள்ளைதானேன்னு ஒதுங்கவும் முடியலை'' என்று ஆதங்கப்பட்டார் அந்த ஆசிரியை.

இன்றைய மாணவர்களின் மனநிலை ஏன் மாறிப்போனது? மனோதத்துவ நிபுணர் அசோகனிடம் பேசினோம். ''மீடியா, இணையம், மொபைல் போன்ற தகவல் தொடர்புச் சாதனங்கள் இந்தத் தலைமுறையினருக்கு எளிதில் கிடைக்கிறது. 25 வயதில் தெரிய வேண்டியது எல்லாம், 15 வயதிலேயே தெரிந்து விடுகிறது. முன்பு, ஒரு பெண்ணிடம் காதல் கடிதம் கொடுப்பது மிகவும் கஷ்டம். ஆனால் இப்போது ஒரு எஸ்.எம்.எஸ். போதும்.

முன்பு இளம் வயசுப் பசங்க தம் அடிக்கணும்னா, ஊருக்கு ஒதுக்குப்புறமாப் போகணும். அந்த அளவுக்கு சமூகத்துக்கும் வீட்டுக்கும் பயப்படுவாங்க. ஆனா,

காதலனுக்கு பரிசு கொடுக்க சைக்கிள் திருடிய மாணவி!

இப்ப டாஸ்மாக் கடையில போய் குடிக்கக்கூடத் தயங்க மாட்டேங்கிறாங்க. டீன் ஏஜ் வயதில் பலதரப்பட்ட விஷயங்களுக்கும் மனம் ஏங்கும். அதுவரை பெற்றோர் சொல் பேச்சு கேட்டு வந்தவங்க, இப்போ அவங்க ஏதாவது அட்வைஸ் பன்ணினாலே, எரிச்சல் அடைவாங்க. பெற்றோரை எதிர்த்துப் பேசுவாங்க. இதற்கு, பசங்களை மட்டுமே தப்பு சொல்ல முடியாது. பிள்ளைகள் முன்னாடி பெற்றோர் சண்டை போடுவது, வேலையில் மட்டுமே கவனம் செலுத்துவது, பணத்தைத் தேடி ஓடிக்கொண்டே இருப்பது தவறு. பள்ளியில் தனது பிள்ளைகள் நல்ல மார்க் எடுக்கவேண்டும் என்பதுதான் பெற்றோரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அதைத் தாண்டி தன் குழந்தைக்கு என்ன திறமை இருக்கிறது, அதில் எப்படி முன்னேற்றுவது என்று, நிறைய பெற்றோர் யோசிப்பது இல்லை.  

பள்ளிக்கு ஒழுங்காக சென்று வருகிறார்களா, யாருடன் நட்புடன் இருக்காங்கன்னு தங்களது குழந்தைகள் குறித்து பெற்றோருக்கு நல்லாத் தெரியணும். அதுக்காக அவங்க பின்னாடியே போக வேண்டியது இல்லை. உங்க குழந்தைகளிடம் ஒரு நண்பனாப் பழகுங்க. கண்டிப்பு காட்டாமல், அவங் களுக்கு நல்லது கெட்டதை எடுத்துச் சொல்லிப் புரிய வைங்க. மாதம் ஒரு முறை பள்ளிக்குச் சென்று ஆசிரியரைப் பார்த்து வரலாம். குடும்பத்தில் எல்லோரும் சேர்ந்து கோயில், பீச், பார்க்னு போகலாம். வீட்டில் எல்லோருடனும் அரசியல், சினிமானு எல்லா விஷயங்களையும் பேசலாம். குடும்பத்தில் எல்லோரும் நண்பர்களாகப் பழகினால், தவறான பாதையில் மாணவர்கள் செல்ல மாட்டார்கள்.

முக்கியமாக, பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகளுக்கு செல்போன் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. பசங்க மட்டும் அல்ல... பெற்றோர், ஆசிரியர்கள், சமூகம் என அனை வருக்கும் இந்தப் பொறுப்பு இருக்கிறது. எல்லோரும் இணைந்து செயல்பட்டால்தான், குழந்தைகளை நல்வழிப்படுத்த முடியும்'' என்றார்.  

எதிர்காலச் சந்ததியை வளர்க்கும் பொறுப்பு... நம் எல்லோருக்கும் உள்ளது!    

- பானுமதி அருணாசலம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு