Published:Updated:

''வெறி பிடித்த அரசியல்வாதி இனி யாரும் வேண்டாம்!''

வெடிக்கிறார் பாரதிராஜா

பிரீமியம் ஸ்டோரி
##~##

டந்த 5-ம் தேதி கொச்சினில் மலையாள சினிமா உலகினர் ஒன்றுகூடி, முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் 'அணையை உடைப்போம்...’ என்று குரல் எழுப்பினார்கள். அதில் மம்முட்டி, மோகன்லால், சுரேஷ்கோபி, திலீப், முகேஷ் போன்ற நடிகர்களும் கமல், உன்னிகிருஷ்ணன் போன்ற டைரக்டர்களும் அடக்கம். தமிழ் சினிமா மட்டும் இன்னும் அமைதி காக்கும் சூழலில், இயக்குனர் பாரதிராஜாவின் குரல் ஓங்கி ஒலிக்கிறது. 

''இன்று, முல்லைப் பெரியாறு பிரச்னை அந்த அணையைக் காட்டிலும் பிரமாண்டமாக எழுந்து தமிழனை மிரட்டுகிறது. நேற்று வரை சகோதரனாக இருந்த மலையாளி, இன்று சண்டையாளி. இரண்டு மாநில மக்களையும் சமாதானப்படுத்த வேண்டிய மத்திய அரசு, கை கட்டி வேடிக்கை பார்க்கிறது. மாநில அரசுகளை மோத விட்டு ஓரமாய் உட்கார்ந்து ரசிக்கிறது.

''வெறி பிடித்த அரசியல்வாதி இனி யாரும் வேண்டாம்!''

இப்போது கேரளாவில் ஆட்சி செய்வது மைனா ரிட்டி அரசு. அங்கே ஒரு தொகுதிக்கு இடைத்தேர்தல் வரப்போகிறது. அந்தத் தேர்தலில் ஆளும் கட்சி வெற்றிபெற வேண்டும் என்ற குறுகிய நோக்கத்துக்காக, அரசியல் ஆதாயத்துக்காக, தமிழக - கேரள அப்பாவி மக்களைப் பயன்படுத்துகிறார்கள்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு தலை வணங்குவது தானே, இறையாண்மை. கேரளாவில் மத்திய அரசின் எண்ணத்துக்கு முரண்பட்ட மாநிலக் கட்சி ஏதாவது ஆட்சியில் இருந்தால், சும்மா இருப்பார் களா? சினங்கொண்டு சீறி எழுந்து 356-வது சட் டத்தைப் பயன்படுத்தி இந்நேரம் ஆட்சியைக் கலைத்து இருக்க மாட்டார்களா?

'ஈழத்தில் தமிழர்களை படுகொலை செய்கிறார்கள், காப்பாற்றுங்கள்...’ என்று அபயக் குரல் கொடுத்தால் அது 'இந்திய இறையாண்மைக்கு எதிரானது’ என்று சொல்லி தமிழரைக் கைது செய்கிறார்கள். ஆனால் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல், நீதிமன்ற அவமதிப்பு செய்யும் கேரளாவை மத்திய அரசு தட்டிக் கேட்காமல், தட்டிக்கொடுத்துப் பாராட்டுவது எந்த வகை நியாயம்?

''வெறி பிடித்த அரசியல்வாதி இனி யாரும் வேண்டாம்!''

உங்கள் தேசிய இறையாண்மையை தமிழன் தலையில் மட்டும் சுமத்தாதே. கண்டுகொள்ளவில்லை கர்நாடகா. கேவலமாகப் பார்க்கிறது கேரளா. மத்திய அரசே,  முதலில் தேசியத்துக்கான வரை யறையை வரையறுத்துக் கொடு. 'முல்லைப் பெரி யாறு அணையை உடைப்பேன்...’ என்று வெறித் தாண்டவம் ஆடும் மலையாளி பேசுவது தேசியமா? 'அணையை உடைக்காமல் காப்போம்’ என்று முழங்குகிற தமிழன் பேசுவது தேசியமா?

எப்போதுமே மத்திய அரசுக்கு தமிழர்களைப் பிடிக்காது என்பதுதான் நிதர்சனமான உண்மை. சிங்களவனை ஏவிவிட்டு லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்களைப் படுகொலை செய்தது. இப்போது முல்லைப் பெரியாறு பிரச்னையில், மலை யாளியை ஏவிவிட்டு தமிழ்நாட்டுத் தமிழர்களைக் வதைத்து வருகிறது.

இன்றைய சூழ்நிலையில் தமிழ்நாட்டில், தமிழனுக் காக 40 சதவிகிதம் தமிழர்கள்கூட போராட வரவில்லை என்பது வேதனையான உண்மை. எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு பாரதிராஜா இதுவரை மௌனியாக இருந்தான். இப்போதுதான் மனசு தாங்க முடியாமல் வாய் திறக்கிறான்.

கறுப்புப் பணம், ஊழல்வாதிகளுக்கு எதிராக தலைநகரில் அண்ணா ஹஜாரே உண்ணாவிரதம் இருந் தார். இங்கே தமிழ் சினிமாவில் கக்கத்தில் கறுப்புப் பணம் வைத்திருக்கும் ஒரு கலைஞன், விமானம் ஏறி டெல்லி சென்று, ஹஜாரே போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார். ஏன் இங்கே தேனியில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு துடிக்கும் தமிழன் அவரது கண்ணுக்குத் தெரியவில்லையா? அந்த நடிகனுக்குத் தேனி செல்லும் வழிதான் தெரியாதா?

'காவிரி நீர் பிரச்னை, ஈழத் தமிழர் போராட்டத்தில் பங்கேற்ற நீங்கள் ஏன் முல்லைப் பெரியாறு விஷயத்தில் மௌனம் சாதிக்கிறீர்கள்?’ என்று கேட் கிறார்கள்.

கடந்த காலங்களில் என் இதயத்தில் ஏற்பட்ட ரணம்... வலி இன்னும் ஆறவே இல்லை. இதே பாரதிராஜா காவிரி நதிநீர்ப் பிரச்னைக்காக, தமிழ்த் திரையுலகையே ஒன்று திரட்டி நெய்வேலியில் மாபெரும் போராட்டம் நடத்தினான். அங்கே 'கட்சிக் கொடி, சாதி இன வேறுபாடு இல்லாமல் சாதாரண பொதுத் தமிழனாக அனைவரும் கலந்துகொள்ள வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தேன். திரையுலகமே திரண்டது. அப்போது காவிரிப் பிரச்னையைக் கண்டுகொள்ளாமல் தன்னை முன்னிலைப்படுத்தி, தனது மன்றக் கொடியை திடீரென்று பறக்கவிட்டார், அந்த இடத்திலும் பதவிக்கு ஆசைப்பட்ட ஒரு கலைஞன். அரசியல் தலைவராக அங்கே உருவானார்.  

கொத்துக் கொத்தாய் ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்தான் ராஜபக்ஷே. கோபம்கொண்டு கொதித்து எழுந்தேன். தமிழ்த் திரையுலகையே ராமேஸ்வரத்தில் கூட்டி எதிர்ப்பைக் காண்பித் தேன். கண்ணீரும் ரத்தமும் இழந்து நின்ற ஈழத் தமிழரின் துயரத்தைத் தனது சுயநலத்துக்காகப் பயன்படுத்திக்கொள்ளத் திட்டமிட்டார் நாற்காலி வெறி பிடித்த ஒரு டைரக்டர், அரசியல்வாதியாக ஆகிப்போனார்.  

இப்போது முல்லைப் பெரியாறு பிரச்னையில் திரையுலகை அழைத்து வந்து போராட்டம் நடத்தப்போய், அங்கேயும் ஒரு நாற்காலி வெறி பிடித்த அரசியல்வாதி உருவாக நிச்சயம் நான் காரணமாக இருக்க மாட்டேன். நான் தமிழ் மண்ணுக்குப் பொதுவானவன். தேனி மக்களுக்குச் சொந்தமானவன். என் மண்ணின் மக்கள் அடிவயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு அலை கிறார்கள்.

தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் அனைவரும் என்மீது பாசம் கொண்டவர்கள். நானும் அவர்கள் மீது அன்புகொண்டவன். தமிழ்நாட்டில் எந்த அரசியல் தலைவன் தனது கட்சிக்கொடி, கரை வேட்டி, தொண்டனைத் தவிர்த்து... மக்களோடு மக்களாக நின்று முல்லைப் பெரியாறு பிரச்னைக்குப் போராடுகிறாரோ, அவர் பின்னால் நிச்சயமாக இந்த பாரதிராஜா நிற்பான்!''

- எம்.குணா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு