Published:Updated:

`தந்தையின் செல்போனில் தவறான படங்கள்!’- கண்டுபிடித்த சிறுமிக்கு 14 வயதுச் சிறுவனால் நேர்ந்த கொடுமை

போலீஸார் விசாரணை
போலீஸார் விசாரணை

அந்த வீடியோ பார்த்துக்கொண்டிருக்கும் போது, இச்சிறுமி பார்த்திருக்கிறாள். அவளை, அருகில் அழைத்து அவளிடம் தவறாக நடக்க முயற்சி செய்திருக்கிறான்.

திருச்சியில் சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு கொடுக்க முயன்ற சிறுவனைக் காவல்துறை கைது செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அச்சிறுவனிடம் போலீஸார் விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்களும் வெளிவந்திருக்கின்றன.

சம்பவ இடத்தில் போலீஸார்
சம்பவ இடத்தில் போலீஸார்

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கிருஷ்ண சமுத்திரம் கிராமத்தைச்சேர்ந்தவர் ராஜாங்கம். இவர் கட்டட வேலை செய்துவருகிறார். இவரது மனைவி லலிதா இவர்களின் மூன்றாவது மகள் திவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அருகே உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில் இரண்டு நாள்களுக்கு முன்பு வீட்டின் அருகில் உள்ள மல்லிகைப் பூ தோட்டத்தில் திவ்யா ரத்தவெள்ளத்தில் கிடந்தார். இதனைப்பார்த்ததும் பதறிப்போன அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் மண்டை ஓடு உடையும் அளவிற்குக் திவ்யாவின் தலையின் பின்புறம் கல்லால் ஐந்தாறு முறை தாக்கியிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அந்தச் சிறுமி உயிரிழந்தார்.

இதுகுறித்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம். ``இன்றைய தலைமுறையை செல்போனும், இன்டர்நெட்டும் எந்த அளவிற்குச் சீரழித்துக்கொண்டிருக்கிறது என்பதற்கு இச்சம்பவமே சாட்சி. சிறுமி இறந்துகிடந்த இடத்திலிருந்து கைப்பற்றப்பட்ட ரத்தக்கரை படிந்த சட்டை, பேன்ட் ஆகியவற்றை வைத்து சந்தேகத்தின் பெயரில் ராஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்கிற 14 வயதுச் சிறுவனை அழைத்து விசாரணை நடத்தினோம்.

சிறுமி
சிறுமி

அவன் முன்னுக்குப் பின் தகவலைச் சொன்னான். அதன் பிறகு அச்சிறுவனைக் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தபோது திடுக்கிடும் தகவலைச் சொல்லத் தொடங்கினான். அவனது அப்பாவின் செல்போன் மூலமாகத் தவறான படங்கள் மற்றும் வீடியோக்களைப் பார்த்துப் பழகிய சிறுவன், சம்பவத்தன்று அந்த வீடியோ பார்த்துக்கொண்டிருக்கும் போது, இச்சிறுமி பார்த்திருக்கிறாள். அவளை, அருகில் அழைத்து அவளிடம் தவறாக நடக்க முயற்சி செய்திருக்கிறான். இதனால் கோபமடைந்த சிறுமி சத்தம் போட்டுக்கொண்டே வீட்டிற்கு ஓடத் தொடங்கினாள். வீட்டிற்குத் தெரிந்தால் பிரச்னையாகி விடும் என்ற பயத்தில் அருகில் கிடந்த கல்லை எடுத்து சிறுமியின் தலையில் ஐந்தாறு முறை அடித்துவிட்டு ஓடிவிட்டான்.

போலீஸார் விசாரணை
போலீஸார் விசாரணை

சிறுமி ரத்த வெள்ளத்தில் கிடந்ததைப் பார்த்ததும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மருத்துவமனையில் அனுமதித்ததோடு எங்களுக்கும் புகார் அளித்தார்கள். அதன் பேரில் விசாரணை நடத்தி இச்சிறுவனை போஸ்கோ சட்டத்தில் கைது செய்தோம். மேலும், கொலை வழக்குப் பதிவு செய்து சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்திருக்கிறோம்’’ என்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு