மெக்சிகோவின் அதிகாரபூர்வ மொழி ஸ்பானிஷ். இது அங்கு 90 சதவிகித மக்களால் பேசப்படுகிறது. இது தவிர பல பழங்குடி மக்கள் பேசும் 200-க்கும் மேற்பட்ட பூர்வீக மொழிகள் வழக்கில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், மெக்சிகோவின் (Queretaro) குரேடாரோ-வில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் ஜுவான் ஜமோரானோ(Juan Zamorano) எனும் 14 வயது பழங்குடி மாணவர் படித்துவந்திருக்கிறார். அவர் எப்போதும் பள்ளியில் தன்னுடைய பூர்வீக மொழியான ஓட்டோமி-யில் பேசுவதைத் தவிர்த்துவந்ததாகச் சொல்லப்படுகிறது. எப்போதேனும் அவர் தன்னுடைய தாய்மொழியில் பேசினால் அதற்காக அவர் கேலி, துன்புறுத்தல் மற்றும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு வந்திருக்கிறார். இது தொடர்ந்து நடந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த மாதம் ஜுவான் ஜமோரானோ வகுப்பிலிருந்தபோது இரண்டு மாணவர்கள் அவர் கால்சட்டைமீது மதுவை ஊற்றியிருக்கின்றனர். அவர் ஈரமானதை உணர்ந்து எழுந்து நின்றபோது, அவர்மீது தீ வைத்திருக்கின்றனர். உடலில் தீப்பற்றி அலறி துடித்த அந்த மாணவனை ஆசிரியர்கள் விரைந்துவந்து மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். 50 சதவிகித தீக்காயங்களுடன் கடந்த சில தினங்களாக சிகிச்சை பெற்றுவந்த மாணவன் ஜுவான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தச் சம்பவம் தற்போது மெக்சிகோ-வில் பரபரப்பாகப் பேசப்பட்டுவருகிறது. இது சம்பந்தமாக ஜூவானின் பெற்றோர், ``ஒட்டோமி மொழியில் பேசியதால் ஜூவான் பலமுறை ஆசிரியர்களாலேயே துன்புறுத்தப்பட்டிருக்கிறான். ஒருகட்டத்தில் என் மகன் எங்கள் இனத்தையே வெறுக்கத் தொடங்கியிருந்தான். அந்த அளவுக்கு அவன் துன்புறுத்தப்பட்டிருந்தான்" எனக் கூறியிருக்கின்றனர்.
குரேடாரோ (Queretaro) மாநில வழக்கறிஞர்கள் போலீஸார் தாக்குதல் குறித்து விசாரணையை தீவிரப்படுத்தி, குற்றம்சாட்டப்பட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருக்கின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மெக்சிகோ ஜனாதிபதி ஆண்ட்ரெஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர் (President Andres Manuel Lopez Obrador), ``இந்த வழக்கு தொடர்பாக விசாரணை முடுக்கிவிடப்பட்டிருக்கிறது. தேவைப்பட்டால், நாட்டின் அட்டர்னி ஜெனரல் அலுவலகம் இந்த வழக்கைக் கையாளலாம்" எனத் தெரிவித்திருக்கிறார்.
கடந்த மார்ச் மாதம் ஒரு ஓட்டோமி பெண் மெக்சிகோ சிட்டியில் உள்ள ஓர் உணவகத்தின் கழிப்பறையைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையானது என்பது குறிப்பிடத்தக்கது.