Published:Updated:

போதை மருந்துக்காக தொடர் தாக்குதல்... அச்சத்தில் காஞ்சிபுரம் மெடிக்கல் ஷாப் ஊழியர்கள்!

போதை மருந்துக்காக தொடர் தாக்குதல்... அச்சத்தில் காஞ்சிபுரம் மெடிக்கல் ஷாப் ஊழியர்கள்!
போதை மருந்துக்காக தொடர் தாக்குதல்... அச்சத்தில் காஞ்சிபுரம் மெடிக்கல் ஷாப் ஊழியர்கள்!

போதைக்காக மருந்து பொருள்களை பயன்படுத்தும் இளைஞர்கள் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகரித்து வருகின்றனர். இதனால் ஆட்கள் நடமாட்டம் குறைந்த மருந்துக் கடைகளில் கொலை மிரட்டல் விடுத்து மருந்துகளை கொள்ளையடிக்கும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் சரவணன் என்பவருக்குச் சொந்தமான மருந்துக் கடை உள்ளது. நேற்று மாலை 5 மணியளவில் மருந்துக் கடைக்கு வந்த இரண்டு இளைஞர்கள் அங்கிருந்த ஊழியர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி ஒரு குறிப்பிட்ட மருந்துகளைக் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். மருந்துச் சீட்டு இருந்தால்தான் மருந்து கொடுப்போம் என ஊழியர்கள் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள் கையில் கொண்டுவந்த கத்தியைக் காட்டி தகராறு செய்தனர். அங்கிருந்த பொருள்களையும் அடித்து சேதம் செய்தனர். இதைக் கண்டு மருந்துக் கடை ஊழியர்கள் சத்தம் போட்டனர். உடனே அருகில் இருந்த பொதுமக்களும் பாதுகாப்புப் பணியில் இருந்த மணிமங்கலம் காவலர்களும் ஓடிவந்தனர். இதைக் கண்டதும் அந்த இளைஞர்கள் தப்பியோடினார்கள். பொதுமக்கள் துரத்திச் சென்று ஒருவரை மடக்கிப்பிடித்து அங்கேயே சரமாரியாக அடித்தனர். பின்பு அந்த இளைஞரை விசாரணைக்காக மணிமங்கலம் காவல் துறையினர் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

காவல்துறையிடம் சிக்கிய படப்பை, கரசங்கால் பகுதியைச் சேர்ந்த அமானுல்லா ஒரு வாரமாக அந்த மருந்துக் கடையில் ஒரு குறிப்பிட்ட மாத்திரையைக் கேட்டு மிரட்டி வந்திருக்கிறார். கடைக்காரர்கள் அந்த மாத்திரைகளை கொடுக்க மறுத்ததால் தனது நண்பருடன் வந்து கத்தியைக் காட்டி மிரட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், அமானுல்லா தனது நண்பர்களான அருண், முரளி, சரவணன், சீனுவாசன் ஆகியோருடன் கடந்த 16-ம் தேதி மருந்துக் கடை உரிமையாளர் சரவணனை கத்தியைக் காட்டி மிரட்டி வந்துள்ளனர். மேற்கண்ட ஐந்து நபர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து மணிமங்கலம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களில் தொடர்ச்சியாக இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருவது மருந்துக் கடைக்காரர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.