Published:Updated:

தூத்துக்குடியில் தொடரும் ரவுடி கொலைகள்!

தூத்துக்குடியில் தொடரும் ரவுடி கொலைகள்!
தூத்துக்குடியில் தொடரும் ரவுடி கொலைகள்!

தூத்துக்குடி: கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தூத்துக்குடியில் நடந்த மாவட்ட தி.மு.க துணைச்செயலாளர் ஏ.சி.அருணா கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி கொலை செய்யப்பட்டார்.

சாதாரண விஷயத்துக்கெல்லாம் கொலை சம்பவம் நடந்துவிடுவது தூத்துக்குடியில் சகஜமாகவே இருந்து வருகிறது. உடம்பில் சேர்ந்தே இருக்கும் புண் எப்போதுமே வலியை ஏற்படுத்தி வருவதுபோல், தூத்துக்குடியில் ஒழிக்கப்படாமல் இருந்துவரும் ரவுடித்தனம் இதுபோன்ற கொலை சம்பவத்தை ஏற்படுத்தி கொண்டே இருக்கிறது.

தூத்துக்குடியில் தொடரும் ரவுடி கொலைகள்!

தூத்துக்குடி, காந்தி சிலை அருகேயுள்ள தனது சைக்கிள் ஸ்டேண்ட் அருகில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்த ரமேஷ் கண்ணன் என்ற ரவுடியை சில மர்ம நபர்கள் இன்று அதிகாலை வெட்டிக்கொலை செய்திருக்கின்றனர். இவர் தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக தூத்துக்குடி வடபாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து போலீஸார் சிலரிடம் பேசினோம், ‘‘கடந்த பல வருடங்களாக ஹென்சி என்கிற ரவுடி கோஷ்டி மட்டுமே தூத்துக்குடியையே ஆட்டிப்படைத்து வந்தன. தூத்துக்குடி நகராட்சியில் சைக்கிள் ஸ்டேண்ட், கழிவறை, பஸ்ஸ்டாண்ட் கடைகள் என எல்லாவற்றிலும் ஆளுகையை நிலை நிறுத்தி வந்த அந்த கோஷ்டி, ஒரு கட்டத்தில் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் ஹென்சி, அசோகன், ஜான் என மூன்று கோஷ்டியாக பிரிந்துவிட்டது.

இதில் ஜான் கொலை செய்யப்பட, அவருடைய தம்பி மனோகரன் அந்த கோஷ்டிக்கு தலைமை தாங்கி நடத்தி வருகிறார். இந்த ரவுடி கோஷ்டியில் அசோகன் கோஷ்டி கொஞ்சம் கூடுதல் செல்வாக்கோடு இருந்து வருகிறது. ஆளும் கட்சியாக யார் வந்தாலும் அவர்களை வளைத்துப்போடும் அவர்கள், எந்த காண்ட்ராக்ட்டையும் வேறு யாருக்கும் விடுவதில்லை. டெண்டர் எடுக்க வேறு யாருமே மாநகராட்சி அலுவலத்துக்குள் நுழைந்துவிட முடியாது. அந்த அளவிற்கு கடுமையாக அவர்கள் கர்ஜிக்க, விட்டால் போதும் என ஆளும் கட்சி வி.ஐ.பி.க்கள் ஓட்டம் பிடித்து விடுகிறார்கள். அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு தெரிந்தாலும் இவர்களின் ஆதிக்கத்தை தடுத்துவிட முடிவதில்லை.

##~~##
இந்தநிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், ‘‘இந்த இரு கோஷ்டிகளுக்கும் இந்த தடவை சைக்கிள் ஸ்டேண்ட்டை கொடுக்க வேண்டாம்’' என வாதிட்டு வந்த தூத்துக்குடி மாவட்ட தி.மு.க துணைசெயலாளரான ஏ.சி.அருணா படுகொலை செய்யப்பட்டார். அந்த கொலை வழக்கில் தொடர்புடைய ரமேஷ்கண்ணன்தான் இப்போது கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
அசோகன் ஆதரவாளரான ரமேஷ்கண்ணன் காந்திசிலை அருகிலுள்ள கழிவறையை கவனித்து வருகிறார். அந்த கழிவறை இதுக்கு முன்பு மனோகரனிடம் இருந்திருக்கிறது. சமீபத்தில்தான் அது ரமேஷ்கண்ணன் வசம் வந்திருக்கிறது. கழிவறை கைமாறி போனதை கவுரவ குறைவாக நினைத்த மனோகரன் ஆதரவாளர்கள் ரமேஷ்கண்ணனிடம் வந்து பேசியிருக்கிறார்கள். அவர்களுக்குள் தகராறு வந்திருக்கிறது. உடனே கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இப்போது அவர்களை தேடிக் கொண்டிருக்கிறோம்’’ என்றனர்.  
சரவெடியின் ஒரு முனையில் தீயை பற்ற வைத்தால், மறு முனை வரையிலும் வெடித்து முடிவதுபோல், தூத்துக்குடியில் ஒரு கொலை சம்பவம் நடந்ததால், தொடர்ந்து பல சம்பவங்கள் நடப்பது வழக்கமாக இருந்து வருகிறது. நிலைமையை கருத்தில் கொண்டு அதிகாரிகள் செயல்பட்டால் தேவையில்லாத பதற்றத்தை தவிர்க்கலாம்!
-எஸ்.சரவணப்பெருமாள்
படம்:
ஏ.சிதம்பரம்