Published:Updated:

மது குடிக்கப் பணம் தராத தாய்க்கு நிகழ்ந்த கொடூரம் - நாகர்கோவில் அருகே பரபரப்பு

மது குடிக்கப் பணம் தராத தாய்க்கு நிகழ்ந்த கொடூரம் - நாகர்கோவில் அருகே பரபரப்பு
மது குடிக்கப் பணம் தராத தாய்க்கு நிகழ்ந்த கொடூரம் - நாகர்கோவில் அருகே பரபரப்பு

நாகர்கோவில் அருகே மது குடிக்கப் பணம் கொடுக்க மறுத்த தாயை கம்பியால் அடித்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்த மகனை  காவல்துறையினர் கைது செய்தனர்.


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகுவிளைப் பகுதியைச் சேர்ந்தவர் தங்கம் (62). இவரது கணவர் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டார். இதனால் வயற்காட்டில் கூலி வேலை செய்து தனது இரண்டு மகன்களையும் வளர்த்து ஆளாக்கினார். இவரின் இரண்டாவது மகன் குமார் (37) மது போதைக்கு அடிமையாகியுள்ளார். கூலி வேலை செய்து வந்த குமாரின் மதுப் பழக்கத்தால் அவரின் மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்றுவிட்டார். தங்கம் தனது மூத்த மகனின் வீடு அருகே தனி வீட்டில் வசித்து வந்தார். மூத்தமகன் தாய் தங்கத்தை கவனித்து வந்தார். இரண்டாவது மகன் குமார் அடிக்கடி மது குடிக்க பணம் கேட்டு தாயிடம் தகராறு செய்வது வழக்கம். இந்த நிலையில், இன்று மது அருந்துவதற்காக தாயிடம்  பணம் கேட்டுள்ளார். தாய் பணம் கொடுக்க மறுத்ததால், ஆத்திரம் அடைந்த குமார் அருகில் இருந்த கம்பியால் அவரது தலையில் தாக்கியுள்ளார்.

கீழே விழுந்த தாய் தங்கத்தை அரிவாளால் வெட்டியுள்ளார். பின்னர் அருகில் உள்ள சகோதரன் வீட்டில் சென்று தாய் கீழே விழுந்துள்ளதாக கூறி நாடகமாடியுள்ளார். அவர்கள் வந்து பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் தங்கம் கீழே கிடந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தங்கத்தை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறினர். தங்கத்தின் அருகில் அரிவாள் இருப்பதைப் பார்த்து சந்தேகமடைந்த அவரது உறவினர்கள் வடசேரி காவல்நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர்.

போலீஸார் சம்பவ இடத்தில் வந்து விசாரணை நடத்தி, தாயைக் கொன்ற மகன் குமாரை கைது செய்தனர். மது குடிக்க பணம் கேட்டு கொடுக்காததால் பெற்ற தாயை மகனே கம்பியால் அடித்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.