சிறுமி பலாத்காரம்: போராட்டம் நடத்திய பெண் மீது போலீஸ் தாக்கியதற்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்


புதுடெல்லி: டெல்லியில் 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து போராட்டம் நடத்திய பெண் ஒருவர் மீது, டெல்லி போலீஸ் அதிகாரி கன்னத்தில் அறைந்து தாக்கியதற்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் பாலியல் பலாத்கார நிகழ்வுகள் தொடர் கதையாகி வரும் நிலையில், கடந்தவாரம் அண்டை வீட்டு நபரால் 4 நாட்கள் அடைத்து வைத்து 5 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பாதிக்கப்பட்ட சிறுமி அனுமதிக்கப்பட்ட

மருத்துவமனைக்கு வெளியே போராட்டம் நடைபெற்றது. அப்போது கணடன முழக்கம் எழுப்பிய இளம்பெண் ஒருவரை அங்கு பணியில் இருந்த போலீஸ் உதவி கமிஷனர் அகலாவாத் சரமாரியாக கன்னத்தில் அறைந்தார்.
இதனை தொலைக்காட்சிகள் படம்பிடித்து ஒளிபரப்பியதை தொடர்ந்து தேசிய மகளிர் ஆணையம் இதில் தலையிட்டது. இதனையடுத்து அந்த அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் காவல்துறையின் இந்த அத்துமீறலுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, குறிப்பிட்ட அந்த இளம்பெண் ஏன் தாக்கப்பட்டார்? என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு டெல்லி போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட்டது.
மேலும் அலிகாரில் 65 வயது பெண் ஒருவர் போலீசாரால் தாக்கப்பட்டது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு உத்தரப்பிரதேச தலைமைச் செயலருக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.