Published:Updated:

`வீடு வேண்டுமானால் லஞ்சம் கொடு!'- ஊராட்சி செயலரின் அடாவடியால் பறிபோன பெண்ணின் உயிர்

`வீடு வேண்டுமானால் லஞ்சம் கொடு!'- ஊராட்சி செயலரின் அடாவடியால் பறிபோன பெண்ணின் உயிர்
`வீடு வேண்டுமானால் லஞ்சம் கொடு!'- ஊராட்சி செயலரின் அடாவடியால் பறிபோன பெண்ணின் உயிர்

‘பிரதமரின் அனைவருக்கும் வீடு’ திட்டத்தில் வீடு கேட்டு போராடிவந்த பெண் தன்னுடைய குடிசை வீட்டின் மண்சுவர் இடிந்து விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.

வேலூர் மாவட்டம், ஆற்காடு கத்தியவாடி தென்காலனியைச் சேர்ந்தவர் சின்னவேல். இவரின் மனைவி குப்பு என்கிற குப்பம்மாள் (55). இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். மண்சுவர் எழுப்பிய கூரை வீட்டில் வசிக்கும் இவர்கள், கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். வீடு மிகவும் சேதமடைந்திருந்ததால், ‘பிரதமரின் அனைவருக்கும் வீடு’ வழங்கும் (ஆவாஸ் யோஜானா) திட்டத்தில் வீடு கட்டிக்கொடுக்க கத்தியவாடி ஊராட்சி அலுவலகத்தில் குப்பம்மாள் விண்ணப்பித்திருந்தார்.

இந்த மனுவைப் பரிசீலனை செய்த ஊராட்சி செயலர் `கமிஷன்’ கேட்டதாகக் கூறப்படுகிறது. ‘தன்னிடம் பணம் இல்லை’ என குப்பம்மாள் கூறியுள்ளார். இதனால் ஊராட்சி செயலரும் வீடு வழங்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. வீடு கேட்டு குப்பம்மாள் தொடர்ந்து போராடி வந்துள்ளார்.

இந்த நிலையில், இன்று காலை வீட்டின் பக்கவாட்டு மண்சுவர் இடிந்து விழுந்ததில் குப்பம்மாள் தலை மற்றும் முகத்தில் பலத்தகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுபற்றி தகவலறிந்த ஆற்காடு டவுன் போலீஸார் விரைந்துவந்து உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ‘ஊராட்சி நிர்வாகம் வீடு கட்டி கொடுத்திருந்தால் ஓர் உயிர் பறிபோயிருக்காது.இன்னும் எத்தனை பேர் சாகப்போகிறோமோ’ என்று அப்பகுதிமக்கள் வேதனையோடு தெரிவித்தனர்.