Published:Updated:

`சீட்டுப் பணம் ஒரு கோடியைத் தர முடியாது!’ - மிரட்டிய இளைஞர்; க‌லெக்டரிடம் முறையிட்ட கிராம மக்கள்

`சீட்டுப் பணம் ஒரு கோடியைத் தர முடியாது!’ - மிரட்டிய இளைஞர்; க‌லெக்டரிடம் முறையிட்ட கிராம மக்கள்
`சீட்டுப் பணம் ஒரு கோடியைத் தர முடியாது!’ - மிரட்டிய இளைஞர்; க‌லெக்டரிடம் முறையிட்ட கிராம மக்கள்

‘ஒரு கோடி ரூபாய் சீட்டுப் பணத்தைக் கொடுக்க முடியாது. உங்களால் முடிந்ததைப் பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று மோசடி செய்த வாலிபர் மிரட்டியதாகக் கலெக்டரிடம் ஏமாற்றப்பட்டோர் புகார் அளித்தனர்.

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் இன்று நடைபெற்றது. கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள் பலர் கோரிக்கைகள் மற்றும் புகார் தொடர்பான மனுக்களைக் கொடுத்தனர். வாலாஜா சீக்கராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த சிலர் கொடுத்த மனுவில், ‘‘எங்கள் பகுதியில் வசிக்கும் சாதிக்பாஷா என்பவர் அவரின் பெயரிலேயே சீட்டுக் கம்பெனி நடத்தினார். 50-க்கும் மேற்பட்டோர் அவரிடம் சீட்டுப் பணம் கட்டினோம். ரூ.1 கோடி பணம் சேர்ந்ததும், சாதிக்பாஷா சீட்டு கட்டியவர்களுக்குப் பணத்தைத் திருப்பிக் கொடுக்கவில்லை. ‘‘சீட்டுப் பணம் கொடுக்க முடியாது. உங்களால் என்ன செய்ய முடியுமோ செய்யுங்கள். யாரிடம் வேண்டுமானாலும் புகார் கொடுங்கள். என்னை ஒன்றும் செய்ய முடியாது’’ என்று சாதிக்பாஷா மிரட்டல் விடுக்கிறார். அவரிடம் இருந்து எங்களுக்குச் சேர வேண்டிய பணத்தைத் திரும்பப் பெற்றுத் தர வேண்டும்’’ என்று கூறியிருந்தனர்.

இந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் இரட்டை மாட்டுவண்டித் தொழிலாளர்கள் நலச்சங்கத்தினர் கொடுத்த மனுவில், ‘‘மாட்டுவண்டித் தொழிலாளர்கள் பசி பட்டினியாக வாழ்ந்து வருகிறோம். மாடுகளுக்குத் தீவனம் வாங்க முடியாத நிலையில் உள்ளோம். எனவே, தாலுகா வாரியாக மணல் குவாரி அமைத்து எங்களை வாழ வைக்க வேண்டும். கட்டுமான பணிக்குத் தடையில்லாமல் மணல் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர்.