Published:Updated:

“எல்லாரும் சேர்ந்து எம்புள்ளையைக் கொன்னுட்டாங்க!”

“எல்லாரும் சேர்ந்து எம்புள்ளையைக் கொன்னுட்டாங்க!”
பிரீமியம் ஸ்டோரி
News
“எல்லாரும் சேர்ந்து எம்புள்ளையைக் கொன்னுட்டாங்க!”

வீ.கே.ரமேஷ் - படம்: க.தனசேகரன் - ஓவியம்: கார்த்திகேயன் மேடி

சைபர் க்ரைம் பற்றிய செய்திகளை அடிக்கடி கடந்துவருகிறோம். குறிப்பாக, பெண்களை நாசமாக்கும் டெக் குற்றங்கள் அதிக பதைபதைப்பை ஏற்படுத்துகின்றன. என்றாலும், காலப்போக்கில் அவற்றை மறந்துவிடுகிறோம். ஆனால், வினுப்பிரியா அப்படி மறக்க முடியாதவர். ஆபாச மார்ஃபிங் புகைப்படங்களால் பாதிக்கப்பட்டவர். தனக்கு நேர்ந்த அநீதிக்கு எதிரான நடவடிக்கையில் காவல்துறையின் அலட்சியத்தால் ரணப்பட்டவர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே மாதத்தில் தன் தாயின் புடவையில் தன் உயிரையே மாய்த்துக்கொண்டவர். இப்போது எப்படி இருக்கிறது வினுப்பிரியா குடும்பம்?

இளம்பிள்ளை மோட்டூரில் உள்ள வினுப்பிரியாவின் வீட்டுக்குச் சென்றோம். அம்மா மஞ்சுளாவும், வீட்டுக்குள் இருந்த தறியும் மௌனமாக இருக்க, காத்திருந்தோம். ‘`இந்தத் தறியை ஓட்டிதான் எங்க பாப்பாயியையும் (வினுப்பிரியா), பையன் ஆகாஷையும் வளர்த்தோம். இங்கிலீஷ் மீடியத்துல படிக்க வெச்சோம். சக்திக்கு மீறி ஆயிரம் ரூவாய்க்கு எல்லாம் அவளுக்குத் துணிமணி எடுத்துக் கொடுப்போம். ‘அம்மா, கிட்டயிருந்தா எட்ட பாசம்; எட்டயிருந்தா கிட்ட பாசம். அதனால என்னை தூரத்துல கல்யாணம் பண்ணிக் கொடுங்க, அப்பதான் உங்களை ஆசை ஆசையா ஓடிவந்து பார்ப்பேன்’னு சொல்லும். இப்ப எங்களை ஒரேடியா விட்டுட்டுப் போயிருச்சே...’’ - அழுகையுடன் மஞ்சுளா பேச, அவரைச் சமாதானப்படுத்துகிறார்  கணவர் அண்ணாதுரை.

“எல்லாரும் சேர்ந்து எம்புள்ளையைக் கொன்னுட்டாங்க!”

‘`வினுப்பிரியா திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரியில பி.எஸ்ஸி. கெமிஸ்ட்ரி முடிச்சுட்டு வீட்டுல இருந்துச்சு. என் மனைவி, பக்கத்துல இருக்கிற கடையில புடவைகளுக்குக் கல் பதிச்சுத் தர, புடவையையும் கல்லையும் வீட்டுக்கு வாங்கி வந்து, வினுப்பிரியாகிட்ட கொடுத்தா. என் மகளும் ரெண்டு மாசம் அப்படி கல் பதிச்சுக் கொடுத்துச்சு. தகவல் ஏதாச்சும் சொல்லணும்னு,  கடைக்காரவங்ககிட்ட எங்க போன் நம்பரைக் கொடுத்தோம். அந்தக் கடையில வேலைபார்த்த சுரேஷ்ங்கிற பையன், எங்க நம்பரைத் தெரிஞ்சுக்கிட்டிருந்திருக்கான். அப்புறம் கொஞ்சநாள் வினுப்பிரியா, பக்கத்துல ஒரு ஸ்கூலுக்கு டீச்சரா வேலைக்குப் போயிட்டிருந்துச்சு. அந்த நேரத்துல நாங்க  வினுப்பிரியாவுக்கு வரன் தேட ஆரம்பிச்சோம். அதனால் வாட்ஸ்அப் புரொஃபைல் போட்டோவுல, வினுப்பிரியா போட்டோவை மாத்தி மாத்தி வெச்சுட்டே இருந்தோம்.

வினுப்பிரியா போட்டோக்களையெல்லாம் சுரேஷ் டவுன்லோடு செஞ்சிருக்கான். முகநூல்ல என் பொண்ணு பேருல ஒரு பக்கம் ஆரம்பிச்சு, அதுல எம் பொண்ணோட போட்டோக்களை ஆபாசமா மார்ஃபிங் செஞ்சு போட்டதோட, என் போன் நம்பரையும் சேர்த்துப் போட்டிருக்கான். சில நாள் கழிச்சு, என் தங்கை மகன் சதீஷ் கண்ணுல அது பட, ஓடி வந்து எங்கிட்ட சொன்னான். எனக்கு உசுரே போயிடுச்சு. வினுப்பிரியாகிட்ட விசாரிக்க, ‘எனக்கு எதுவும் தெரியாது’னு அழுதுச்சு. போலீஸ் ஸ்டேஷன்ல புகார் கொடுக்கலாம்னு, என் பொண்ணே சொன்னுச்சு.

பொம்பளப் புள்ள விவகாரமா இருக்கிறதால, நேரடியா எஸ்.பி-யை சந்திச்சு புகார் கொடுத்தா சீக்கிரமா நடவடிக்கை எடுப்பாங்கனு, அப்போதைய சேலம் எஸ்.பி. அமித் குமார் சிங்கைச் சந்திச்சோம். அவர் டி.எஸ்.பி-யைப் பார்க்கச் சொன்னார். டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டரைப் பார்க்கச் சொன்னார். இன்ஸ்பெக்டர், சைபர் க்ரைம் போகச் சொன்னார். சைபர் க்ரைம்ல இருக்கிறவங்களுக்கு வாட்ஸ்அப், ஃபேஸ்புக்ல தப்பான படம் போடுறவங்களைப் புடிக்கிறதைப் பத்தியெல்லாம் எதுவும் தெரியலை. ஆனாலும், லஞ்சமா செல்போன் கேட்டாங்க. பிரச்னை தீர்ந்தா போதும்னு, பதறி வாங்கிக் கொடுத்தோம். அதுக்கு அப்புறமும் ஒரு வாரமா அலைக்கழிச்சுட்டு, எங்களை அலட்சியமா நடத்துனாங்க. கடைசியா, ‘ஃபேஸ்புக் லிங்க் ஆஸ்திரேலியாவுல இருக்கிறதால ஒண்ணும் செய்ய முடியாது’னு கையை விரிச்சுட்டாங்க.

இதுக்கு நடுவுல, ஃபேஸ்புக்ல வினுப்பிரியாவோட போட்டோ தொடர்ந்து வந்துட்டே இருந்துச்சு. யார் யாரோ போன் பண்ணி ஆபாசமா பேசினாங்க. லோக்கல் ஸ்டேஷன்ல எஸ்.ஐ பிரகாஷ், என் பொண்ணுகிட்ட முகம் சுளிக்கிற அளவுக்குக் கேள்விகள் கேட்டார். நாங்க கோபப்பட, ‘புகார் கொடுத்தா இப்படித்தான் விசாரிப்போம். உன் மக ஏதோ மறைக்கிறா. வீட்டுல போய்  விசாரி’னு சொல்லி அனுப்பினார். ஆற்றாமை, அவமானம் எல்லாம் என்னை மண்டைக் குழப்பத்துல போய் தள்ளிருச்சு. என் பொண்ணுகிட்ட, ‘எதுன்னாலும் மறைக்காம சொல்லு’னு கேட்டுப்புட்டேன். அழுதுகிட்டே இருந்தாலும், எப்படியும் தப்பு செஞ்சவனைப் பிடிச்சு நம்மள நிரூபிச்சுடலாம்னு இருந்த எம்புள்ள, நான் கேட்ட வார்த்தையில சட்டுனு கருகிப்போச்சு. ‘எங்க அப்பாவே என்னை நம்பலையே’னு கடுதாசி எழுதி வெச்சுட்டு தற்கொலை செஞ்சுக்கிச்சு’’ - தலைதலையாக அடித்துக்கொண்டு அழுகிறார் அண்ணாதுரை. தேற்றினோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
“எல்லாரும் சேர்ந்து எம்புள்ளையைக் கொன்னுட்டாங்க!”

‘`என் பொண்ணு சாவு ஊருக்கே செய்தியாக, போலீஸ்காரவங்க லஞ்சம் வாங்கிக்கிட்டு இழுத்தடிச்ச கதை எல்லாம் வெளிய தெரிஞ்சதுக்கு அப்புறம்தான், அவங்க இந்த கேஸுல முனைப்பு காட்டினாங்க. சுரேஷ், தனுஷ், அவங்களோட கூட்டாளி ஒருத்தன்னு மூணு பேரைக் கைது செஞ்சாங்க. சுரேஷை குண்டாஸ்ல போட்டாங்க. ஒரு வருஷம் ஜெயில்ல இருந்துட்டு வெளிய வந்துட்டான். என் மக உயிரோட இருக்கும்போது நியாயம் கிடைக்கல, அவ உயிரையே கொடுத்ததுக்கு அப்புறம்கூட நீதி கிடைக்கல. இப்போ நாங்க நடைப்பிணமா வாழுறோம். தறி ஓட்டுறதை விட்டுட்டோம். என் மனைவிக்கு கர்ப்பப்பை பிரச்னை. பையன் காலேஜுல படிக்கிறான். முதல்வர் எடப்பாடி பழனிசாமிகிட்ட உதவி கேட்டு 20 தடவைக்கும் மேல போயிருப்பேன். எதுவும் நடக்கல...’’ - அந்தத் தந்தையின் துயரம் சூழலை இறுக்கமாக்கியது.

வினுப்பிரியாவின் அம்மா மஞ்சுளா, ``எந்தப் பாவமும் செய்யாத என் குழந்தையை மனசளவுல சித்ரவதை செஞ்சு கொன்னுட்டாங்க. இந்த சமுதாயத்தைப் பார்க்கவே அருவருப்பாவும் பயமாவும் இருக்கு. அதனால, எங்க வீட்டுக் கதவைக்கூட பெரும்பாலும் திறக்கிறதே இல்லை. வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறோம். என் பையன் இல்லைன்னா, பொண்ணு போன நாள்லயே நாங்களும் போய்ச் சேர்ந்திருப்போம்.

யாரோ ஒருத்தன், என் பொண்ணு போட்டோவை அசிங்கமா போட்டான். போலீஸ், லஞ்சம் வாங்கிக்கிட்டும் குற்றவாளியைக் கண்டுபிடிக்கல. என் வீட்டுக்காரர், என் பொண்ணையே சந்தேகமா பேசிட்டார். எந்தத் தப்பும் செய்யாத என் பொண்ணு, உசுரை மாய்ச்சுக்கிட்டா. எல்லாரும் சேர்ந்து எம்புள்ளையைக் கொன்னுட்டாங்க. பொம்பளப் புள்ள வாழ்க்கையோட விளையாடுற வீரனுங்களுக்கு, ஏழை சனங்களுக்கு எதுக்கு வேலைபார்க்கணும்னு இருக்கிற போலீஸ்காரங்களுக்கு, புள்ளையை நம்பாம பேசுற பெத்தவங்களுக்கு... எல்லோருக்கும் ஒத்தைக் கும்பிடு’’ -  அந்தத் தாயின் ஆற்றாமையில் ஆயுளுக்கும் ஆறாத சோகம்.

“எல்லாரும் சேர்ந்து எம்புள்ளையைக் கொன்னுட்டாங்க!”

‘`போலீஸ்காரங்க ஒன்றரை லட்சம் வாங்கிக்கிட்டாங்க!”

வினுப்பிரியாவை ஆபாசமாகச் சித்திரித்ததாக குண்டாஸில் ஓராண்டு சிறையில் இருந்துவிட்டு வெளியே வந்திருக்கும் கல்பாரப்பட்டியைச் சேர்ந்த சுரேஷ் வீட்டுக்குச் சென்றோம். சுரேஷ் தறி ஓட்டிக்கொண்டிருந்தார். அவரிடம், ‘`வினுப்பிரியாவைத் தெரியுமா?” என்றோம். ‘`தெரியும்’’ என்றார். அவர் தாத்தா இடைமறித்து, ‘`இவனுக்கும் அந்தப் பொண்ணு மரணத்துக்கும் சம்பந்தம் இல்ல. இவனுக்கு செல்போனுல டிசைன் பண்ணுற அளவுக்கு எல்லாம் அறிவில்ல. கூட இருந்த தனுஷும், அவன் கூட்டாளியும்தான் செஞ்சிருக்கானுங்க. அவங்ககிட்ட போலீஸ்காரங்க ஒன்றரை லட்சம் வாங்கிக்கிட்டு வெளிய விட்டுட்டாங்க. என் பேரனை உள்ள அடைச்சுட்டாங்க. நாங்க அழுது அழுது, இப்போதான் வெளிய வந்திருக்கான். மறுபடியும் அவன்கிட்ட ஏதாச்சும் கேட்டு எழுதி, சிக்கலாக்கிடாதீங்க’’ என்றார்.