Published:Updated:

`என் மனைவியை சித்ரவதைப் பண்ணுறாங்க!’ - கந்துவட்டிக் கொடுமையால் கண்ணீர்விடும் கணவன்

வீ கே.ரமேஷ்
`என் மனைவியை சித்ரவதைப் பண்ணுறாங்க!’ - கந்துவட்டிக் கொடுமையால் கண்ணீர்விடும் கணவன்
`என் மனைவியை சித்ரவதைப் பண்ணுறாங்க!’ - கந்துவட்டிக் கொடுமையால் கண்ணீர்விடும் கணவன்

கந்துவட்டிக் கொடூரத்தை சமீபத்தில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் குடும்பத்தோடு தீ வைத்துக்கொண்டு இறந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. ஆனால், அதன் பிறகும் கந்து வட்டிக்கொடுமை இன்னும் ஒடுக்கப்பட்ட ஏழை மக்களை விட்டு விலகவில்லை. இன்று சேலம் கலெக்டர் அலுவலகத்கு தன்னுடைய இரண்டு சிறுநீரகமும் செயலிழந்த நிலையில் வந்த ஒருவர், ``தான் வாங்கிய கடனைவிட இரண்டு மடங்கு அதிகமாகத் தொகை கொடுத்த பிறகும் இன்னும் வட்டி கேட்டு தன் மனைவியை அடித்து சித்ரவதை செய்கிறார்கள்’’ என்று கண்ணீர் வடித்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.

இதுபற்றி அவரிடம் பேசியபோது, ``என் பேரு தர்மலிங்கம். என் மனைவி பெயர் கவிதா. எங்களுக்கு ரெண்டு மகள்கள், ஒரு மகன் இருக்கிறான். அனைவரும் தொடக்கப்பள்ளியில் படித்துக்கொண்டிருக்கிறார்கள். நாங்கள் தாரமங்கலம் செல்லும் வழியில் கே.ஆர். தோப்பூரில் குடியிருக்கிறோம். நான் கூலி வேலைக்குப் போயிட்டு இருந்தேன். என் மனைவி பெட்டிக்கடை வைத்திருக்கிறார்.

எங்க ஊரில் உள்ள சுப்ரமணி என்பவரிடம் 5 வருடத்துக்கு முன்பு ஒரு லட்சம் கடன் வாங்கினேன். 3 வருடம் வட்டி மட்டும் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் கட்டினேன். அதன் பிறகு என் ரெண்டு கிட்னியும் செயலிழந்துவிட்டது. ஒரு வருடம் வட்டிகட்ட முடியவில்லை. பிறகு பாத்திர, பண்டத்தை விற்று அசல் ஒரு லட்சத்தைக் கட்டிவிட்டோம். ஒரு லட்சம் வாங்கியதற்கு 2.05 லட்சம் கட்டிவிட்டேன். ஆனால், சுப்ரமணி எட்டு, ஒன்பது மாதம் கட்டாமல் இருந்த வட்டிக்கு வட்டி போட்டு இன்னும் 1,20,000 கொடுக்க வேண்டும் என்று மிரட்டுகிறார். என்னால் பேசக்கூட முடியாமல் படுத்த படுக்கையாகக் கிடக்கிறேன். என் மனைவி பெட்டிக்கடை வைத்துக்கொண்டு அதில் கிடைக்கிற சொற்ப வருமானத்தில் குழந்தைகளுக்கு கூழோ கஞ்சியோ ஊத்தி காப்பாத்தி வருகிறோம். இந்த நிலையைக் கண்டு இரக்கம் இல்லாமல் என் மனைவியைப் போட்டு அடிக்கிறார்கள். குழந்தைகள் கதறி அழுகிறார்கள். நான் நல்லா இருந்தால் என் மனைவியை அடிக்கவிட மாட்டேன். கேட்பதற்கு யாரும் இல்லை என்று சித்ரவதை செய்கிறார்கள்'' என்றார் கண்ணீர் மல்க.