Published:Updated:

`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்!

பி.ஆண்டனிராஜ்
`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்!
`ஒருதலைக் காதல்' - ஹெட்மாஸ்டர் அறை முன்பு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்!

நெல்லை மாவட்டம் கூட்டப்புளியில் காதல் தோல்வி காரணமாக இளைஞர் ஒருவர், தனது இறப்புக்கு இவர்கள்தாm காரணம் எனச் சிலரது பெயர்களை ரத்தத்தில் எழுதி வைத்துவிட்டு பள்ளியில் ஹெட்மாஸ்டர் அறையின் முன்பாகத் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நெல்லை மாவட்டம் கூட்டப்புளியைச் சேர்ந்தவர் கிறிஸ்டோபர். மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்த கிறிஸ்டோபர், அங்குள்ள பள்ளியில் பயிலும் மாணவியை ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார். அடிக்கடி அந்த மாணவியிடம் சென்று தனது காதலைத் தெரிவிக்க அவர் முயற்சி செய்ததால் அச்சம் அடைந்த அந்த மாணவி, பெற்றோரிடம் இதுபற்றித் தெரிவித்து இருக்கிறார். அதனால் அவரை மாணவியின் பெற்றோரும் கண்டித்துள்ளனர். 

ஆனாலும், தொடர்ந்து கிறிஸ்டோபர் டார்ச்சர் கொடுத்து வந்ததால், அந்த மாணவியின் பெற்றோர் பழவூர் காவல்நிலையத்தில் புகார் செய்தனர். விசாரணைக்கு அழைத்துச் சென்ற போலீஸார் அவரைத் தாக்கியதாகத் தெரிகிறது.

அதனால், நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில், மருத்துவமனையில் இருந்து யாருக்கும் தெரியாமல் வெளியேறிய அவர், நேராகப் பள்ளிக்குச் சென்று அங்குள்ள தூணில் தனது ரத்தத்தைக் கொண்டு தனது சாவுக்குக் காரணமானவர்கள் எனச் சிலரது பெயர்களை எழுதி கையெழுத்துப் போட்டுள்ளார். 

பின்னர், தலைமை ஆசிரியரின் அறையின் முன்பாகத் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். பள்ளியில் யாரும் இல்லாத அதிகாலை நேரத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. பள்ளியில் காவலாளி அளித்த தகவலின் பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று உடலைக் கைப்பற்றி, உடற்கூறு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பள்ளியின் முன்பாக கிறிஸ்டோபரின் உறவினர்கள் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாகக் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் கனகராஜ் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கலைந்து செல்ல வைத்தார். இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.