Published:Updated:

`வயிற்றைக் கிழித்த அம்பு!’ - லண்டனில் இந்திய வம்சாவளி கர்ப்பிணிக்கு நேர்ந்த துயரம்

`வயிற்றைக் கிழித்த அம்பு!’ - லண்டனில் இந்திய வம்சாவளி கர்ப்பிணிக்கு நேர்ந்த துயரம்
`வயிற்றைக் கிழித்த அம்பு!’ - லண்டனில் இந்திய வம்சாவளி கர்ப்பிணிக்கு நேர்ந்த துயரம்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் லண்டனில் அம்பு ஏவி கொலை செய்யப்பட்டுள்ளார். 

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தேவி என்ற பெண் லண்டனில் வசித்து வந்துள்ளார். 9 மாத கர்ப்பிணிப் பெண்ணான இவர், கடந்த திங்கள் கிழமை மாலை தன் வீட்டில் இருந்தபோது, இவர் மீது அம்பு எய்தித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மர்ம நபர் எய்த அம்பு பக்கவாட்டில் தேவியின் வயிற்றைக் கிழித்துள்ளது. இதையடுத்து, உடனடியாக அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளார். அங்கே அறுவை சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். நீண்ட நேரமாக உயிருக்குப் போராடிய தாய்க்கும் வயிற்றில் உள்ள குழந்தைக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இறுதியில் குழந்தை அறுவை சிகிச்சை மூலம் வெளியில் எடுக்கப்பட்டது. தேவி மருத்துவமனையிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த விவகாரம் தொடர்பாக நேற்று லண்டன் போலீஸார் ராமனோஜ் (Ramanodge) என்பவரைக் கைது செய்தனர். இவர் தேவியின் முன்னாள் கணவர் என்பதும் இவர்தான் தேவியைக் கொலை செய்தார் என்றும் பின்னர் நடந்த விசாரணையில் தெரியவந்துள்ளது. தேவி ஏழு வருடங்களுக்கு முன்னதாக இம்தியாஸ் முகமது என்பவரைத் திருமணம் செய்துகொண்டு தன் பெயரை சனா முகமது என மாற்றி இஸ்லாம் மதத்துக்கு மாறியுள்ளார். தேவி மற்றும் ராமனோஜ் ஆகிய இருவருக்கும் 18,14,12 ஆகிய வயதில் மூன்று குழந்தைகளும் உள்ளனர். இம்தியாஸுடனான திருமணத்தில் 5 மற்றும் 2 வயதில் இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளது. சனா கர்ப்பமாக இருந்தபோது கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் தற்போது பிறந்துள்ளது ஆண் குழந்தை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது பற்றி சனாவின் கணவர் இம்தியாஸ் கூறும்போது, ``எனது வீட்டின் அருகில் ராமனோஜ் நிறைய அம்புகளுடன் நிற்பதை நான் மாடியிலிருந்து பார்த்தேன். அவர் என் மனைவி மற்றும் குழந்தைகளை ஏதோ செய்யப் போகிறார் என எனக்குத் தோன்றியது. நான் கீழே சென்று அவர்களை எச்சரிக்கை செய்யும் முன்னர் என் மனைவி மீது அம்பு பாய்ந்துவிட்டது. என் குழந்தை பிறக்க இன்னும் மூன்று வாரங்கள் உள்ளன. ஆனால், அதற்குள் இந்த அம்பு கிழித்ததால் குழந்தையை உடனே வெளியில் எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். தற்போது குழந்தை ஆபத்தான நிலையில்தான் பிறந்துள்ளது. சனாவும் நானும் ஏழு வருடங்களாக இணைந்து வாழ்ந்து வருகிறோம். எங்களுக்கு முன்னதாக இரண்டு குழந்தைகள் உள்ளனர். சனா ஒரு நல்ல மனைவி மற்றும் தாய். அவரின் இழப்பைச் சற்றும் ஏற்க முடியவில்லை. நாங்கள் எப்போதும் இணைபிரியாதவர்களாக இருந்தோம். ஆனால், இப்போது அவளின் இறப்புச் செய்தி என் மனதை உடைத்துவிட்டது ” என ஆங்கில நாளிதழுக்குப் பேட்டியளித்துள்ளார். 

மேலும், இது பற்றி கருத்து தெரிவித்துள்ள காவல்துறையினர், `` இது மிகவும் மோசமான சம்பவம். அந்தப் பெண்ணுக்கு நெருங்கியவர்களுக்கு எங்களின் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். ராமனோஜை தற்போது கைது செய்துள்ளோம். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. அதன் முடிவில்தான் கொலைக்கான முக்கிய காரணம் குறித்துத் தெரியவரும்” எனக் கூறியுள்ளனர்.