அரசியல்
அலசல்
Published:Updated:

“ஹாசினியைக் கொன்றதற்கு மரணம் மட்டுமே தண்டனை!”

“ஹாசினியைக் கொன்றதற்கு மரணம் மட்டுமே தண்டனை!”
பிரீமியம் ஸ்டோரி
News
“ஹாசினியைக் கொன்றதற்கு மரணம் மட்டுமே தண்டனை!”

“ஹாசினியைக் கொன்றதற்கு மரணம் மட்டுமே தண்டனை!”

லைநகர் டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டில் ஓடும்பேருந்தில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுச் சாகடிக்கப்பட்ட நிர்பயா உங்களுக்கு நினைவில் இருக்கலாம். அந்த வழக்கின் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையைத் தற்போது உறுதி செய்துள்ளது உச்ச நீதிமன்றம். நிர்பயா வழக்கின் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டதற்கு அடுத்த நாள், சென்னை உயர் நீதிமன்றமும் அதுபோன்றதொரு வழக்கில் மரண தண்டனையை உறுதி செய்துள்ளது.

16 மாதங்களுக்கு முன்பு சென்னை முகலிவாக்கம் பகுதியைச் சேர்ந்த தஷ்வந்த் என்னும் 23 வயது ஐ.டி ஊழியர், தான் வசித்த குடியிருப்புக்கு அடுத்த வீட்டிலிருந்த ஹாசினி என்னும் ஏழு வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து அனகாபுத்தூர் அருகே உள்ள ஆள் அரவமற்ற இடத்தில் அந்தச் சிறுமியின் உடலை எரித்தார். தங்களது குழந்தையைக் காணவில்லை என்று காவல்துறையினரிடம் புகார் அளித்தனர் ஹாசினியின் பெற்றோர். குழந்தை குறித்து விசாரிக்க வந்த போலீஸுடன் சேர்ந்து தானும் தேடுவதாக நாடகத்தை நடத்திய தஷ்வந்த் பிறகு சிக்கிக் கொண்டார். கைது செய்யப்பட்ட தஷ்வந்த், பிறகு ஜாமீனில் வெளியே வந்த நிலையில் தன் தாயையும் கொலை செய்துவிட்டு நகைப் பணத்துடன் மும்பைக்குத் தப்பியோடினார். இதையடுத்து அம்பத்தூர் சரகப் போலீசார் மும்பை சென்று நடத்திய தீவிர வேட்டையில் பிடிபட்ட தஷ்வந்த் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் தஷ்வந்துக்கு மரண தண்டனை விதித்தது. இதை உறுதி செய்யும் வழக்கு, ஜூலை 10-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் ராமதிலகம், விமலா என இரண்டு நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

“ஹாசினியைக் கொன்றதற்கு மரணம் மட்டுமே தண்டனை!”

மரண தண்டனையை உறுதிசெய்த நீதிபதிகள், உணர்வுபூர்வமாக 96 பக்கத் தீர்ப்பைக் கொடுத்துள்ளனர். ‘ஹாசினி என்னும் மொட்டு மலராவதற்கு முன்பே சாம்பலாக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தஷ்வந்தின் வயதைக் கருத்தில்கொண்டு அவருக்கான தண்டனையைப் பரிசீலனை செய்யும்படி அவரது வக்கீல் கோரியிருந்தார். வயது பரிசீலிக்கப்பட வேண்டியதுதான் என்றாலும், அதைமட்டுமே பார்க்க வேண்டியதில்லை. ஹாசினியைக் கொன்றபிறகு அவர் அந்தப் பிஞ்சின் உடலை எரித்ததும், பிறகு தன் தாயைக் கொன்றுவிட்டு மும்பைக்குத் தப்பியோடியதும் அவரின் சிந்தனையைப் பிரதிபலிக்கிறது. அவரைத் திருத்திவிடலாம் என்கிற எண்ணத்தை நெடுங்கனவாக்கி இருக்கிறது.

இந்த வழக்கில் மரண தண்டனையைத் தவிர வேறெதுவும் பொருத்தமான தண்டனையாக இருக்காது. தஷ்வந்த் தூக்கில் தொங்கும் அந்தக் கடைசி நொடி, காமம் என்னும் பெயரில் கொடூரங்களைத் திணிக்கும் சிந்தனைகளின் கடைசி நொடியாக இருக்கட்டும். மரண தண்டனைக்கு எதிரான மனிதநேய ஆர்வலர்கள், உணர்வுகளால் உந்தப்பட்டு நாங்கள் மரண தண்டனையை உறுதி செய்ததாகக் கூறலாம். ஆனால், நாங்கள் ஒரு எறும்புக்குக்கூடத் தீங்கு நினைக்காதவர்கள். தஷ்வந்துக்கான தண்டனையை அங்கீகரித்ததால், உணர்வுகளுக்கு எங்களை ஒப்புக்கொடுத்ததாக நினைக்க வேண்டாம். உணர்வுகளைக் கடந்துதான் நாங்கள் இந்த தண்டனையை உறுதி செய்கிறோம். சீஸரைக் கொன்ற ப்ரூட்டஸ் நீதிபதிகளின் முன்பு, ‘நான் சீஸரை நேசித்தேன். ஆனால், அவரை விடவும் அதிகமாக ரோம் நகரத்தை நேசித்தேன்’ என்று தனது செயலுக்கான காரணத்தைக் கூறினார். அதேபோலத்தான் ‘மரண தண்டனைக்கு நாங்கள் ஆதரவானவர்களா, இல்லையா’ என்பதைவிட, சிறுமி ஹாசினிக்கான நியாயத்தை எப்படித் தேடப் போகிறோம் என்பதே பிரதானமாக இருக்கிறது’’ என்று நீதிபதிகள் குறிப்பிட்டிருந்தனர். 

உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தஷ்வந்துக்கு அவகாசம் தரப்பட்டிருக்கிறது. நிர்பயாவுக்கும் ஹாசினிக்கும் வெவ்வேறான நீதியாக இருக்காது என்று நம்புவோம்!

- ஐஷ்வர்யா