Published:Updated:

`ஹலோ....இன்ஸ்பெக்டர் பேசுகிறேன்; நீங்கள் வைத்திருப்பது திருட்டு செல்'- அதிர்ச்சியில் கேரளா

`ஹலோ....இன்ஸ்பெக்டர் பேசுகிறேன்; நீங்கள் வைத்திருப்பது திருட்டு செல்'- அதிர்ச்சியில் கேரளா
`ஹலோ....இன்ஸ்பெக்டர் பேசுகிறேன்; நீங்கள் வைத்திருப்பது திருட்டு செல்'- அதிர்ச்சியில் கேரளா

`ஹலோ....இன்ஸ்பெக்டர் பேசுகிறேன்; நீங்கள் வைத்திருப்பது திருட்டு செல்'- அதிர்ச்சியில் கேரளா

கேரளாவில் விற்கப்பட்ட திருட்டு செல்போன்களை ஐஎம்இஐ நம்பர்கள் மூலம் கண்டறிந்த சென்னை போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், அதை சம்பந்தப்பட்டவர்களிடம் போனில் பேசி மீட்டுள்ளனர். 

சென்னை திருவல்லிக்கேணி காவல் மாவட்டத்தில் 217 திருட்டு செல்போன்கள் மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது, செல்போன்களைப் பறிக்கொடுத்தவர்களுக்கு ஆச்சர்யத்தைக் கொடுத்தாலும் செல்போன்களை மீட்டது எப்படி என்று விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``சென்னையில் உள்ள காவல்நிலையங்களுக்கு செல்போன் பறிப்பு தொடர்பான புகார்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவந்தன. அதுதொடர்பாக நடவடிக்கை எடுத்தாலும் செல்போன் பறிப்பு சம்பவங்கள் குறைந்தபாடில்லை. இதனால், திருட்டு செல்போன்கள் விற்கப்படுவதாக கருதப்படும் கடைகளில் அதிரடி சோதனை நடத்த திட்டமிடப்பட்டது. வருமான வரித்துறையினரைப் போல ஒரே நேரத்தில் சென்னை பர்மா பஜார், ரிச்சி தெரு, தி.நகர் அன்னை சத்யா பஜார் என பல இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனையில் ஏராளமான செல்போன்கள் சிக்கின.

இதற்கிடையில் செல்போன்களைப் பறிகொடுத்தவர்கள் அளித்த புகார்களின் பேரில் ஐஎம்இஐ நம்பர்களை டிராக் செய்ததில் துப்பு துலங்கியது. திருவல்லிக்கேணி காவல் மாவட்டத்தில் 217 செல்போன்களை மீட்டோம். தி.நகர் காவல் மாவட்டத்தில் 40 ஐ போன்கள், 70 விலை உயர்ந்த செல்போன்கள் ஆகியவற்றை அப்துல்ரகுமான் என்பவரிடமிருந்து மீட்டோம். இதுத்தவிர ஆயிரத்துக்கும் மேற்பட்ட செல்போன்களைப் பறிமுதல் செய்து ஐஎம்இஐ நம்பர்களை ஆய்வு செய்துவருகிறோம். 

செல்போன் கடைகள் வைத்திருப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளோம். யாரும் பில் இல்லாமல் செல்போன்களை விற்க வேண்டாம் என்றும் செல்போன்களை விற்க வருபவர்களின் புகைப்படங்கள், செல்போன் நம்பர்கள், ஆவணங்களைக் கேட்டு வாங்கிய பிறகு வாங்குங்கள் என்று தெரிவித்துள்ளோம். மேலும், சென்னையில் அதிகளவில் செல்போன்களை விற்கப்படும் பஜார்களை ரகசியமாக கண்காணிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். எனவே, இனிவரும் காலங்களில் திருட்டு செல்போன்களை சென்னையில் விற்கமுடியாத சூழல் வரும் என்று நம்புகிறோம்" என்றனர். 

திருட்டு செல்போன்களை மீட்க சென்னை போலீஸார் எடுத்த நடவடிக்கை குறித்து பேசிய போலீஸ் உயரதிகாரி ஒருவர், ``சென்னையில் திருடப்படும் செல்போன்களில் பெரும்பாலானவைகள் தமிழகத்தில் விற்கப்படுவதில்லை. வடமாநிலங்களுக்கும் கேரளாவுக்கும் கொண்டு செல்லப்பட்டு அங்கு குறைந்த விலைக்கு விற்கப்படுகிறது. அதை வாங்குபவர்கள், புதிய சிம்கார்டுகளை செல்போனில் போடும்போது ஐஎம்இஐ நம்பர் மூலம் டிராக் செய்து திருட்டு செல்போன்களைக் கண்டுபிடித்துள்ளோம். கேரளாவில் விற்கப்பட்ட சில திருட்டு செல்போன்களைப் பயன்படுத்தியவர்களுக்கு சென்னையிலிருந்து எங்கள் டீமில் உள்ள இன்ஸ்பெக்டர்கள் பேசினர். அப்போது அவர்கள் ஹலோ நான் இன்ஸ்பெக்டர் பேசுகிறேன். நீங்கள் என்னிடம் பேசிக்கொண்டிருக்கும் செல்போன் சென்னையில் திருடப்பட்டது. எனவே, நீங்களே அந்தச் செல்போனை போலீஸ் நிலைய முகவரிக்கு அனுப்பி வைத்துவிடுங்கள் என்று கூறினர். அதன்படி பல செல்போன்கள் சென்னையில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு கூரியரில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதற்கு கேரள போலீஸார் உறுதுணையாக இருந்துவருகின்றனர்'' என்றார்.

பழைய செல்போன்களை விலைக்கு வாங்குபவர்களுக்கும் சென்னை போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``விலை குறைவாக இருக்கிறது என்று பழைய செல்போன்களை வாங்காதீர்கள். விவரம் தெரியாமல் திருட்டு செல்போன்களை வாங்கி யாரும் சிக்கலில் மாட்டிக்கொள்ள வேண்டாம். நம்பிக்கையான கடைகளில் மட்டுமே பழைய செல்போன்களை வாங்குங்கள். இல்லையென்றால் விலை கொடுத்து ஆசையாக வாங்கிய செல்போன்களை நாங்கள் பறிமுதல் செய்ய வேண்டிய சூழல் ஏற்படும். திருடப்பட்ட செல்போன்கள் குறித்து எங்களிடம் புகார் கொடுத்திருந்தால் அது, தமிழகத்தில் எந்த மூலைமுடுக்கில் இருந்தாலும் அதைக் கண்டுபிடிக்க வசதிகள் உள்ளன. எனவே, செல்போன் திருடப்பட்டதும் போலீஸில் புகார் கொடுங்கள். செல்போனில் உள்ள ஐஎம்இஐ நம்பர்கள் மூலம் அதைக் கண்டுபிடித்து கொடுத்துவிடுவோம்" என்றார். 

அடுத்த கட்டுரைக்கு