சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

“கடவுள்கிட்ட போறேன்!”

“கடவுள்கிட்ட போறேன்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“கடவுள்கிட்ட போறேன்!”

எம்.புண்ணியமூர்த்தி - படங்கள்: தி.விஜய் - ஓவியம்: பாரதிராஜா

கேரளா, அட்டப்பாடியை அடுத்து உள்ள பழங்குடியின கிராமம் சிண்டக்கி. அதுதான் மதுவின் கிராமம். மலையடிவாரத்தில் இருக்கிறது மதுவின் வீடு.

மெலிந்து ஒடுங்கிய தேகம், கிழிக்கப்பட்ட அழுக்குச் சட்டை, உயிர்ப் பிச்சை கேட்டு மன்றாடும் கண்களென உடைந்து நின்ற மதுவின் கோலம், மனித மன வக்கிரங்களின் கோரமான சாட்சியம். பசிக்கு அரிசி திருடியதற்காக அடித்துக்கொல்லப்பட்ட மதுவை மறக்கவே முடியாது.

நாம் சென்றதற்கு முதல் நாள்தான் வேலை விஷயமாக மதுவின் அம்மா மல்லியும் இரண்டாவது தங்கை சந்திரிகாவும் எர்ணாகுளம் சென்று திரும்பியிருந்தார்கள். முதல் தங்கை சரசு, நிறைமாத கர்ப்பிணி. அனைவரின் முகங்களிலும் படிந்திருக்கிறது சொற்களற்ற சோகம்.

மது இறந்த சில நாள்களிலேயே அவரது குடும்பத்துக்கு நஷ்ட ஈடாக 10 லட்சம் ரூபாயை வழங்கிய கேரள அரசு, இப்போது மதுவின் தங்கைக்கு அரசு வேலை வழங்கி ஆறுதல் சொல்லியிருக்கிறது.

“கடவுள்கிட்ட போறேன்!”

“என் மகனுக்கு இப்படி ஒரு மரணம் வந்திருக்கக்கூடாது. அவன் காட்டுக்குள்ளேயே செத்து, காணாப்பிணமா போயிருந்தான்னாகூட அவன் உசுரோட இருக்கான்னு நினைச்சிட்டு வாழ்ந்திருப்போம். என் மகனை ஒரு கூட்டமே சேர்ந்து அடிச்சுக் கொன்னதை செல்போன்ல பார்த்த பெத்தவ மனசு எத்தனை தடவை செத்திருக்கும்..?’’ - பேச்சை ஆரம்பிக்கும்போதே அழுகையும் சேர்ந்துகொள்கிறது மதுவின் அம்மா மல்லிக்கு.

“மதுவுக்கு 10 வயசு இருக்கும்போதே அவங்க அப்பா இறந்துட்டார். எங்கம்மா பார்த்துக்கிட்டிருந்த அங்கன்வாடி உதவியாளர் வேலை எனக்குக் கிடைச்சது. அந்தச் சொற்ப காசுலதான் ரெண்டு பொண்ணுங்க, ஒரு பையன்னு என் மூணு புள்ளைங்களையும் வளர்த்தேன். பொம்பளப்புள்ளைங்க ஆரம்பத்துல இருந்தே ஹாஸ்டல்ல தங்கிப் படிக்க, மதுதான் என்கூட இருந்தான். அவ்வளவு பொறுப்பான புள்ள. ‘தங்கச்சிங்க படிக்கட்டும், நான் உனக்கு உதவியா இருக்கேன்’னு ஆறாவதோட படிப்பை நிறுத்திட்டு, காட்டுக்குப் போய் தேன் எடுத்துட்டு வந்து சொசைட்டியில கொடுத்துட்டு, அரிசி, பருப்பு வாங்கிட்டு வருவான். வீட்டு வேலை களையெல்லாம் செய்வான்!’’ என்றவர், அந்த எதிர்பாராத திருப்பத்தைச் சொன்னார்...

 ‘`பழங்குடி மக்களுக்குக் கேரள அரசு வேலைவாய்ப்புப் பயிற்சி கொடுத்துச்சு. அதுல இவன் ஆசாரி வேலை கத்துக்கிட்டு 2005-ல பாலக்காட்டுக்கு வேலைக்குப் போனான். முதல் மாச சம்பளத்தை எங்கிட்ட கொண்டு வந்து கொடுத்தப்போ, ‘உங்களை எல்லாம் நான் பார்த்துக்கு வேம்மா’னு சட்டுனு ஒரு பெரியமனுஷத்தனம் அவன் கிட்ட. ஆனா, அந்த சந்தோஷ மெல்லாம் ரெண்டு மாசம்கூட நிலைக்கல. ஏதோ அடிதடி சண்டைபோட்டான்னு சொல்லி போலீஸ் அவனை அரெஸ்ட் பண்ணி ஜெயில்ல போட்டுட்டாங்க. பெயில்ல எடுத்துட்டு வந்து, என்ன பிரச்னைனு எவ்வளவோ கேட்டும் அவன் சொல்லவே இல்லை. அதுக்குப் பிறகு, அவன் எங்க யார்கூடயும் ஒட்டவும் இல்ல. ஏதோ ஒரு மாதிரி சுத்திக்கிட்டிருந்தான். கொஞ்ச நாளிலேயே, அவன் காட்டுக்குள்ள ஓட ஆரம்பிச்சுட் டான். அவன் மனநிலை பாதிக்கப் பட்டிருக்கான்னு, நாளாக ஆக எங்களுக்குப் புரிஞ்சது.

“கடவுள்கிட்ட போறேன்!”

கோழிக்கோட்டுல இருக்கிற ஒரு பெரிய மருத்துவமனைக்கு மதுவைக் கூட்டிக்கிட்டுப் போனேன்.  ‘மூணு மாசம் அட்மிஷன் போடணும், துணைக்கு ஒரு ஆண் இருக்கணும்’னு சொன்னாங்க. ரெண்டுமே என்னால முடியாதுங்கிறதால, ‘வீட்டுலேயே சாப்பிடுற மாதிரி மருந்து கொடுங்க’னு சொல்லி வாங்கிட்டு வந்தேன். ஆனா, அவன் அந்த மருந்தைச் சாப்பிடவே மாட்டேனுட்டான். ‘என் கடவுள்கிட்ட போறேன்’னு சொல்லி,  காட்டுக்குள்ள ஓடி ஒளிய ஆரம்பிச்சான். அவனை எங்களால தடுக்கவே முடியலை. என்ன கேட்டாலும், பதில் எதுவும் பேச மாட்டான். சிரிச்சிட்டே கைதட்டிக்கிட்டுப் போயிருவான்.

காட்டுக்குள்ள போக ஆரம்பிச்ச காலத்துல, கொஞ்ச நாள் இருந்துட்டு வீட்டுக்கு வந்தவன், ஒரு கட்டத்துக்கு மேல நிரந்தரமா காட்டுக்குள்ளேயே தங்க ஆரம்பிச்சிட்டான். எங்களுக்குத் தெரிஞ்சும் தெரியாமலும் அப்பப்போ வீட்டுக்கு வந்து அரிசி, பருப்பை மட்டும் எடுத்துட்டுப் போக ஆரம்பிச்சான்.  எங்களால அவனைக் கட்டுப் படுத்த முடியல.

அஞ்சாறு வருஷமா இப்படியே போச்சு. அப்புறம் என்ன ஆச்சுன்னே தெரியல, அப்பப்போ வீட்டுக்கு வர்றதையும் சுத்தமா நிப்பாட்டிட்டான். எங்க தேடியும் அவன் கிடைக்கல.  ‘முக்காலில உள்ள கடைங்கள்ல மது அரிசி, பருப்பு  திருடிட்டுப் போறான்’னு ஊரெல்லாம் புகார் கிளம்ப ஆரம்பிச்சிச்சு. அவனை எப்படியாவது  கூட்டிட்டு வந்து வீட்ல கட்டியாவது போட்டுடலாம்னு காட்டுக்குள்ள தேடிப் போனோம். பார்த்ததும் ஓடிருவான்.  நாள் ஆக ஆக, முக்காலில உள்ள கடைங்கள்ல அரிசித் திருட்டு அதிகமா நடக்குதுனு பிரச்னை பெருசாச்சு. போலீஸ்லயெல்லாம் புகார் கொடுத்தாங்க. திடீர்னு ஒருநாள், ‘உன் மகனைப் பிடிச்சு அடிச்சுப்புட்டாங்க,  சீக்கிரம் வா’னு தகவல் வந்துச்சு. ஓடிப்போய்ப் பார்த்தா, அவன் செத்துட்டான்னு சொன்னாங்க. செல்போன்ல காட்டுனாங்க. சாகுறதுக்குக் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அரை உசுரும் கால் ஜீவனுமா எம்மகன் நின்னுட்டிருந்த அந்தக் கோலத்தைப் பார்த்தப்போ... அவன் கண்ணைப் பார்த்தப்போ...’’ - மதுவை முன் பின் அறியாத நம்மையே உலுக்கிய காட்சி, பெற்றவளை எப்படிக் கொன்றிருக்கும்?!

மதுவின் இரண்டாவது தங்கை சந்திரிகா, ‘`அவன் மனநிலை பாதிக்கப்பட்டதற்கான காரணம், ரொம்ப சமீபத்துலதான்  அவனோட ஃப்ரெண்டு மூலமா எங்களுக்குத் தெரியவந்தது.

“கடவுள்கிட்ட போறேன்!”

பாலக்காட்டுல அவன் வேலைக்குப் போனப்போ, ஒரு பொண்ணும் இவனும் காதலிச்சிருக்காங்க. இவன் நேரா அவங்க வீட்டுக்கே போய் பொண்ணு கேட்டிருக்கான். அவங்க வசதியான ஆளுங்களாம். ‘என்ன தைரியம்டா உனக்கு’னு இவனை பயங்கரமா அடிச்சு,  கயித்துல தலைகீழா கட்டி, கிணத்துல தொங்கவிட்டுட்டாங்களாம். அப்போ அவனோட தலையில பலமா அடிபட்டிருக்கு. விஷயத்தை மூடி மறைச்சு, அடிதடி கேஸ்னு இவன் மேல புகார் கொடுத்து ஜெயில்ல போட்டுட்டாங்க. இதெல்லாம் எங்களுக்குத் தெரியாமலேயே போயிருச்சு. எங்க ரெண்டு பேர் கல்யாணத்துக்குக் கூட எங்க அண்ணன் வரலை. என்னிக்காச்சும் ஒருநாள் வந்திருவான்னு நம்பிட்டு இருந்தோம். ஆனா... அடிபட்டு சாகணும்னு...’’ என்றவர், தேம்புகிறார்.

‘`நாங்க அவனைக் கண்டுக்காம விட்டுட்டோம், அதுதான்  அவன் சாகுறதுக்குக் காரணம்னு, மதுவை அடிச்சுக் கொன்னு செல்ஃபி எடுத்துப் போட்டவங்க பக்கம் உள்ளவங்க எங்க குடும்பத்தைப் பழி சொல்றாங்க. பொம்பளைங்க நாங்க எங்களால எவ்வளவு முடியுமோ அவ்வளவு முயற்சி பண்ணிட்டோம். நாங்க பட்ட பாடு அந்தக் கடவுளுக்குத்தான் தெரியும். மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு ஜீவன், பசிக்காக அரிசி திருடினதுக்கு, காட்டுக்குள்ள தேடிப்போய் அவனை உயிரே போற அளவுக்கு அடிச்சு, அதை செல்ஃபி எடுத்துப்போட்டவங்களுக்கு, அவன் செத்ததுக்கு அப்புறமும், ‘ஐயோ பாவம், இப்படிப் பண்ணிட்டோமே’னு தோணலை...’’ என்று கலங்கினார்.

‘`நான் பி.காம் முடிச்சதும் எஸ்.டி கோட்டாவுல போலீஸ் ஆக விண்ணப்பிச்சேன். அன்னிக்கு அதுக்கான பரீட்சையை எழுதிட்டு வீட்டுக்கு வர்றேன், ‘உங்க அண்ணனை அடிச்சே கொன்னுட்டாங்க’னு சொன்னாங்க. எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா?’’ என்றவர், வழியும் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, ``இன்னும் ஒரு நேர்காணல் இருக்கு. ஆனா, அரசாங்கம் எங்க குடும்பத்துல ஒரு ஆளுக்கு வேலை தர்றதா சொல்லியிருந்ததால, நேர்காணலுக்கு முன்னரே அந்த வேலையை எனக்கு உறுதிசெய்து கொடுத்துட்டாங்க. மது ஆசைப்பட்டபடி நான் போலீஸ் ஆகப்போறேன். அவன் உயிர் போயி எனக்குக் கிடைச்சிருக்கிற வேலை இது. நான் வாங்கப்போறது பாவத்துக்கான சம்பளமோனு எனக்கு உறுத்தலா இருக்கு’’ என்ற மகளை, பரிதவிப்புடன் அணைத்துக்கொள்கிறார் மல்லி.