Published:Updated:

11 வயது சிறுமி... 17 மனித மிருகங்கள்!

11 வயது சிறுமி... 17 மனித மிருகங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
11 வயது சிறுமி... 17 மனித மிருகங்கள்!

வெட்ட வெட்டத் துளிர்க்கும் விஷ விருட்சம்!

குற்றம் சாட்டப்பட்டவர்களில் வயதில் மூத்தவருக்கு 65 வயது. அவர்களில் ஐந்து பேர் 55 வயது கடந்தவர்கள். அவர்களுக்கு மகன்வழியிலோ, மகள்வழியிலோ பேத்தி இருந்தால், இந்த வயதில்தான் இருப்பார். ஆனால், இந்த முகத்தில் மழலையையோ, இந்த உடலில் தங்கள் பேத்தியையோ அவர்கள் உணரவில்லை. 11 வயது சிறுமி... 17 மனித மிருகங்கள்... நாம் அடைந்திருக்கும் நாகரிகம் இவர்களின் மனங்களை இப்படியா மாற்றியிருக்கிறது என்று வெட்கித் தலைகுனியச் செய்யும் கொடூரம் சென்னை அயனாவரத்தில் நிகழ்ந்திருக்கிறது. பெண் குழந்தையைப் பெற்றவர்களை மட்டுமல்ல, மொத்த தமிழ்நாட்டையும் இது அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

‘வட இந்தியர்கள் வசிக்க மட்டுமே’ என்று தீர்மானித்து 350 குடியிருப்புகளுடன் உருவாக்கப்பட்டிருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பில்தான், அந்த சின்னஞ்சிறுக் குழந்தைக்கு எதிரான பாலியல் வன்முறை ஆயுதத்தை இந்த மிருகங்கள் கையாண்டுள்ளன. செவித்திறன் இல்லாத, ஓரளவே பேச முடிந்த, சரியாகச் சொல்வதென்றால், ‘சிறப்புக் குழந்தை’க்கான தகுதியுடனே அவள் இருந்திருக்கிறாள். அந்த அப்பார்ட்மென்டில் வேலைபார்க்கும் லிஃப்ட் ஆபரேட்டர்கள், பிளம்பர், வாட்ச்மேன் என்று 17 மிருகங்கள் இணைந்து ஒரு நாள், இரண்டு நாள் அல்ல... தொடர்ந்து ஏழு மாதங்கள் இந்தக் கொடூரத்தைச் செய்திருக்கின்றன. வெட்ட வெட்டத் துளிர்க்கும் விஷ விருட்சமாக இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கின்றன.

11 வயது சிறுமி... 17 மனித மிருகங்கள்!

இந்த 17 பேர் மீது, கொலை முயற்சி, கொலை மிரட்டல் மற்றும் போக்சோ சட்டப்பிரிவு 6, 10, 12 ஆகியவற்றின்கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. எல்லோரும் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். போக்சோ சட்டப்பிரிவின்கீழ் குற்றவாளிகளுக்குத் தூக்கு தண்டனை கிடைப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. ‘இந்த 17 பேருக்கும் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராக மாட்டோம்’ என்று சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் மோகனகிருஷ்ணன் கூறியிருக்கிறார்.

சம்பவம் நடந்து முடிந்தபிறகு இப்போது முழுமையாகப் போலீஸ் கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டுள்ளது அந்த அப்பார்ட்மென்ட். அங்கு வீட்டுவேலை பார்க்கும் நடுத்தர வயதுப் பெண்மணி ஒருவர், நடந்ததை நம்மிடம் விவரித்தார். ‘‘அந்த பொம்பளைப் புள்ள சூதுவாது தெரியாத குழந்தைம்மா. அவங்க அப்பாவும் அம்மாவும் அழறதைப் பார்க்க முடியலை. அந்தக் குழந்தையும் அழுதுட்டு கிடக்கு. அந்தப் புள்ளைய அசிங்கமா போட்டோ புடிச்சு வெச்சுட்டு, அதைக் காட்டிக் காட்டியே கொடுமை பண்ணிட்டு இருந்திருக்கானுங்க. அந்தக் குழந்தையை சீரழிச்சவனுங்கள்ல ஆறு பேர் இளவயசுப் பசங்க. அவனுங்களை நான் தினமும் பார்த்திருக்கேன். பார்க்க நல்ல புள்ளைங்க மாதிரி இருப்பானுங்க. இப்படியொரு அநியாயத்தைச் செஞ்சுருக்கானுங்க. இதுல 60 வயசுல இருக்கிறவன் எல்லாம் கூட்டு. அந்தப் புள்ள உடம்பெல்லாம் காயம் இருக்காம். எத்தனை நாளா இப்படி பண்ணிக்கிட்டிருந்தானுங்கன்னு தெரியலை. அந்தக் குழந்தையோட அக்கா ஒண்ணு வெளியூர்ல படிச்சுக்கிட்டு இருக்குது. அது வீட்டுக்கு வந்திருக்கிறது தெரியாம, இவனுங்க வழக்கம்போல அந்தப் புள்ளையை மிரட்டிச் சீரழிக்கப் போக, அக்காகிட்ட மாட்டிக்கிட்டானுங்க. இல்லேன்னா, இப்போகூட விஷயம் தெரியாமதான் இருந்திருக்கும்’’ என்று பதைபதைப்புடன் சொன்னார்.

அங்கு குடியிருக்கும் ஒரு தம்பதியினர், அதன்பின் நடந்ததை நம்மிடம் விவரித்தனர். ‘‘போலீஸுக்குப் புகார் போனதும், அப்பார்ட்மென்ட்டில் வேலை பார்க்கும் எலெக்ட்ரீஷியன்கள், ஸ்வீப்பர்கள், செக்யூரிட்டிகள், லிஃப்ட் ஆபரேட்டர்கள் ஆகியோரை வளைத்துவிட்டார்கள். துணி அயர்ன் செய்யும் ஆட்கள், அப்பார்ட்மென்ட் உள்ளே வந்து காய்கறி விற்பவர்கள், பேப்பர், பால் பாக்கெட் போடுகிறவர்கள் என்று ஒருவர் விடாமல் லிஸ்ட் எடுத்தார்கள். மொத்தம் 55 பேரை விசாரணைக்குக் கொண்டுவந்து விட்டார்கள். இந்த 55 பேரைத் தனித்தனியாக விசாரித்து முடித்தபின், மொத்தமாகவும் ரூமில் வைத்து விசாரித்தார்கள்.

கடைசியாக அந்தக் குழந்தையை மறைவான இடத்தில் நிற்க வைத்து ஆட்களை அடையாளம் காட்டச் சொன்னபோது, 16 பேரை அடையாளம் காட்டினாள். அத்துடன் விடவில்லை. ‘அந்தக் கும்பலில் ஒருவன் இங்கே இல்லை’ என்றும் ஜாடையாகச் சொல்லியிருக்கிறாள். உடனே அந்த 16 பேரை மட்டும் தனியாகக் கொண்டுசென்று போலீஸார் ‘ஸ்பெஷல் ட்ரீட்மென்ட்’ கொடுத்து விசாரித்தனர். ‘கூடுவாஞ்சேரி சுரேஷ்பாபுதான் சார் இன்னும் சிக்கலை’ என அவர்கள் உண்மையைச் சொல்லிவிட்டனர். இதைத் தொடர்ந்து, அவரையும் மடக்கினார்கள். இந்தக் கொடூரத்தைச் செய்த ஆட்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகக்கூட இருக்கலாம்.’’ என்றபடிக் கண்கலங்கினர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
11 வயது சிறுமி... 17 மனித மிருகங்கள்!

‘ஆறு மாதகாலம் இந்தக் கொடுமை நடந்திருப்பதாகச் சொல்கிறார்கள். குழந்தையின் பெற்றோருக்கு இதுபற்றிக் கொஞ்சம்கூடச் சந்தேகம் வராமல் போனது எப்படி?

‘‘குழந்தையின் அப்பா காலையில் வீட்டிலிருந்து கிளம்பி விட்டால் மாலையில் லேட்டாகத்தான் வீடு திரும்புவார். அம்மா வீட்டில்தான் இருப்பார். அந்தக் குழந்தைக்கு வீட்டில் இருக்கவே பிடிக்காது. விளையாட்டுத்தனமாக வெளியில் வந்துவிடுவாள். எப்போதும் கையில் பொம்மை மாதிரி ஏதாவது வைத்துக் கொஞ்சிக் கொண்டிருப்பாள். எல்லோர்மீதும் மிகுந்த பாசம் கொண்டவள். ஆறு மாதங்களுக்கு முன்பு, அவளுக்கு முதல் ‘அட்டெம்ப்ட்’ நடந்திருக்கிறது. அப்போதே வீட்டுக்கு வந்து, அவளுக்குத் தெரிந்த மொழியில் கன்னத்தைக் காட்டி அழுதிருக்கிறாள். அப்பார்ட்மென்ட்டுக்கு வெளியிலும், கார்டன் ஏரியாவிலும் முள்செடிகள் அதிகம் என்பதால், அதனால் காயம் என்று நினைத்து, வீட்டில் மருந்து போட்டிருக்கிறார்கள். ‘இனிமேல் நீ, வெளியில் விளையாடப் போக வேண்டாம்’ என்று தடை போட்டு விட்டார்கள். காயம் ஆறியதும் எப்போதும் போல் மீண்டும் விளையாடப் போனவள் அடுத்தடுத்த ‘அட்டெம்ப்ட்’களை எதிர்கொண்டிருக்கிறாள். அந்தக் குழந்தையிடம் கத்தியைக் காட்டிப் பணிய வைத்திருக்கிறார்கள். ‘இதை வெளியில் சொன்னால், உன் குடும்பத்தில் அனைவரையும் கொலை செய்து விடுவோம்’ என்று காட்டிய பயமும் அவளது கொஞ்சநஞ்சப் பேச்சையும் நிறுத்தி விட்டது” என்றனர்.

‘பல நாள்கள் லிஃப்ட்டில் அலறல் சத்தம் கேட்டிருக்கிறது’ என்று இப்போது சிலர் போலீஸில் சொல்லியிருக்கிறார்களாம். ஆறு மாத காலமாகக் கேட்டும் கேட்காமல் இருந்த காதுகள், இப்போது வாய்வழியாகப் பேசத் தொடங்கியிருக்கின்றன.

- ந.பா.சேதுராமன், ஆ.சாந்தி கணேஷ்
படங்கள்: கே.ஜெரோம்

‘‘கொடூர சம்பவம் தரும் பாடம்!’’

‘‘இ
னி குழந்தைகளுக்கு குட் டச், பேட் டச் மட்டும் சொல்லிக்கொடுத்து ஒரு பயனும் இல்லை. அதைத் தாண்டி ‘உன்னை டிரஸ் இல்லாம போட்டோ எடுத்து வெச்சிருக்கேன். ஆபாசமா வீடியோ எடுத்து வெச்சிருக்கேன். உன் அம்மா, அப்பாவை கொன்னுடுவேன்’ என்பது போன்ற மிரட்டல்களுக்குப் பயப்படாமல், தனக்கு நடப்பது அத்தனையையும் பெற்றோரிடம் வெளிப்படையாகச் சொல்வதற்குப் பழக்க வேண்டும். இது இந்தச் சம்பவம் நமக்கெல்லாம் சொல்லித் தந்திருக்கிற பாடம்’’ என்று சொல்லும் குழந்தைகள் உளவியல் நிபுணர் ஜெயந்தினி, சில எச்சரிக்கை தகவல்களையும் சொல்கிறார்.  

``பாலியல் வன்கொடுமைக்கு ஆளான குழந்தைகள், அதிகமாகப் பயப்பட ஆரம்பிப்பார்கள். குறிப்பாக, சம்பந்தப்பட்டவர்களைப் பார்க்கும்போது ரொம்பவும் பயப்படுவார்கள்; அல்லது முகத்தை அருவருப்பாக வைத்துக்கொள்வார்கள். புதுப் பழக்கமாக அம்மாவின் கூடவே இருக்க நினைப்பார்கள். வீட்டுக்கு யார் வந்தாலும் அம்மாவின் பின்னால் ஒளிந்துகொள்வார்கள். பாதிக்கப்பட்ட சில குழந்தைகள் இரவில் தூங்கவே மாட்டார்கள்; சில குழந்தைகள் அதிகமாகத் தூங்குவார்கள். நன்றாகப் படித்துக்கொண்டிருந்த குழந்தைகள் திடீரெனக் குறைவாக மார்க் வாங்குவார்கள். விளையாடப் போக மாட்டார்கள். எப்போதும் ஏதோ யோசனையிலேயே இருப்பார்கள். சோர்வாகக் காணப்படுவார்கள். குறிப்பாக, ‘வயிறு வலிக்குது’ என்று சொல்வார்கள்.

பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் ஒரே ஒருவர் மட்டும் என்ன நடந்தது என விசாரியுங்கள். அது அம்மா அல்லது பாட்டியாக இருப்பது நல்லது. பாதிக்கப்பட்ட குழந்தையின் எதிரில், நடந்த சம்பவத்தைப் பற்றி விவாதிக்காதீர்கள்; அழாதீர்கள். பாலியல் வன்கொடுமை சம்பந்தப்பட்ட செய்திகள் அவர்கள் கண்களில் படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். நடந்த சம்பவத்தைக் குழந்தை கொஞ்சம் கொஞ்சமாக மறப்பதற்கு உதவி செய்யுங்கள். ‘அம்மா இருக்கிறேன் உனக்கு’ என்று தட்டிக்கொடுத்து, அவர்களுக்குப் பிடித்த விஷயங்களை அவர்களைச் செய்யத் தூண்டும்போது, கொடும் நினைவுகளிலிருந்து மீள்வார்கள்; குணம்பெறுவார்கள்’’ என்றார்.