Published:Updated:

மசாஜ் சென்டர்களா... ‘மஜா’ சென்டர்களா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மசாஜ் சென்டர்களா... ‘மஜா’ சென்டர்களா?
மசாஜ் சென்டர்களா... ‘மஜா’ சென்டர்களா?

டாப்லெஸ்... சாண்ட்விச்... பாடி டு பாடி... சோபி

பிரீமியம் ஸ்டோரி

‘ஒரு குட்டி தாய்லாந்துபோல நம் மாநிலம் உருமாறிவருகிறதே... நம் மாநிலத்தின் மானம் காற்றில் பறக்கிறதே... ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்க மாட்டார்களா?’ என்று என்று வேதனையுடன் புலம்புகிறார்கள் புதுச்சேரி மக்கள்.

“புதுச்சேரியில் பாலியல் தொழிலும், பாலியல் கும்பலின் நெட்வொர்க்கும் பரந்துவிரிந்துவருகிறது. இதில், காவல்துறையினருக்கு மிக முக்கியப் பங்கு உள்ளது” என்று குற்றச்சாட்டு எழுந்த நிலையில் “விபசாரத்தில் லட்சங்களைக் குவிக்கும் புதுவை போலீஸ்” என்ற தலைப்பில், 14.08.2016 தேதியிட்ட ஜூ.வி-யில் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தோம். அதன்பின்னும், சமூகவிரோதிகளுடன் கைகோத்துக்கொண்டு, பாலியல் தொழிலை விரிவுபடுத்தும் வேலையில்  தீவிரம் காட்டிவருகிறார்கள் காவல்துறையினர்.

“தற்போது, புதுச்சேரியில் கடும் நிதிச்சிக்கல்  காரணமாக, பல தொழில்கள் திக்குமுக்காடி வருகின்றன. இந்த நிலையில், இங்கு கொடிகட்டிப் பறக்கும் ஒரே தொழில் பாலியல் தொழில் மட்டும்தான்” என்று கமென்ட் அடிக்கின்றனர் பொதுமக்கள்.

மசாஜ் சென்டர்களா... ‘மஜா’ சென்டர்களா?

புதுச்சேரியில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இலைமறை காய்மறையாக நடந்துவந்த பாலியல் தொழில், தற்போது ‘மசாஜ் சென்டர்’, ‘பியூட்டி பார்லர்’ என்ற பெயர்களில் புதிய அவதாரங்களை எடுத்துள்ளது. ‘கால்கேர்ள்ஸ் பாண்டிச்சேரி’ என்று கூகுளில் தட்டினால், ஆயிரக்கணக்கில் செல்போன் எண்கள் வந்து குவிகின்றன.

அப்படி ஓர் எண்ணுக்குத் தொடர்புகொண்டு பேசியபோது, எதிர்முனையில் எடுத்துப் பேசியது ஓர் ஆண் குரல். தயங்கி, சந்தேகப்பட்டு, தீவிர விசாரணைகள் நடத்தி, அதன்பிறகு விஷயத்தை ஆரம்பிக்கும் நடைமுறை எல்லாம் இல்லை. “ஒரு மணி நேரத்துக்கு மூவாயிரம் ரூபாய். ஒரு நைட்டுக்கு பத்தாயிரம் ரூபாய். 15 வயசுலருந்து 20 வயசு வரை பொண்ணுங்க இருக்காங்க. பெரிய ஹோட்டல்ல கூட ரெடி பண்றோம். அதுக்கு தனி சார்ஜ்” என நேரடியாகவே விஷயத்தைச் சொல்லிமுடித்தார் அந்த நபர்.

இன்னொருபுறம் மசாஜ் சென்டர்கள், ஆயுர்வேதிக் ஸ்பா, பியூட்டி பார்லர்கள் என்று பல்வேறு பெயர்களில் கொடிகட்டிப் பறக்கிறது பாலியல் தொழில். மற்ற இடங்களில் ‘மசாஜ்’ என்பதற்கும், ‘ஸ்பா’ என்பதற்கும் அர்த்தங்கள் வேறு. ஆனால், புதுச்சேரியில் இதுபோன்ற இடங்களில் விதவிதமான பெயர்களில் ‘மசாஜ்’கள் உண்டு. ‘பாடி டு பாடி’, ‘சாண்ட்விச்’, ‘சோபி’, ‘டாப்லெஸ்’ என 10-க்கும் மேற்பட்ட மசாஜ் பெயர்களைக் குறிப்பிட்டு இணையதளத்தில் அவர்கள் போடும் போட்டோக்கள் அனைத்தும், தாய்லாந்துக்கே சவால் விடும் ரகம்.

இப்படியான ஒரு மசாஜ் சென்டரின் தொடர்பு எண்ணுக்கு நாம் அழைத்தபோது, “குட் ஈவினிங் சார். இங்கே ஐந்து விதமான மசாஜ் இருக்கு. இருபது வயசுக்கு உள்ளே பத்து பொண்ணுங்க இருக்கோம். ‘ஹேப்பி எண்டிங்’, ஃபுல் சர்வீஸ் எல்லாமே இருக்கு. 1,500 ரூபாய்லருந்து 5,000 ரூபாய்வரை பேக்கேஜ் இருக்கு” என்று கொஞ்சலாகப் பேசியது ஒரு பெண் குரல்.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தொகுதியான நெல்லித்தோப்பில், ஏராளமான ‘மசாஜ்’ சென்டர்கள் இயங்கிவருகின்றன. குறிப்பாக, மணிமேகலை அரசுப் பெண்கள் பள்ளிக்கு அருகில் மட்டும் மூன்று இடங்களில் இந்தத் தொழில் கொடிகட்டிப் பறக்கிறது. லெனின் வீதியில் பிரதான அரசியல் கட்சி ஒன்றின் அலுவலகம் உள்ளது. அதை லேண்ட்மார்க் ஆகச் சொல்லித்தான், ‘அதற்கு அருகே வாருங்கள்’ என்று சொல்கிறார்கள். நெல்லித்தோப்பில் மார்க்கெட் பகுதி அருகே பிஸியாக இயங்கும் மசாஜ்(!) சென்டர் ஒன்று உள்ளது.

இந்த மசாஜ் சென்டர்களுக்கு பின்னணியில் இருந்து ஆதரவுக்கரம் நீட்டுபவர்கள் யார்? ஒரு சம்பவம் சொன்னால் உங்களுக்கே விளங்கும். சமீபத்தில் ரவுடி கும்பல் ஒன்று, இங்கிருக்கும் மசாஜ் சென்டருக்குப் போய்  மாமூல் கேட்டு மிரட்டியது. உடனே மசாஜ் சென்டர் நடத்தும் பெண்மணி யாருக்கோ போன் செய்தார். சில நிமிடங்களில், பயங்கர ஆயுதங்களுடன் ஒரு கும்பல் வாகனங்களில் வந்திறங்கியது. இரு தரப்புக்கும் ஏற்பட்ட மோதலில் மசாஜ் சென்டர் நடத்தும் பெண்ணுக்கும், மசாஜுக்காக அங்கு வந்திருந்த ஒரு இளைஞருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. அங்கிருந்த பெண்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினர். மசாஜ் செய்துகொள்ள வந்திருந்த ஓர் இளைஞர், உள்ளாடையுடன் வெளியே தப்பியோடினார். அந்தப் பகுதியே கலவரபூமிபோல மாறியது. தாக்குதல் நடத்தியவர்கள் கூலாக அங்கிருந்து வாகனத்தில் ஏறிச் சென்றனர்.

மசாஜ் சென்டர்களா... ‘மஜா’ சென்டர்களா?

இந்தச் சம்பவங்கள் அனைத்தும், போலீஸ் கண்ணெதிரிலேயே நடைபெற்றன. அந்த மோதலைத் தடுக்கவோ, அந்த ரவுடிகளைப் பிடிக்கவோ எந்த முயற்சியையும் போலீஸார் செய்யவில்லை. அந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குகூட இதுவரை பதிவு செய்யப்படவில்லை. முதல்வர் தொகுதியிலேயே இந்த நிலை என்றால், மற்ற பகுதிகளில் ஆட்டம் எப்படி இருக்கும் என்பதை யூகித்துக்கொள்ளலாம். 

“புதுச்சேரி முழுக்க நூற்றுக்கும் அதிகமான இடங்களில் குடிசைத் தொழில்போல மசாஜுடன்கூடிய மஜா நடக்கிறது. முதலில் வெளிமாநிலப் பெண்களை மட்டுமே பாலியல் தொழிலுக்குப் பயன்படுத்திவந்த கும்பல், தற்போது ஆசை வார்த்தைகளைக் கூறி ஏழ்மை நிலையில் உள்ள உள்ளூர்ப் பெண்கள் பலரையும் இதில் ஈடுபடுத்திவருகிறார்கள். அவர்களுக்கு  தொழில்ரீதியாக மசாஜ் எதுவும் தெரியாது. ஆனால், வரும் கஸ்டமர்கள்மீது எண்ணெய் அல்லது  பவுடர் ‘அப்ளை’ செய்து தடவிக்கொடுப்பார்கள். ஒரு கட்டத்தில், மசாஜ் என்பதுமாறி ‘அடுத்த கட்டத்துக்கு’ப் போய்விடுவார்கள்.

போலீஸ், ரவுடிகள், பத்திரிகையாளர்கள் என்று சொல்லிக்கொள்ளும் சிலர், கலாசார காவலர்களாகக் காட்டிக்கொள்ளும் லெட்டர்பேடு கட்சிகள் மற்றும் இயக்கங்கள் எனப் பலரின் ஆதரவுடன்தான், இந்த அக்கிரமங்கள் நடக்கின்றன. அதனால், இதுபற்றிப் புகார் அளிப்பதற்குக்கூட பயமாக இருக்கிறது. இப்படி, புற்றீசல்கள்போல தினந்தோறும் புதிதுபுதிதாக மசாஜ் சென்டர்கள் முளைப்பதற்கு, போலீஸ்தான் முக்கியக் காரணம். ஒரு முட்டுச்சந்தில், பத்துக்குப் பத்து இடத்தில் நடக்கும் மசாஜ் சென்டரில்கூட நாளொன்றுக்கு சராசரியாக 50 ஆயிரம் ரூபாய் கல்லா கட்டுகிறார்கள். அதனால், ஒவ்வொரு ஏரியாவிலும் சாதாரணமாக மாதத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் முதல்  ஒரு  லட்சம் ரூபாய் வரை மாமூல் போகிறது. அதனால்தான், போலீஸாரே  இந்தத் தொழிலை ஊக்குவிப்பதுபோல நடந்துகொள்கிறார்கள்” என்று குமுறுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

இத்தகைய மசாஜ் சென்டர்கள் வட்டாரத்தில் பேசியபோது, “இந்தத் தொழில் செய்வதால் எங்களுக்கு எந்தச் சிக்கலும், தொந்தரவும் கிடையாது. நாங்கள் சுதந்திரமாகத் தொழில் செய்துவருகிறோம். காரணம், கீழ்மட்டம் முதல் மேல்மட்டம்வரை எல்லோரையும் நன்றாக கவனித்துவிடுகிறோம்.  எங்களில் சிறிய லெவலில் தொழில் நடத்துபவர்களே ஒவ்வொரு மாதமும் ரூ.50 ஆயிரம்வரை கப்பம்கட்டுகிறார்கள் என்றால், பெரிய அளவில் செய்பவர்கள் எவ்வளவு கப்பம் கட்டுவார்கள், எங்களுக்கு எவ்வளவு வருமானம் வரும் என்று நீங்களே கணக்குப்போட்டுக்கொள்ளுங்கள்” என்றனர்.

கரைவேட்டிகள், தொழிலதிபர்கள் என வி.ஐ.பி-க்களின் களியாட்டங்களுக்குப் பெரிய ஹோட்டல்களில் ‘ஸ்பா’ என்ற பெயரில் தனி ஏற்பாடு உள்ளது. இந்த ‘ஸ்பா’க்களின் எண்ணிக்கையும் சமீபகாலமாக புதுச்சேரியில் அதிகரித்துள்ளது.

- ஜெ.முருகன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு