Published:Updated:

யூடியூபைப் பார்த்து மதுபானம் தயாரிப்பு! - 6 பேரை சிக்கவைத்த சரக்கு `டேஸ்ட்'

யூடியூபைப் பார்த்து மதுபானம் தயாரிப்பு! - 6 பேரை சிக்கவைத்த சரக்கு `டேஸ்ட்'
யூடியூபைப் பார்த்து மதுபானம் தயாரிப்பு! - 6 பேரை சிக்கவைத்த சரக்கு `டேஸ்ட்'

யூடியூபில் பார்த்து சரக்கு தயாரித்து விற்ற கும்பலை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்த சம்பவம் ஜெயங்கொண்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே கார்குடி கிராமத்தில் சிலர் போலியாக மதுபானம் தயாரிப்பதாக வந்த தகவலையடுத்து கலால் இன்ஸ்பெக்டர் ஆய்வுசெய்தனர். இதில் கார்குடி கிராமத்தைச் சேர்ந்த ராஜலிங்கம் என்பவர் தனது வீட்டில் போலியாக மது தயாரிக்க பயன்படும் மூலப்பொருள்கள் மற்றும் மது பாட்டில்களின் மேல் ஒட்டுவதற்காகப் பயன்படுத்தப்படும் அரசு ஸ்டிக்கர் ஆகியவற்றைப் பதுக்கி வைத்திருந்தார். அவை அனைத்தையும் கலால் போலீஸார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது போலி மது தயாரிப்பதற்காக இவருக்கு உடந்தையாக இருந்த கோயம்புத்தூரைச் சேர்ந்த கலை மன்னன், மணி, பெங்களுரைச் சேர்ந்த முனியாண்டி, கடலூரைச் சேர்ந்த ஜோதி ஆகியோரையும் போலீஸார் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், கள்ளத்தனமாக விற்பனை செய்ய நான்கு மூட்டை புகையிலைப் பொருள்கள் வைத்திருந்த அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முருகேசன், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன் ஆகியோரையும் பிடித்து அவர்களிடமிருந்து தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்த போலீஸார், 6 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


வழக்கை விசாரித்து வரும் காவல்துறையினரிடம் பேசினோம். ``இருபது பேர் சேர்ந்துகொண்டு குழுவாகச் செய்திருக்கிறார்கள். இந்தக் கும்பல் பணத்துக்காக மிகவும் சிரமப்பட்டுக்கொண்டிருந்த நேரத்தில் பல கிராமங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வீதிக்கு வந்து போராடிக்கொண்டிருந்த நேரத்தில், `நாம் ஏன் சரக்கு தயாரிக்கக் கூடாது' என்று யோசித்திருக்கிறார்கள். அதை எப்படிச் செய்ய வேண்டும் என்பதை யூடியூபில் பார்த்து சரக்கைத் தயார் செய்திருக்கிறார்கள். பின்பு அரசு ஸ்டிக்கரை கோயம்புத்தூரில் உள்ள அச்சகத்தில் பிரின்ட் செய்திருக்கிறார்கள். போலி மதுபானத்துக்கு உண்டான மூலப்பொருள்களை பெங்களூருவிலிருந்து கொண்டு வந்துள்ளனர். பாட்டில்களுக்கு, டாஸ்மாக் கடைகளில் குடித்துவிட்டு வைத்திருந்த பாட்டில்களை குறைந்த விலையில் வாங்கி அதைக் கழுவி மதுபானத்தை அடைத்து விற்றிருக்கிறார்கள். அரசு விடுமுறை நாள்களில்கூட சரக்கு தட்டுப்பாடு இல்லாமல் கொடுத்தாலும், அரசு சரக்குக்கும் போலி சரக்குக்கும் டேஸ்ட் வித்தியாசம் உள்ளது என்று ஒருசிலர் எங்களுக்குத் தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் விசாரணை நடத்தினோம். இதில் ராஜலிங்கம் மற்றும் அவருக்கு உடந்தையாகச் செயல்பட்ட 6 பேரைக் கைது செய்திருக்கிறோம். இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது கூடிய விரைவில் தெரியவரும்'' என்றார்.