Published:Updated:

சாத்தான்குளம் அருகே வீட்டின் ஓட்டைப் பிரித்து 111 பவுன் நகைகள், ரூ.2.5 லட்சம் கொள்ளை!

சாத்தான்குளம் அருகே வீட்டின் ஓட்டைப் பிரித்து 111 பவுன் நகைகள், ரூ.2.5 லட்சம் கொள்ளை!
சாத்தான்குளம் அருகே வீட்டின் ஓட்டைப் பிரித்து 111 பவுன் நகைகள், ரூ.2.5 லட்சம் கொள்ளை!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகில் வீட்டின் ஓட்டைப் பிரித்து 111 பவுன் தங்க நகைகள், ரூ.2.50 லட்சம் ரொக்கப் பணத்தை திருடிச்சென்ற கொள்ளையர்களை போலீஸார் தேடி வருகின்றனர். இவற்றின் மதிப்பு ரூ.27.75 லட்சம் என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ளது சித்தன்குடியிருப்பு. இக்கிராமத்தைச் சேர்ந்தவர் பால்துரை. இவர் ஜோசியம் பார்க்கும் தொழில் செய்து வருகிறார். பால்துரை தன் மனைவி சரோஜாவுடன் ஓட்டு வீட்டில் வசித்து வந்தார். இவர்களது மகள்களுக்கு திருமணமாகிவிட்டது. இந்த நிலையில், பால்துரை ஓட்டு வீட்டின் அருகிலேயே மற்றொரு வீடு ஒன்றையும் கட்டியுள்ளார். பகலில் ஓட்டு வீட்டில் ஜோசியம் சொல்வதும், இரவு பக்கத்து வீட்டில் தூங்கச் செல்வதும் வழக்கம்.

இந்நிலையில், நேற்று இரவில் வழக்கம்போல் ஓட்டு வீட்டிலிருந்து பக்கத்து வீட்டுக்கு பால்துரை சென்று விட்டார். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது, ஓட்டு வீட்டின் மேல்பகுதியில் ஓடுகள் பிரிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பீரோவைப் பார்த்தபோது, அதிலிருந்து 111 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.2.5 லட்சம் ரொக்கப்பணம் திருடப்பட்டது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.27.75 லட்சம் ஆகும்.

இதுகுறித்து பால்துரை சாத்தான்குளம் போலீஸில் புகார் செய்தார். தொடர்ந்து, வீட்டில் விரல் ரேகை நிபுணர்கள், தடயவில் நிபுணர்கள் ஆய்வு செய்தனர். தூத்துக்குடியிலிருந்து வரவழைக்கப்பட்ட மோப்பநாய் மூலமும் சோதனை செய்யப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.