Published:Updated:

பொட்டு சுரேஷ் கொலை வழக்கு: அட்டாக் பாண்டி கூட்டாளி கைது

பொட்டு சுரேஷ் கொலை வழக்கு: அட்டாக் பாண்டி கூட்டாளி கைது
பொட்டு சுரேஷ் கொலை வழக்கு: அட்டாக் பாண்டி கூட்டாளி கைது
பொட்டு சுரேஷ் கொலை வழக்கு: அட்டாக் பாண்டி கூட்டாளி கைது

மதுரை: பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த பிரவீண்குமாரை இன்று போலீசார் கைது செய்தனர்.

பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் தொடர்புடைய 18 பேரில் 16 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு விட்டனர். கடைசியாக அட்டாக் பாண்டியையும், அவரது நெருங்கிய கூட்டாளியுமான பிரவீண் குமாரையும் போலீஸார் தேடி வந்தனர். இந்த நிலையில் பிரவீண்குமார் சென்னை அருகே பதுங்கியிருப்பதை அறிந்து தனிப்படை போலீசார் அங்கே விரைந்து சென்று அவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட பிரவீண்குமார், இதே கொலை வழக்கில் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள ஆரோக்கியபிரபுவின் தம்பி. இவர்களுடைய தந்தை பன்னீர்செல்வம், பாரம்பரியமான கிறிஸ்தவ குடும்பத்தைச் சேர்ந்தவர். அட்டாக் பாண்டியின் அக்காள் மகன் திருச்செல்வமும், ஆரோக்கியபிரபுவும் ஒரே இடத்தில் படித்தவர்கள். அவரோடு அடிக்கடி சென்றதால் அட்டாக் பாண்டியின் வீட்டுக்கும் நெருக்கமானார் ஆரோக்கியபிரபு. இதேபோல பிரபுவின் தம்பி பிரவீணும் அட்டாக் பாண்டியுடன் நெருக்கமானார்.

தன் மருமகன் திருச்செல்வத்தைவிட இவர்கள் மீது தான் அதிக நம்பிக்கை வைத்திருந்தார் அட்டாக் பாண்டி. இந்த இருவரில் ஒருவர் மூலமாகத் தான் அட்டாக்கைத் தொடர்பு கொள்ள முடியும் என்கிற அளவுக்கு நெருக்கம். துரைதயாநிதியே, ஆரோக்கியபிரபுவை தொடர்பு கொண்டு தான், அட்டாக் பாண்டியுடன் பேசினாராம்.

அவனியாபுரம் அருகே இருந்த அட்டாக் பாண்டியின் கிரஷரில் வரவு-செலவு எல்லாவற்றையும் கவனித்தவர் பிரவீண் குமார் தான். அட்டாக் பாண்டியின் கேஷியராக இருந்த அவருக்கும் கொலையில் முக்கிய பங்கு உண்டு என்கிறார்கள்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பே பிரவீண் பிடிபட்டுவிட்டதாகவும், அவரை தனி இடத்திற்கு கொண்டு சென்று போலீஸார் துருவித்துருவி விசாரித்ததாகவும் சொல்கிறார்கள். ஆனால், இன்று தான் அவர் கைது செய்யப்பட்டதை பதிவு செய்துள்ளனர்.

இன்று மாலைக்குள் அவர் மதுரை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, ரிமாண்ட் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் அட்டாக் பாண்டியையும் பிடித்து விடுவோம் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் மதுரை போலீசார்.

கே.கே.மகேஷ்

படம்: ஆர்.எம்.முத்துராஜ்