Published:Updated:

10 ரூபாய்க்கு ஆசைப்பட்டு ஐம்பதாயிரத்தை இழந்த சென்னை பைனான்சியர்!

10 ரூபாய்க்கு ஆசைப்பட்டு ஐம்பதாயிரத்தை இழந்த சென்னை பைனான்சியர்!
10 ரூபாய்க்கு ஆசைப்பட்டு ஐம்பதாயிரத்தை இழந்த சென்னை பைனான்சியர்!

சென்னை திருவான்மியூரில் 10 ரூபாய்க்கு ஆசைப்பட்டு 50,000 ரூபாயை பைனான்சியர் இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலை கொட்டிவாக்கம் திருவீதியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பூமிநாதன். வட்டிக்குப் பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். இவர் திருவான்மியூர் மேற்கு குளக்கரை தெருவில் உள்ள வங்கிக்கு சைக்கிளில் சென்றார். அங்கு தன்னுடைய அக்கவுன்டிலிருந்து 50,000 ரூபாயை எடுத்தார். பிறகு திருவான்மியூர் மார்க்கெட் பகுதிக்குச் சென்று பொருள்களை வாங்கினார். பிறகு வீட்டுக்கு சைக்கிளில் புறப்பட்டார். பணத்தை சைக்கிளின் முன்பக்கத்தில் வைத்திருந்தார். அப்போது, திருவான்மியூர் கிழக்குக் கடற்கரைச் சாலை புத்து கன்னியம்மன் கோயில் அருகில் செல்லும்போது அவ்வழியாகச் சென்றவர், `சார், உங்கள் பணம் ரோட்டில் கிடக்கிறது' என்று கூறியுள்ளார். அதைக்கேட்டவுடன் பூமிநாதன், அந்த நபர் கூறிய இடத்தைப் பார்த்துள்ளார். அப்போது அங்கு 10 ரூபாய் நோட்டு கீழே கிடந்தது. அதை எடுக்க சைக்கிளை பூமிநாதன் நிறுத்தினார். பிறகு பத்து ரூபாயை எடுத்துக்கொண்டு சைக்கிளை எடுத்துக்கொண்டு வீட்டுக்குச் சென்றார்.

வீட்டுக்குச் சென்ற அவர், பணம் வைத்திருந்த பையை சைக்கிளின் ஹேண்ட்பாரிலிருந்து எடுக்க முயன்றார். பையில் பணம் இல்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், என்ன நடந்தது என்று யோசித்தார். பிறகு திருவான்மியூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீஸாரிடம் பத்து ரூபாய் எடுக்கச் சென்ற விவரத்தை பூமிநாதன் கூறினார். அப்போது போலீஸார் உங்களின் கவனத்தை திசை திருப்பி பணத்தை கொள்ளையடித்துள்ளனர் என்று தெரிவித்தனர். தொடர்ந்து பூமிநாதனிடம் பணத்தைக் கொள்ளையடித்த இடத்துக்கு போலீஸார் சென்றனர். அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது, சைக்கிளில் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் ஒரு வாலிபர் காத்திருந்தார். பூமிநாதன் சைக்கிளுக்குப் பின்னால் பைக்கில் வந்த நபர்தான் அவரிடம் பத்து ரூபாய் கீழே கிடக்கும் தகவலைத் தெரிவித்துள்ளார். பத்து ரூபாயை பூமிநாதன் எடுக்க சைக்கிளை நிறுத்தியபோது அங்கு காத்திருந்த நபர், பணத்தைக் கொள்ளையடித்துவிட்டு பைக்கில் ஏறிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. அவர்கள் யார் என்று போலீஸார் தேடிவருகின்றனர்.