Published:Updated:

`அம்புகளுடன் எங்களையே பார்த்துக் கொண்டிருந்தனர்’ - சென்டினல் தீவை நோட்டமிட்ட போலீஸார்  தகவல்

`அம்புகளுடன் எங்களையே பார்த்துக் கொண்டிருந்தனர்’ - சென்டினல் தீவை நோட்டமிட்ட போலீஸார்  தகவல்
`அம்புகளுடன் எங்களையே பார்த்துக் கொண்டிருந்தனர்’ - சென்டினல் தீவை நோட்டமிட்ட போலீஸார்  தகவல்

அந்தமானில் உள்ள சென்டினல் தீவும், அங்கிருக்கும் பழங்குடியின மக்கள் குறித்தும் தான் கடந்த ஒரு வார காலமாக இந்தியா முதல் அமெரிக்கா வரை பேச்சாக உள்ளது.

பழங்குடியின மக்களுக்குக் கடவுள் குறித்து போதனை செய்யப்போவதாக சென்டினல் தீவுக்குள் தனியாகச் சென்றிருக்கிறார் அமெரிக்க போதகர் ஜான் ஆலன். உள்ளே நுழைந்தவுடன் சென்டினல் மக்கள் அவரை நோக்கி அம்புகளை எய்தியிருக்கிறார்கள். அதையும் மீறி, ஜான் ஆலன் உள்ளே செல்ல, அவரைத் தாக்கி  அவரது உடலை இழுத்துச் சென்றுள்ளனர். இதை ஆலன் அங்கு நுழையச் சட்டவிரோதமாக உதவியவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். அவரின் உடலையும் அங்கேயே புதைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. 

அவர் உள்ளே செல்ல உதவியவர்கள் கடலிலே படகை நிறுத்தியுள்ளனர். ஆலன் மட்டும் தனியாக உள்ளே சென்றிருக்கிறார். இந்தச் சம்பவம் நவம்பர் 17-ம் தேதி நடைபெற்றுள்ளது. தற்போது வரை ஆலனின் உடல் கைப்பற்றப்படவில்லை. அவரின் உடலைக் கைப்பற்றுவது சிரமம் என அத்தீவு குறித்தும், சென்டினல் மக்கள் குறித்தும் ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். வெளிநபர்கள் செல்லத் தடை விதிக்கப்பட்ட அந்தத் தீவுக்கு ஆலனை அழைத்துச் செல்ல உதவிய 6 மீனவர்கள் உள்ளிட்ட 7 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில் அந்தத் தீவில், இருக்கும் ஆலனின் உடலை வெளியே எடுத்து வர முயற்சிகள் நடைபெற்று வருகிறது.  இது தொடர்பான தகவல்களும் தற்போது வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் அந்தமான் போலீஸ் அதிகாரி, தெபேந்திரா பதக் தலைமையில் அதிகாரிகள் வடக்கு சென்டினல் தீவுப்பகுதியில் ஆய்வு செய்யச் சென்றிருக்கிறார்கள். பாதுகாப்புக்கருதி கடற்கரையில் இருந்து சுமார்  400 மீட்டர் தொலைவில் படகை நிறுத்தி பைனாகுலர் கருவி உதவியுடன் அந்தத் தீவை நோட்டமிட்டுள்ளனர். இது தொடர்பாக அதிகாரி பதக் ஏ.எப்.பி ( AFP) -க்கு அளித்தப் பேட்டியில்,  ``பைனாகுலர் உதவியுடன், மீனவர்கள் கடைசியாக ஆலனைப் பார்த்ததாக சொன்ன இடத்தைப் பார்வையிட்டோம். அப்போது பழங்குடியின மக்கள் கையில் அம்புகளுடன் எங்களைப் பார்ப்பதை பார்த்தோம். மோதலைத் தவிர்ப்பதற்காக அங்கிருந்து திரும்பிவிட்டோம்” என்றார்.

ஆலனுக்கு நடந்த சம்பவத்தைப் போன்றே, கடந்த  2006-ம் ஆண்டு சட்ட விரோதமாக அந்த தீவுக்குள் நுழைந்த இரண்டு மீனவர்கள் கொல்லப்பட்டனர். அந்த வழக்கு தொடர்பாகவும் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். உள்ளே நுழையும் வெளியாட்களைக் கொன்ற பின்னர் அவர்கள் என்ன செய்வார்கள் என்பது குறித்தும் தெரிந்துகொள்ள பழைய வழக்கை ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்த அதிகாரி பதக்,  ``2006 -ம் ஆண்டு மீனவர்கள் விஷயத்தில் நடந்ததைப் போன்று நடக்குமா என்பதைக் கண்காணித்து வருகிறோம். கடந்த முறை அந்த மீனவர்களின் உடலை ஒருவாரம் கழித்து மூங்கிலில் கட்டி கடலில் விட்டுவிட்டனர்” என்றார் 

மேலும், அந்த மக்களின் மனநிலையைப் புரிந்துகொள்ள மானுடவியலாளர்களிடமும் ஆலோசனை நடத்தி வருகிறார்கள் போலீஸார். இது ஒரு கொலை சம்பவம் என்றாலும், பழங்குடியினர் மீது எந்த வழக்கும் தொடுக்கப்படாது என அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக சென்டினல் சம்பவம் தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டிருந்த அதிகாரி பதக்,  ``வடக்கு சென்டினல் தீவு வழக்கு அதிக சவால் நிறைந்ததாக உள்ளது” என்று குறிப்பிட்டிருந்தார்.