Published:Updated:

`ரவுடியைக் கொன்றது ஏன்?’ - பெண்ணிடம் கிடுக்கிப்பிடி விசாரணை

லோகேஸ்வரன்.கோ
`ரவுடியைக் கொன்றது ஏன்?’ - பெண்ணிடம் கிடுக்கிப்பிடி விசாரணை
`ரவுடியைக் கொன்றது ஏன்?’ - பெண்ணிடம் கிடுக்கிப்பிடி விசாரணை

வேலூரில் ரவுடியைக் கொன்ற பெண்ணை இரண்டு நாள்கள் கஸ்டடியில் எடுத்த போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

வேலூர் சத்துவாச்சாரி இந்திரா நகர் குருத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ் (35). பிரபல ரவுடி வசூர் ராஜாவின் நெருங்கிய கூட்டாளியான இவர் மீது கொலை, கொள்ளை உட்பட 30-க்கும் அதிகமான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. ரவுடி தங்கராஜுக்கும், அதே பகுதியில் வாழும் தண்டுமாரி (39) என்பவருக்கும் தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த 17-ம் தேதி இரவு குடிபோதையில் இருந்த தங்கராஜ், தண்டுமாரியின் வீட்டுக்குச் சென்றார். அப்போது ஏற்பட்ட தகராறில் தண்டுமாரி மற்றும் அவரின் மகன், தங்கை ஆகிய மூவரும் சேர்ந்து ரவுடி தங்கராஜை கொடூரமான முறையில் அடித்துக் கொன்றனர். இதையடுத்து, வீட்டுக்குள்ளேயே உடலை கிடத்தி விட்டு மூவரும் தலைமறைவாகி விட்டனர்.

இதுபற்றி சத்துவாச்சாரி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். ரவுடி கொலையில் முக்கிய குற்றவாளியான தண்டுமாரி கடந்த 19-ம் தேதி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், வேலூர் மத்திய பெண்கள் சிறைக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில், தண்டுமாரியை கஸ்டடியில் எடுத்து விசாரிப்பதற்காக சத்துவாச்சாரி போலீஸார், வேலூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். நேற்று மாலை முதல் இரண்டு நாள்கள் கஸ்டடியில் விசாரிக்க மாஜிஸ்திரேட் அனுமதி வழங்கினார். இதையடுத்து, சிறையில் அடைக்கப்பட்டிருந்த தண்டுமாரியைக் கஸ்டடியில் எடுத்த போலீஸார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கொல்லப்பட்ட ரவுடியுடன் நீண்ட நாள்களாகத் தொடர்பு இருந்ததால், கொள்ளையடிக்கப்பட்ட பணம், நகைகள் தண்டுமாரியிடம் ரவுடி கொடுத்திருந்தாரா, வேறு ஏதேனும் கொலை உள்ளிட்டவற்றில் ரவுடி ஈடுபட்டதற்கான தகவல்கள் இவருக்குத் தெரியுமா என்பது பற்றி தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், தலைமறைவாக இருக்கும் தண்டுமாரியின் மகன் மற்றும் தங்கையையும் போலீஸார் தேடி வருகின்றனர்.