Published:Updated:

`என் இறுதி இலக்கை அடைந்துவிட்டேன்!'- மலேசியா ஏர்போர்ட்டில் தவித்த ஹஸன் நெகிழ்ச்சி #mystory_hassan

`என் இறுதி இலக்கை அடைந்துவிட்டேன்!'- மலேசியா ஏர்போர்ட்டில் தவித்த ஹஸன் நெகிழ்ச்சி #mystory_hassan
`என் இறுதி இலக்கை அடைந்துவிட்டேன்!'- மலேசியா ஏர்போர்ட்டில் தவித்த ஹஸன் நெகிழ்ச்சி #mystory_hassan

ஹஸன் ஒரு சிரியா அகதி. ஹஸனுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் மேனேஜராக வேலை. கடந்த 2011-ல் சிரியாவில் உள்நாட்டு யுத்தம் தொடங்குகிறது. இதன்காரணமாக தனது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க முடியாமல் போகிறது. ஆனால், அவர் சிரியாவுக்குத் திரும்பிச் செல்ல விரும்பவில்லை. சிரியா சென்றால் ஒன்று கைது செய்யப்படலாம் அல்லது ராணுவத்தில் சேர கட்டாயப்படுத்தலாம் என்ற அச்சம் ஏற்படுகிறது. எனவே, விதிகளுக்குப் புறம்பாக ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து விடுகிறார். இதன்காரணமாக கடந்த 2016-ம் ஆண்டு கைது செய்யப்படுகிறார்.

2017-ம் ஆண்டு ஹஸனின் பாஸ்போர்ட் இரண்டாடுகளுக்கு தற்காலிகமாக புதுப்பிக்கப்படுகிறது. இதையடுத்து மூன்று மாத டூரிஸ்ட் விசாவில் அவர் மலேசியாவுக்கு அனுப்பப்படுகிறார். ஜனவரி 2018-ல் அவரின் விசா காலாவதியாகிறது. இதையடுத்து துருக்கி செல்வதற்கான முயற்சிகளை மேற்கொள்கிறார். ஆனால், அது தோல்வியில் முடிந்து விடுகிறது. இதையடுத்து அவர்  கம்போடியாவுக்குப் பயணமாகிறார். அங்கிருந்து அவர் திருப்பி அனுப்பப்படுகிறார். வேறு வழியில்லாமல் மலேசியா விமானநிலையத்தில் தஞ்சமடைகிறார். விமான நிலையத்தை விட்டு வெளியேறினால் கைது செய்யப்படுவார். வேறு வழியின்றி பயணிகள் வரவேற்பு பகுதியில் தங்குகிறார்.

ஏப்ரல் மாதத்தில் கனடா செல்வதற்காக விண்ணப்பிக்கிறார் ஹஸன். இந்தப் போராட்டங்களுக்கு இடையே தனது நிலை குறித்த தகவல்களை  #mystory_hassan ,#syrian_stuck_at_airport என்ற ஹேஸ்டேக்குகள் மூலம் ட்விட்டர், ஃபேஸ்புக்கில் இந்த சமூகத்துக்கு தெரியப்படுத்திக்கொண்டிருந்தார். சமூகவலைதளம்தான் ஹஸனை வெளிஉலகுக்கு அடையாளம் காட்டியது எனலாம். உறவுகளைப் பிரிந்து தவிக்கும் ஹஸனுக்கு இந்த சமூகவலைதளம் ஒரு ஆறுதலான விஷயமாக அமைந்தது. விமான ஊழியர்களின்  இரக்கத்தால் இவருக்கு உணவு கிடைத்து வந்தது. விமானநிலைய நாற்காலிகளில் தனது பொழுதை கழித்துக்கொண்டிருந்தார்.

அக்டோபர் 1-ம் தேதிக்குப் பிறகு ஹஸனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்கள் மெளனமானது. ஹஸன் குறித்த எந்தத்தகவலும் அதற்கு பின்பு அதில் அப்டேட் செய்யப்படவில்லை. இந்த நிலையில்தான் நேற்று ஒரு வீடியோவை ஹஸன் பதிவிட்டார்.  `பிரேக்கிங் நியூஸ்’ என்ற தலைப்பில் பதிவிட்ட அந்த வீடியோவில்,  ``என்னைப் பார்ப்பதற்கு கற்கால மனிதன் போன்று தோற்றமளிக்கலாம். கடந்த இரண்டு மாதங்களாக உங்களுடன் தொடர்பில் இல்லாததற்கு மன்னித்து விடுங்கள். இன்றும் நாளையும் எனக்கு முக்கியமான நாள். அதாவது நிகழ்காலம் மற்றும் எதிர்காலம். இன்று நான் தைவான் விமானநிலையத்தில் இருக்கிறேன். நாளை நான் என் இறுதி இலக்காக கனடாவை அடைவேன். கடந்த 8 வருடங்கள் தனிமையில் பொழுதைக் கழித்தது கொடுமையானது . இந்த 10 மாதங்களில் குளிர் மற்றும் வெயில் வாட்டியது. குடும்ப உறுப்பினர்களின் உதவியில்லாமல் இது சாத்தியப்பட்டிருக்காது. கனடாவில் இருக்கும் என் நண்பர்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அகதிகள் முகாம்களில் உள்ள அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள்” எனப் பேசியுள்ளார். 

கடந்த ஜூலை மாதத்தில் ஹஸன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஏர் ஆசியா விமானத்தின் புகைப்படம் ஒன்றைப்பதிவிட்டிருந்தார். விமானத்தில் தற்போது யார் வேண்டுமானாலும் பறக்கலாம் (NOW EVERYONE CAN FLY) என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. இந்த வாசகத்தை நான் தினமும் படித்துக்கொண்டிருக்கிறேன். ஆனால், இதில் சில திருத்தங்கள் செய்ய வேண்டும். யார் வேண்டுமானாலும் பறக்கலாம் ஹஸனைத் தவிர என தனது சோகத்தை பதிவிட்டிருந்தார். அந்த வாசகத்தில் திருத்தம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை ஏனெனில் ஹஸனும் தற்போது பறக்க இருக்கிறார்.