Published:Updated:

`நான் திருடன்னு கர்ப்பிணி மனைவியிடம் சொல்லிடாதீங்க' - போலீஸிடம் கதறிய செல்போன் கொள்ளையன்

`நான் திருடன்னு கர்ப்பிணி மனைவியிடம் சொல்லிடாதீங்க' - போலீஸிடம் கதறிய செல்போன் கொள்ளையன்
`நான் திருடன்னு கர்ப்பிணி மனைவியிடம் சொல்லிடாதீங்க' - போலீஸிடம் கதறிய செல்போன் கொள்ளையன்

நான் திருடன்னு என் மனைவிக்குத் தெரியாது. அவளின் ஆசையை நிறைவேற்றதான் செல்போனை திருடவந்தேன் என கொள்ளையன் போலீஸாரிடம் தெரிவித்துள்ளான்.

சென்னையில் செல்போன் பறிப்புச் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. அதைத்தடுக்க போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், அதிரடி நடவடிக்கை எடுத்துவருகிறார். இதனால்தான் திருவல்லிக்கேணி காவல் மாவட்டத்தில் முதல்முறையாக திருட்டு செல்போன்களை மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தி.நகர் காவல் மாவட்டத்தில் திருட்டு செல்போன்களை வாங்கி விற்றவர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து செல்போன் திருடர்களுக்கு சென்னை மாநகர போலீஸார் கடிவாளம் போட்டுவரும் நேரத்தில் மயிலாப்பூரில் இரண்டு செல்போன் கொள்ளையர்கள் சிக்கியுள்ளனர். அவர்களை சப்-இன்ஸ்பெக்டர் அகஸ்டினும், காவலர் பன்னீர்செல்வமும் இணைந்து பிடித்த விதம் பாராட்டுதலுக்குரியது.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``கடந்த சில தினங்களுக்கு முன் சாந்தோம் பகுதியில் செல்போன் திருட்டு சம்பவம் நடந்தது. அப்போது எங்களுக்குக் கிடைத்த சிசிடிவி கேமரா பதிவில் பைக்கில் வந்த இரண்டு பேர் செல்போனைப் பறித்துச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. அதன்  மூலம் செல்போன் கொள்ளையர்களைத் தேடிவந்தோம். இந்தச் சமயத்தில்தான் மயிலாப்பூர் ஆர்.கே.சாலையில் சப்-இன்ஸ்பெக்டர் அகஸ்டினும், காவலர் பன்னீர்செல்வமும் ரோந்துப் பணியில் ஈடுபட்டுகொண்டிருந்தனர். அப்போது, ஆர்.கே.சாலையில் செல்போனில் பேசியடி இளம்பெண் ஒருவர் நடந்து சென்றார். அவரைப் பின்தொடர்ந்து பைக்கில் இரண்டு பேர் வந்தனர். பைக்கில் பின்னால் இருந்த நபர், செல்போனில் பேசிய பெண் குறித்த தகவலை பைக் ஓட்டியவரிடம் கூறினார். இதனால் பைக், நடந்து சென்ற இளம்பெண்ணைத் தாண்டி 100 மீட்டர் தூரத்தில் நிறுத்தப்பட்டது. பைக்கில் வந்தவர்களின் நடவடிக்கைகளைப் பார்த்த ரோந்து போலீஸாருக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது.  இதனால், காவலர் பன்னீர்செல்வத்தை அந்த இளம்பெண்ணின் பின்னால் செல்லும்படி கூறினார். அவரும் சென்றார். 

 பைக்கின் அருகே இளம்பெண் செல்போனில் பேசியபடி சென்றபோது பின்னால் அமர்ந்திருந்த நபர் செல்போனை பறிக்க முயன்றார். அப்போது காவலர் பன்னீர்செல்வம் செல்போனை பறித்தவர்களைப் பிடிக்க முயன்றார். அதற்குள் பைக்கில் சென்ற சப்-இன்ஸ்பெக்டர் அகஸ்டின் மின்னல் வேகத்தில் சென்று கொள்ளையர்களின் பைக்கின் சாவியை பறித்தார். பிறகு பைக்கை ஓட்டியவர் எங்களிடம் முதலில் சிக்கிக் கொண்டார். எங்களைப் பார்த்ததும் பைக்கில் பின்னால் அமர்ந்திருந்தவர் அங்கிருந்து தப்பி ஓடினார். அவர், அந்தப்பகுதியில் உள்ள வீடுகளின் மாடியில் ஏறி ஒவ்வொரு மாடியாக தாண்டினார். இதனால் நாங்கள் அவரைப் பின்தொடர்ந்தோம். ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகம் அருகில் செல்போன் கொள்ளையன் வந்தபோது அவரை எஸ்.ஐ அகஸ்டின், ஏட்டு லோகு மற்றும் போலீஸார் மடக்கிப் பிடித்தனர்.

இதையடுத்து இருவரிடம் விசாரித்தோம். பைக்கை ஓட்டியவர் பெயர் ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த பாஷித் இப்ராஹிம் (20), பின்னால் அமர்ந்திருந்தவர் கொடுங்கையூரைச் சேர்ந்த பாலாஜி (21) எனத் தெரியவந்தது. இவர்கள் இருவரும் நண்பர்கள். கடந்த சில ஆண்டுகளாக பைக் திருட்டு, செல்போன் பறிப்பு ஆகிய சம்பவங்களில் ஈடுபட்டுவருகின்றனர். இவர்கள் மீது 4 வழக்குகள் நிலுவையில் உள்ளன. சாந்தோம் பகுதியில் செல்போனை பறித்துச் சென்ற புகாரின்பேரில் இருவரையும் கைதுசெய்துள்ளோம். அவர்களிடமிருந்து 5 விலை உயர்ந்த பைக்குகளைப் பறிமுதல் செய்துள்ளோம். திருடும் செல்போன்களை தி.நகரில் சிக்கிய அப்துல்ரகுமானிடம் விற்றதாக இருவரும் தெரிவித்தனர். தொடர்ந்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளோம்" என்றனர். 

  செல்போன் கொள்ளையர்கள் பாலாஜி, பாஷித் ஆகியோரிடம் விசாரித்தபோது பாலாஜி, முக்கிய தகவல் ஒன்றை போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். எதற்காக இந்தச் சின்ன வயதில் திருடுகிறாய் என்று பாலாஜியிடம் போலீஸார் கேட்டதற்கு `நான் காதலித்து திருமணம் செய்துகொண்டேன். என் மனைவி 5 மாதம் கர்ப்பமாக இருக்கிறார். என்னிடம் பணமில்லை. இதனால் செல்போனைத் திருடி அவரின் ஆசையை நிறைவேற்ற முடிவு செய்தேன். செல்போனைத் திருட நானும் பாஷித்தும் மயிலாப்பூருக்கு வந்தோம். செல்போனை பறிக்கும் எங்களின் முயற்சி தோல்வியடைந்துவிட்டது. என் மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல கையில் பணமில்லை. இதனால் செல்போனை திருடவந்தேன். நான் திருடன்னு என் மனைவிக்குத் தெரியாது. தயவு செய்து அவளிடம் சொல்லிடாதீங்க. அவள் அதைத் தாங்கிக்கொள்ள மாட்டாள்' என்று கெஞ்சியுள்ளார்.   

பாலாஜியும் பாஷித்தும் திருடிய பைக்குகளை உரிமையாளர்கள் அடையாளம் தெரியாதளவுக்கு மாற்றிவிடுவதில் கைதேர்ந்தவர்கள். அதாவது, விலை உயர்ந்த பைக்குகளைத் திருடும் இவர்கள், பைக்கின் இன்ஜின் மற்றும் உதிரி பாகங்களை உடனடியாக மாற்றிவிடுவார்கள். தற்போது போலீஸார் பறிமுதல் செய்த பைக்குகளின் ஆவணங்களில் உள்ள  இன்ஜின், பைக்கின் சேஸ் நம்பர்களுக்கும் பைக்கில் உள்ள இன்ஜின், சேஸ் நம்பர்களுக்கும் வித்தியாசம் உள்ளது. இதனால் அந்த பைக்குகள் யாருடையது என்பது குறித்து போலீஸார் விசாரித்துவருகின்றனர். 

செல்போன் பறிப்பு கொள்ளையர்களைப் பிடிக்க உதவி கமிஷனர் உக்கிரபாண்டி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் செந்தில்முருகன் தலைமையில் தனிப்படை மயிலாப்பூரில் அமைக்கப்பட்டது. இந்தத் தனிப்படையினர் சிறப்பாகச் செயல்பட்டு செல்போன், பைக் திருடர்கள் பாலாஜி, பாஷித் இப்ராகிம் ஆகியோரைப் பிடித்துள்ளனர். தனிப்படையினரை போலீஸ் உயரதிகாரிகள் வெகுவாகப் பாராட்டினர்.