Published:Updated:

`எங்க திட்டப்படி இன்ஸ்பெக்டர் எஃப்ஐஆர் போட்டார்!' - ரூ.40 லட்சம் எண்ணெய் திருட்டில் அதிர்ச்சி வீடியோ

`எங்க திட்டப்படி இன்ஸ்பெக்டர் எஃப்ஐஆர் போட்டார்!' - ரூ.40 லட்சம் எண்ணெய் திருட்டில் அதிர்ச்சி வீடியோ
`எங்க திட்டப்படி இன்ஸ்பெக்டர் எஃப்ஐஆர் போட்டார்!' - ரூ.40 லட்சம் எண்ணெய் திருட்டில் அதிர்ச்சி வீடியோ

தருமபுரி மாவட்டம், தொப்பூர் இன்ஸ்பெக்டர் ஆனந்தவேல், பஞ்சாயத்துத் தலைவர் வல்லமுத்து மற்றும் லாரி டிரைவர் பிரபு ஆகிய மூவர் கூட்டணியில், 40 லட்ச ரூபாய் மதிப்புள்ள தேங்காய் எண்ணெய்யைத் திருடிவிட்டு, இன்சூரன்ஸ் பணத்தை மோசடி செய்ய லாரியை எரிந்ததுகுறித்த வழக்கு விசாரணை தருமபுரியில் நடந்துவருகிறது. 

இந்த லாரி எரிப்பு வழக்கில், தொப்பூர் இன்ஸ்பெக்டர் ஆனந்தவேலு சிக்குவது தருமபுரி போலீஸுக்கு பெரும் அவமானம் ஏற்படும் என்பதால், எப்படியாவது இன்ஸ்பெக்டர் ஆனந்தவேலுவை மட்டும் லாரி எரிப்பு வழக்கில் விடுவிக்க வேண்டும் என்று 'ஜோடிக்கப்பட்ட வழக்கு விசாரணையை' தருமபுரி போலீஸ் செய்து முடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து காவல் துறை வட்டாரத்தில், ''இன்ஸ்பெக்டர் ஆனந்தவேலுவைக் காப்பாற்ற உண்மையை மறைத்து ஜோடிக்கப்பட்ட விசாரணையை நடத்தி முடிக்க எங்கள் உயர் அதிகாரிகள் பார்க்கின்றனர். இதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. காரணம், அந்த விபத்து நடந்தபோது, குடும்பத்தோடு வந்த இரண்டு கார்களும், கேஸ் லாரியும் சிக்கிக்கொண்டது. அந்த கேஸ் லாரியில் மட்டும் கேஸ் இருந்திருந்தால், இரண்டு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு ஒரு உயிர்கூட மிஞ்சியிருக்காது. இதுபோன்ற மோசமான எண்ணத்துடன் செயல்பட்ட காவல் ஆய்வாளரை சும்மா விட்டுவிடக் கூடாது. நீங்களே பாருங்கள் என லாரி டிரைவர் பிரபுவின் ஒப்புதல் வாக்குமூலம் அடங்கிய வீடியோ பதிவு சி.டி-யைக் கொடுத்தனர். 

லாரி டிரைவர் பிரபு வாக்குமூலத்தில், எங்கள் திட்டப்படி இன்ஸ்பெக்டர் ஆனந்தவேலுவிடம் ரூ.5 லட்சம் பேசி, 50 ஆயிரம் அட்வான்ஸ் கொடுத்தோம். 40 லட்ச ரூபாய் மதிப்பிலான தேங்காய் எண்ணெய்யை லாரியில் இருந்து முக்கால் பாகம் இறக்கிவிட்டு, கால் பங்கு தேங்காய் எண்ணெய்யுடன் லாரியை, கடந்த அக்டோபர் மாதம் 21-ம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு, தொப்பூர் மலைப் பகுதியைக் கடந்து சென்றுகொண்டிருந்தபோது, வேஸ்டேஜ் துணியை ஆயில் பெட்ரோல் கலந்து முன் பக்கமாகவும், பின் பக்க டயரிலும் வைத்துக் கொளுத்திவிட்டோம். ஆனால், அப்போது எதிர்பாராத விதமாக இரண்டு கார்களும், கேஸ் லாரியும் தீ விபத்தில் சிக்கிக்கொண்டன. அது பெரும் விபத்தாக மாறிவிட்டது. காலி கேஸ் லாரி என்பதால், நாங்க அனைவரும் தப்பித்தோம். ஆனாலும், நாங்க போட்ட திட்டபடியே இன்ஸ்பெக்டர் ஆனந்தவேலு எஃப்ஐஆர் போட்டுக் கொடுத்தார். ஆனால், திருடிப் பதுக்கிவைத்த தேங்காய் எண்ணெய்யை விற்பனை செய்ய, சேலம் மார்க்கெட்டுக்கு கொண்டுசென்றபோது, தேங்காய் எண்ணெய் பாட்டிலில் இருந்த பார்கோடு மூலம் கண்டுபிடிக்கப்பட்டு சிக்கிக் கொண்டோம் என்று அந்த வீடியோ முடிகிறது'' என்று தெரிவித்தனர்.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட எஸ்.பி பண்டிட் கங்காதரிடம் விளக்கம் கேட்டோம். ''தொப்பூர் இன்ஸ்பெக்டர் ஆனந்தவேலுவை தருமபுரி ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றி விசாரணை மேற்கொண்டோம். காவல் அதிகாரியாக இருந்துகொண்டு குற்றச் சம்பவத்துக்குத் துணைபோன காவல் ஆய்வாளரை இன்று சஸ்பெண்ட் செய்ய உள்ளேன்'' என்று தெரிவித்தார்.

உண்மையில், தருமபுரி காவல் துறைக்கு இதுதான் பெரும் தலைகுனிவு என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.