Published:Updated:

ஒருதலைக் காதல் விபரீதம் - நெல்லையில் இளம்பெண் கொடூரமாக குத்திக் கொலை!

பி.ஆண்டனிராஜ்
ஒருதலைக் காதல் விபரீதம் - நெல்லையில் இளம்பெண் கொடூரமாக குத்திக் கொலை!
ஒருதலைக் காதல் விபரீதம் - நெல்லையில் இளம்பெண் கொடூரமாக குத்திக் கொலை!

நெல்லை மாவட்டம் வள்ளியூரில், ஜவுளிக்கடையில் வேலை செய்துவந்த இளம்பெண், ஒருதலைக் காதல் காரணமாக கொடூரமாக குத்திக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, ரவீந்தரன் என்பவரைப் பிடித்து  போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

நெல்லை மாவட்டம் வள்ளியூர் பஸ் நிலையம் எதிரே ஜவுளிக்கடை உள்ளது. இந்தக் கடையில் வெளியூரைச் சேர்ந்த இளம்பெண்கள் விடுதியில் தங்கியிருந்து பணியாற்றிவருகின்றனர். பேருந்து நிலையம் அருகில் இருப்பதால், அந்தக் கடையில் எப்போதும் கூட்டம் அதிகமாக இருப்பது வழக்கம்.  பணி முடிந்து கடையிலிருந்து விடுதிக்குத் திரும்பிக்கொண்டிருந்த இளம்பெண்ணை, ஒருவர் கத்தியால் குத்தினார்.

அந்தப் பெண்ணின் கழுத்தில் கத்தியால் குத்தியதால், அந்தப் பெண் மயங்கிச் சரிந்தார். அவரது உடலில் இருந்து பெருமளவு ரத்தம் வெளியேறியதால், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விசாரணையில், அந்தப் பெண் தக்கலையைச் சேர்ந்த மெர்சி (21) என்பது தெரியவந்தது. அவரைக்  கொலைசெய்த நபரை அங்கிருந்த பொதுமக்கள் மடக்கிப்பிடித்து போலீஸில் ஒப்படைத்தார்கள்

போலீஸாரிடம் பிடிபட்ட நபர், திருக்குறுங்குடி அருகே உள்ள மகிழடி கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் மகன் ரவீந்தரன் என்பது தெரியவந்துள்ளது. ரவீந்தரன், மெர்சியை ஒருதலையாகக் காதலித்துவந்துள்ளார். அவர், சில தினங்களுக்கு முன்பு தனது காதலைத் தெரிவித்திருக்கிறார். ஆனால், மெர்சி காதலிக்க மறுத்துள்ளார். அதனால், அவரைக் கொலைசெய்யும் திட்டத்துடன் கடந்த இரு தினங்களாகச் சுற்றிவந்துள்ளார். இந்த நிலையில், இன்று மெர்சி  பேருந்து நிலையம் அருகே நடந்து வந்தபோது, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கழுத்தில் குத்திக் கொலைசெய்ததாகப் பிடிபட்ட ரவீந்திரன் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, மெர்சியை ரவீந்திரன் கொலை செய்வதற்காக விரட்டும் காட்சிகள், அருகில் உள்ள சிசிடிவி-யில் பதிவாகியுள்ளது. அது தற்போது வெளியாகியிருக்கிறது. ஒருதலைக் காதல் காரணமாக அப்பாவி இளம்பெண் உயிர் பறிபோன சம்பவம், வள்ளியூர் மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.