Published:Updated:

ரயிலில் பிடிபட்ட 144 கிலோ வெள்ளிக்கட்டி! - சேலம் கும்பலிடம் வருமான வரித்துறை தீவிர விசாரணை

வெள்ளிக்கட்டிகளுடன் பிடிபட்ட சேலம் கும்பல்
வெள்ளிக்கட்டிகளுடன் பிடிபட்ட சேலம் கும்பல்

ஆந்திராவிலிருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில், 144 கிலோ வெள்ளிக்கட்டிகள், 32 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்ட சம்பவத்தில், சேலம் கும்பலிடம் வருமான வரித்துறை தீவிர விசாரணை நடத்திவருகிறது.

ஆந்திராவிலிருந்து கேரள மாநிலம் கொல்லம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில், தங்கம், வெள்ளி ஆகியவை கடத்திவரப்படுவதாக ரயில்வே பாதுகாப்புப் படையின் சென்னை கோட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சென்னை கோட்ட குற்றப்புலனாய்வுப் பிரிவு இன்ஸ்பெக்டர் மதுசூதனன், சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான தனிப்படை போலீஸார் உடனடியாக ஆந்திர மாநிலம், ரேணிகுண்டா ரயில் நிலையத்துக்கு விரைந்தனர். அப்போது, விசாகப்பட்டினத்திலிருந்து வந்த கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி தீவிர சோதனை நடத்தினர்.

காட்பாடி ரயில் நிலையம்
காட்பாடி ரயில் நிலையம்

எஸ்-6, எஸ்-7 ஆகிய பெட்டிகளிலிருந்த நான்கு பேர் சந்தேகப்படும்படி பெரிய பைகளுடன் அமர்ந்திருந்தனர். அவர்களிடமிருந்த பைகளை வாங்கி சோதனை செய்தபோது, 144 கிலோ வெள்ளிக்கட்டிகள், கொலுசு நகைகள் மற்றும் ரூ.32 லட்சம் ரொக்கப் பணம் இருந்தது. விசாரணையில், அவர்கள் சேலத்தைச் சேர்ந்த சதிஷ்குமார், பிரகாஷ், சுரேஷ், நித்தியானந்தம் ஆகியோர் என்பதும், வெள்ளிக்கட்டிகள் மற்றும் பணத்துக்கான உரிய ஆவணங்கள் அவர்களிடம் இல்லை என்பதும் தெரியவந்தது.

அதற்குள் ரயில், வேலூர் மாவட்டம், காட்பாடி ரயில் நிலையத்தை வந்தடைந்துவிட்டதால், வெள்ளிக்கட்டிகள், பணத்தைக் கைப்பற்றிய போலீஸார், பிடிபட்ட நான்கு பேரையும் காட்பாடி ரயில்வே பாதுகாப்புப் படை நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். தொடர் விசாரணையில், நான்கு பேரும் சேலத்திலுள்ள வெள்ளிக் கொலுசு பட்டறையில் பணியாற்றுவதாகவும், ஆந்திர மாநிலத்திலிருந்து கொலுசு செய்வதற்குத் தேவையான வெள்ளிக்கட்டிகளை வாங்கிவந்ததாகவும் கூறினர்.

வெள்ளிக்கட்டிகளுடன் பிடிபட்ட சேலம் கும்பல் மற்றும் போலீஸார்
வெள்ளிக்கட்டிகளுடன் பிடிபட்ட சேலம் கும்பல் மற்றும் போலீஸார்

இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட 144 கிலோ வெள்ளிக்கட்டிகள், ரூ.32 லட்சம் பணத்துடன் அவர்கள் நான்கு பேரும் சென்னை வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் பணியாற்றும் கொலுசுப் பட்டறை உரிமையாளர், ஆடிட்டர் வந்து உரிய ஆவணங்களைச் சமர்பிக்கும்பட்சத்தில், அபராதம் வசூலிக்கப்பட்டு, நான்கு பேரும் விடுக்கப்படுவார்கள் என போலீஸார் தெரிவித்துள்ளனர். ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான வெள்ளிக்கட்டிகள் சிக்கியிருப்பதால், பிடிபட்ட நபர்களிடம் வருமான வரித்துறையின் கூடுதல் இயக்குநர் பொறுப்பிலுள்ள உயரதிகாரிகளும் விசாரணை நடத்திவருகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு