‘‘சிலைக் கடத்தல் மற்றும் சிலை மோசடி தொடர்பான வழக்குகளில் தொடர்ந்து அறநிலையத் துறை அதிகாரிகள் மட்டுமே கைது செய்யப் பட்டிருக்கிறார்கள். இந்த வழக்குகளில் தொடர்பு டைய மற்ற யாரையுமே சிலைக் கடத்தல் வழக்குகளைக் கூடுதல் பொறுப்பாக விசாரித்து வரும் ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் கைது செய்வதில்லை’’ என்று குற்றம்சாட்டுகிறார்கள் அறநிலையத் துறையினர். அறநிலையத் துறையின் கூடுதல் ஆணையர் கவிதா கைது செய்யப்பட்ட சூழலில், இதுதொடர்பாக தலைமைச் செயலாளரிடம் அறநிலையத் துறை அதிகாரிகள் கொடுத்த புகார், பல சர்ச்சைகளை எழுப்பியுள்ளது.

அறநிலையத் துறை அதிகாரி ஒருவர், ‘‘காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் உற்சவர் சிலை செய்ததில் முறைகேடு நடந்திருப்பதாக, அந்தக் கோயில் அர்ச்சகர்கள் முதல் செயல் அலுவலர் வரை அனைத்துத் தரப்பிடமும் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து, ஜூலை 30-ம் தேதி அறநிலையத் துறையின் கூடுதல் ஆணையர் கவிதாவைக் கைது செய்தனர். கவிதாமீது முதல் தகவல் அறிக்கைகூட போடவில்லை. விசாரணைக்கும் அழைக்கவில்லை. ஆனால், கைது செய்தார்கள். இது வேண்டுமென்றே பழிவாங்கும் நோக்கில் போடப்பட்ட வழக்கு. அறநிலையத் துறையைக் கலைக்க வேண்டும் என்பதுதான், சில இந்து அமைப்புகளின் நோக்கம். ‘இந்து ஆலய மீட்புக் குழு’ என்ற அமைப்பை உருவாக்கி நடத்துகிறார், பி.ஜே.பி-யின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா. ‘கோயில்களை அறநிலையத் துறையிடமிருந்து மீட்டு ஆன்மிகப் பெரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்’ என்கிறார் அவர். அறநிலையத் துறை அதிகாரிகள்மீது பொன்.மாணிக்கவேல் போடும் பொய் வழக்குகள் இதற்குத் துணை போவதாக இருக்கின்றன.

தஞ்சாவூர் மாவட்டம், பந்தநல்லூர் பசுபதீசுவரர் கோயிலில் ஆறு சிலைகள் காணாமல் போன வழக்கில், கோயிலின் உதவி ஆணையர் ஞானசேகர் ஆய்வு செய்துதான் சிலைகள் களவு போனதைக் கண்டுபிடித்தார். உடனே போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால், ‘சிலைகள் காணாமல்போனதை வேண்டுமென்றே அறநிலையத் துறை அதிகாரிகள் மறைத்தனர்’ என்று கூறி, மயிலாடுதுறை துணை ஆணையர் கஜேந்திரன் உட்பட மூன்று அதிகாரிகள் கைது செய்யப்பட்டார்கள். இந்த வழக்கில் போலீஸாரால் குற்றம் சாட்டப்பட்டிருந்த திருக்கோயில் பரம்பரை அறங்காவலர்கள் மற்றும் அர்ச்சகர்கள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில் தொடர்பான வழக்கு, அடிப்படையே இல்லாதது. சோமாஸ்கந்தர் உற்சவர் சிலை செய்வதற்குப் பொதுமக்களிடம் தங்கம் பெறப்பட்டதாக யூகத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை பொதுமக்கள் யாரும் இதுபற்றிப் புகார் கொடுக்கவில்லை. இந்த வழக்கைத் தாக்கல் செய்த அண்ணாமலை என்பவர், கோயில் இடத்தில் கடை நடத்தி வந்தார். முறையாக வாடகை கட்டத் தவறியதால், கடை அகற்றப்பட்டது. ‘சிலை மோசடி’ என்று இவர் போட்ட வழக்கில்தான், முத்தையா ஸ்தபதி கைது செய்யப்பட்டார். அவரிடம், ‘கூடுதல் ஆணையர் கவிதா கூறியதன் அடிப்படையில்தான் தங்கம் வசூலிக்கப்பட்டது’ என ஒப்புதல் வாக்குமூலம் அளிக்குமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர். கோயில் செயல் அலுவலர் முருகேசனையும் மிரட்டி ஒப்புதல் வாக்குமூலம் வாங்கியுள்ளனர். அந்தச் செயல் அலுவலரும் கைது செய்யப்படவில்லை; அங்கு பணியில் இருந்த அர்ச்சகரும் கைது செய்யப்படவில்லை. முதல் தகவல் அறிக்கையில் பெயர்கூட இல்லாத கவிதா கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பெண் உதவி ஆணையரிடம் சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அப்போது, ‘உங்கள் அறையில் கஞ்சா இருந்து, அதைக் கண்டுபிடித்து எடுத்தால் என்ன செய்வீர்கள்?’ என மிரட்டியுள்ளனர் போலீஸார்.

சிலைக் கடத்தல் வழக்குகளில் அதீத ஆர்வம் காட்டிவரும் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், கும்பகோணம் சந்தானகோபால சாமி கோயிலுக்குச் சொந்தமான 3.25 ஏக்கர் நிலத்தையும், இரண்டு கடைகளையும், இரண்டு குடியிருப்புகளையும் கடந்த 35 ஆண்டுகளாகக் குத்தகை செலுத்தாமல் அனுபவித்துவருகிறார். கோயில் இடத்தில் 15 கடைகள் கட்ட விண்ணப்பித்திருக்கிறார். அந்த மனு நிராகரிக்கப்படும் நிலையில் உள்ளது. அதனால்தான், அறநிலையத் துறைக்கு எதிரான வழக்குகளில் ஆர்வம் காட்டுகிறார்.

கடந்த ஐந்தரை ஆண்டுகளில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு டி.ஐ.ஜி-யாகவும், ஐ.ஜி-யாகவும் பணியாற்றிவரும் பொன்.மாணிக்கவேல், இதுவரை எத்தனை வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறார்? எத்தனை வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டுக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர்? அறநிலையத் துறை அதிகாரிகளைக் கைதுசெய்வது மட்டும்தான் இவர் அஜெண்டாவா?’’ என்கிறார் அந்த அதிகாரி.

வழக்கறிஞர் யானை ராஜேந்திரனிடம் பேசினோம். ‘‘கோயில் நிலம் என் பொறுப்பில் உள்ளது உண்மைதான். ஆனால், இன்றைய தேதி வரை முறையாகக் குத்தகை செலுத்திவருகிறேன். ஒரு பைசாகூட நிலுவையில் இல்லை. குடியிருப்புகள் எதையும் நான் குத்தகை எடுக்கவில்லை. என்மீது இப்படிப் பொய்யாகக் குற்றச்சாட்டு எழுப்பும் அறநிலையத் துறையினர்மீது வழக்கு போட்டிருக்கிறேன்’’ என்றார் அவர்.

சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவின் ஐ.ஜி பொன்.மாணிக்கவேலிடம் பேசினோம். ‘‘அறநிலையத் துறையினர் கூறுவது அனைத்துமே பொய்யான தகவல்கள். நீதிமன்ற உத்தரவுப்படி, விசாரணைகள் நேர்மையாக நடக்கின்றன’’ என்று மட்டும் சொன்னார்.

- இ.லோகேஷ்வரி

‘‘தப்பு செய்பவர்களுக்குக் கோபம் வருகிறது!’’

‘‘பொன்.மாணிக்கவேல் ஒன்றும் இந்து அமைப்புகளால் இயக்கப்படவில்லை’’ என மறுக்கிறார், இந்து மக்கள் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் ராம.ரவிக்குமார். ‘‘சிலைக் கடத்தல் மட்டுமின்றி, சிலை மோசடி வழக்குகளையும் அவர்தான் துப்பறிந்து உண்மையை வெளிக்கொண்டு வந்தார். பி.ஜே.பி ஆட்சியில் இருக்கும் குஜராத் மாநிலத்திலிருந்து ராஜராஜன் சிலையை அவர்தான் மீட்டுவந்தார். இந்து அமைப்புகளின் பேச்சைக் கேட்பவர் என்றால், இப்படிச் செய்வாரா? அவர் நேர்மையாக விசாரணை நடத்தித் தவறு செய்பவர்களை சட்டத்தின்முன் நிறுத்துவதால், தப்பு செய்யும் அதிகாரிகளுக்குக் கோபம் வருகிறது. அவர்கள் இப்படி வீண்பழி போடுகிறார்கள். கோயில்களையும், கோயில் சொத்துகளையும் அறநிலையத் துறை ஒழுங்காகப் பாதுகாத்தால், சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு என ஒன்றுக்கு வேலையே இல்லையே?’’ என்று கேட்கிறார் அவர்.