Published:Updated:

தூக்கில் தொங்கிய காதலன்; அதிர்ச்சியில் விஷம் குடித்த காதலி! - கரூர் சோகம்

தூக்கில் தொங்கிய காதலன்; அதிர்ச்சியில் விஷம் குடித்த காதலி! - கரூர் சோகம்
தூக்கில் தொங்கிய காதலன்; அதிர்ச்சியில் விஷம் குடித்த காதலி! - கரூர் சோகம்

`சேர்ந்து வாழ்வோம்' என்று சொன்ன காதலன் பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதை நினைத்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ள, அதைப் பார்த்து அதிர்ந்த காதலி விஷம் குடித்து இறந்த சம்பவம் கரூர் மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 
 

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டத்தில் இருக்கிறது தாளியம்பட்டி. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த கருப்பையாவின் 22 வயது மகன் கோபி. கரூரில் உள்ள தனியார் ஜவுளி நிறுவனத்தில் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். அதே ஊரைச் சேர்ந்த செல்வராஜின் மகள் கவிதா. கரூரில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.எஸ்சி., மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். கோபியும், கவிதாவும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இரண்டு பேரும் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். இருந்தபோதிலும், இருவரது காதல் விவகாரம் இருவரது வீடுகளுக்கும் தெரிய வர, இரண்டு தரப்பிலும் எதிர்ப்புக் கிளம்பி இருக்கிறது. 'பெற்றோர்கள் சம்மதம் இல்லைன்னா என்ன. நாம தனியா போய் வாழ்வோம்' என்றபடி இருவரும் தத்தமது வீட்டை விட்டு வெளியேறினர். லாலாப்பேட்டை அருகே உள்ள சிம்மாச்சிப்பட்டியில் உள்ள கோபியின் உறவினர் வீட்டில் இருவரும் தஞ்சமடைந்தனர்.

கவிதாவும், கோபியின் உறவினர்களும் வெளியே சென்றுள்ளனர். இந்த நிலையில், தனிமையில் இருந்த கோபி, 'பெற்றோர்கள் காதலை ஏற்றுக்கொள்ளவில்லையே. அவர்களை ஒதுக்கிவிட்டு எப்படி வாழ்வது' என்று மருகியவர், அந்த விரக்தியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளார். வெளியே சென்றிருந்த கவிதா வீட்டுக்கு வந்திருக்கிறார். அப்போது கோபி பிணமாக தூக்கில் தொங்குவதைப் பார்த்து வெடித்துக் கதறி இருக்கிறார். 'நாம சேர்ந்து ஒண்ணா பல வருஷம் வாழ்வோம்ன்னு சொன்னியே. இப்படி என்னை தவிக்கவிட்டுட்டு போய்ட்டியே'னு கதறி இருக்கிறார். உடனே, அவரும் விஷத்தைக் குடித்து உயிரை மாய்த்திருக்கிறார். வெளியே சென்றிருந்த கோபியின் உறவினர்கள் வீட்டுக்கு வந்து பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இருவரின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்ததோடு, லாலாப்பேட்டை காவல் நிலையத்திலும் புகார் கொடுத்தனர். காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் தற்கொலை செய்துகொண்ட கோபியை பார்த்து அவரின் காதலி கவிதாவும் விஷம் குடித்து இறந்த சம்பவம் லாலாப்பேட்டை பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.