Published:Updated:

மக்களுக்கு சாலை இல்லை... குவாரிக்கு செல்ல சாலை!

மக்களுக்கு சாலை இல்லை... குவாரிக்கு செல்ல சாலை!
பிரீமியம் ஸ்டோரி
மக்களுக்கு சாலை இல்லை... குவாரிக்கு செல்ல சாலை!

அதிகாரிகள் துணையுடன் மண் கொள்ளை

மக்களுக்கு சாலை இல்லை... குவாரிக்கு செல்ல சாலை!

அதிகாரிகள் துணையுடன் மண் கொள்ளை

Published:Updated:
மக்களுக்கு சாலை இல்லை... குவாரிக்கு செல்ல சாலை!
பிரீமியம் ஸ்டோரி
மக்களுக்கு சாலை இல்லை... குவாரிக்கு செல்ல சாலை!

துரை மாவட்டத்தில் கிரானைட் குவாரி அமைத்து மலைகளைக் கொள்ளையடித்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. சகாயம் அறிக்கை சமாதிக்குள் புதைந்துவிட, அந்தக் கொள்ளையை எல்லோரும் மறந்த நிலையில், இப்போது அதே மதுரை மாவட்டத்தில் இன்னொரு மலையைக் காணவில்லை என்ற பகீர் புகார் எழுந்துள்ளது.

‘காணவில்லை... காணவில்லை... கட்டியாரன் மலையைக் காணவில்லை. கண்டுபிடித்துத் தரும் அரசு அதிகாரிகளுக்குத் தகுந்த சன்மானம் வழங்கப்படும்’ என்ற போஸ்டர்கள் மதுரையில் எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்தன. போஸ்டரில் குறிப்பிடப்பட்டிருக்கும் மலை, அலங்காநல்லூரை அடுத்த ஆதனூர் கிராமத்தில் இருந்தது. அந்தக் கிராமத்துக்குச் சென்றோம். அங்கு மலை இருந்ததற்கான அடையாளங்களுடன் ஒரு கரடு தென்பட்டது.  அந்தக் கரடு பக்கம் போவதற்குக்கூட, அங்கு மண் அள்ளிக்கொண்டிருந்தவர்கள் நம்மை அனுமதிக்கவில்லை.

ஆதனூரைச் சேர்ந்த சின்னதம்பி என்பவர் நம்மிடம் பேசினார். ‘‘இந்தப் பகுதி வாடிப்பட்டி வட்டத்துக்குள் வருகிறது. கட்டியாரன்கரடு மலைப் பகுதிகளில் பஞ்சமி நிலங்கள் உள்ளன. இங்கு ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, தங்கம் மோட்டார்ஸ் எனும் தனியார் நிறுவனத்தினர் கல்லூரி கட்டப் போவதாக, மக்களிடமிருந்து நிலங்களை வாங்கினர். ஆனால், அவர்கள் சொன்னது போலக் கல்லூரி கட்டவில்லை. அவர்கள் வாங்கிய நிலத்தில், 80 அடி ஆழத்துக்கு கிராவல் மண்ணை அள்ளி, கனிமவளத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர். இந்த நிறுவனம் தவிர இன்னொரு தனியார் நிறுவனத்தின் உரிமையாளர்களும், சில நபர்களும் தோட்டத்தை அழித்துவிட்டுச் செம்மண் குவாரிகள் அமைத்து கனிமவளக் கொள்ளையில் ஈடுபடுகின்றனர். ஊர் மக்கள் கேட்டதற்கு, ‘எங்கள் பட்டா நிலத்தில் அரசு அனுமதி வாங்கித்தான் மண் அள்ளுகிறோம்’ என்றனர். அதிகாரிகளும் இவர்களுக்குத் துணை போகிறார்கள்.

மக்களுக்கு சாலை இல்லை... குவாரிக்கு செல்ல சாலை!

அதிக ஆழத்துக்கு மண் அள்ளப்பட்டதால், நீர்வரத்து ஓடைகள் பாதிக்கப்பட்டன. சிலர் புறம்போக்கு நிலங்களையும் ஆக்கிரமித்து மண் குவாரிகள் அமைத்துள்ளனர். கிட்டத்தட்ட மலையையே காணாமல் செய்துவிட்டனர். இதனால், எங்கள் பகுதியில் ஆழ்துளைக் கிணறுகள், கண்மாய்கள் உள்ளிட்ட நீர் ஆதாரங்கள் வறண்டிருக்கின்றன. விவசாயம் முற்றிலும் பாதிப்படைந்துள்ளது. இந்த மண் கொள்ளையைத் தடுத்து நிறுத்த வேண்டும் என அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்துள்ளோம். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.  இதே நிறுவனம், இந்த இடத்தில் எம்.சாண்ட் குவாரி நடத்த அரசிடம் அனுமதி கேட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. செம்மண் குவாரிகளால் பாதிக்கப்பட்டுள்ள நாங்கள், எம்.சாண்ட் குவாரி அமைத்தால் இன்னும் கடுமையாகப் பாதிக்கப்படுவோம். இந்தப் பகுதியின் இயற்கை வளம் முழுமையாகப் பாதிக்கப்படும்’’ என்று அச்சம் தெரிவித்தார் சின்னதம்பி.

சமூக ஆர்வலர் ராஜேஷ், ‘‘இந்த மலையில் தொடர்ந்து மண் அள்ளினால், ஆழமான பள்ளங்களில் மழைநீர் தேங்கும். இது, எஞ்சியிருக்கும் மலையின் உறுதியைப் பாதிக்கச் செய்யும். ஆதனூர் கிராமப் பகுதிக் கண்மாய்கள் தூர்வாரப்படாததால், பாதிப்புகள் அதிகமாக இருக்கும். வெள்ளைபட்டி வரை மக்கள் போக்குவரத்துக்காகச் சாலை அமைக்க வேண்டும் என மூன்று முறை கோரிக்கை மனு அளித்தும், சாலைகள் அமைக்கப்படவில்லை. ஆனால், ஆதனூரில் மண் குவாரிகளுக்கு லாரிகள் செல்லவேண்டும் என்பதற்காக, அதிகாரிகளின் செல்வாக்கைப் பயன்படுத்திச் சாலைகள் போட்டுக்கொண்டனர். கட்டியாரன் மலையின் பட்டா நிலங்களில்தானே மணல் அள்ளுகிறார்கள் என்று அரசு அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல், மலையில் அடிக்கடி ஆய்வுசெய்ய வேண்டும். முறைகேடுகள் நடந்தால் தடுத்து உரிய நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்’’ என்றார்.

வாடிப்பட்டி தாசில்தார் பார்த்திபனிடம் விசாரித்தோம். ‘‘போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் மண் அள்ளுவதற்கான அனுமதி முடிந்துவிட்டது. அதிக அளவு கிராவல் மண் அள்ளுகிறார்களா என்பதை, கனிமம் மற்றும் சுரங்கத்துறைதான் பார்க்க வேண்டும். அவர்கள் எம்.சாண்ட் நிறுவனம் அமைக்க முயற்சி செய்துவருகிறார்கள் என்பது உண்மைதான்’’ என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மக்களுக்கு சாலை இல்லை... குவாரிக்கு செல்ல சாலை!

தங்கம் மோட்டார்ஸ் நிறுவனத்தைச் சார்ந்தவர்களிடம் பேசினோம். “நாங்கள் உரிய அனுமதி பெற்று, சட்டரீதியாகத் தான் மண் அள்ளியுள்ளோம். அனுமதி முடிந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. இப்போது மண் அள்ளவில்லை. அங்குள்ள வாகனங்கள் நிலத்தைச் சமன் செய்கின்றன. சட்ட விரோதமாக எதுவும் செய்யவில்லை. உரிய அனுமதி பெற்ற பின்னர்தான் எம்.சாண்ட் குவாரி அமைப்போம்’’ என்றனர்.

ஆதனூர் கிராமத்தில் உள்ள கட்டியாரன் மலையில் முறைகேடாக கிராவல் மண் அள்ளப்படுகிறதா என்று மலை ஏறிச்சென்று பார்வையிட விடாமல் தடுக்கிறார்கள். மலையில் தற்போது என்னதான் நடக்கிறது என்று அப்பகுதி மக்கள் யாராலும் பார்க்க முடியாத சூழல் உள்ளது. மதுரை மாவட்டத்தின் புதிய கலெக்டர், சிறப்பு அதிகாரிகளை நியமித்து மலையில் ஆய்வுசெய்து உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இந்தப் பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

- அருண் சின்னதுரை
படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism