Published:Updated:

`ஜெயா, என்னை மன்னிச்சிடு!' - ஒன்றரை வயது மகனைக் கொன்ற தந்தை கண்ணீர் கடிதம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
`ஜெயா, என்னை மன்னிச்சிடு!' - ஒன்றரை வயது மகனைக் கொன்ற தந்தை கண்ணீர் கடிதம்
`ஜெயா, என்னை மன்னிச்சிடு!' - ஒன்றரை வயது மகனைக் கொன்ற தந்தை கண்ணீர் கடிதம்

`ஜெயா, என்னை மன்னிச்சிடு!' - ஒன்றரை வயது மகனைக் கொன்ற தந்தை கண்ணீர் கடிதம்

ஒன்றரை வயது குழந்தைக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்த சம்பவம் பனையூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மயிலாடுதுறையைச் சேர்ந்தவர் சுரேஷ். ஏ.சி.மெக்கானிக். இவர் குடும்பத்தோடு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூர் 2வது அவென்யூவில் குடியிருந்தார். இவரின் மனைவி ஜெயா. இவர்களுக்கு கிஷோர் என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை இருந்தார். பத்துக்கு பத்து அடி கொண்ட சிறிய வீட்டில்தான் சுரேஷ் வாழ்ந்துவந்தார். இந்த நிலையில், அந்த வீட்டில் சுரேஷ் தூக்குப் போட்டு தற்கொலை செய்துள்ளார். படுக்கையில் அவரின் மகன் கிஷோர் இறந்துகிடந்தார். அதே அறையில்தான் ஜெயா இருந்துள்ளார். 
இருவர் இறந்துகிடந்த தகவல் கானத்தூர் போலீஸாருக்கு தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் இருவரின் சடலங்களை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பிறகு ஜெயாவிடம் விசாரித்தனர். அப்போது, அவர் `கணவனும் குழந்தையும் எப்படி இறந்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை' என்று கண்ணீர்மல்க  கூறியுள்ளார். 

தொடர்ந்து, சுரேஷ் எழுதிய ஒரு பக்கம் கொண்ட தற்கொலை கடிதத்தை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். அந்தக் கடிதத்தில், ``தயவு செய்து எல்லோரும் என்னை மன்னித்துவிடுங்கள். என் சாவுக்கு யாரும் காரணமில்லை. என்னிடம் திறமையும் போதிய வருமானமும் இல்லை. என்னால் யாருக்கும் புரோஜனமும் இல்லை. தப்பெல்லாம் என் மீதுதான். தயவு செய்து அப்பா, அம்மாவிடம் சண்டை போட வேண்டாம். என் குழந்தையை விட்டுவிட்டு செல்ல மனசு வரவில்லை. அதனால் குழந்தையும் கூப்பிட்டுச் செல்கிறேன். ஜெயா என்னை மன்னித்துவிடு. உன்னை ஏமாத்திவிட்டேன்'' என்று எழுதப்பட்டுள்ளது. அதே கடிதத்தில் காவல்துறைக்கு ஒரு தகவலை சுரேஷ் சொல்லியுள்ளார்.

 
``சார், கேஸ் போடாதீங்க. போஸ்ட்மார்ட்டம் செய்யாதீங்க. இது தற்கொலைதான், யாரையும் சிரமப்படுத்தாதீங்க. நீங்கள் எனக்கொரு உதவி செய்ய வேண்டும். என் அக்கா வீட்டுக்காரால் என் குடும்பத்துக்கு தொல்லை. நகை, பணம் கேட்பது. குடித்துவிட்டு தகராறு செய்வது, என பல பிரச்னை செய்கிறார். தயவு செய்து அவரை உள்ளே பிடித்துப் போடுங்கள் அல்லது ஊரை விட்டு அடித்து விரட்டுங்கள். ப்ளீஸ் சார். அப்பா, காரியம் என வீண் செலவு செய்யாதீங்க. சொந்தகாரங்களைக் கூப்பிடாதீங்க. இருக்கிற நகைகளை ஜெயாவிடம் கொடுத்துவிடுங்க'' என்று குறிப்பிட்டுள்ளார். 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``சுரேஷின் தற்கொலை குறித்து விசாரித்துவருகிறோம். அவரின் மகன் கிஷோருக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்து சுரேஷ் கொலை செய்துள்ளார். அதன்பிறகுதான் சுரேஷ் தற்கொலை செய்துள்ளார். இதனால் சுரேஷின் மனைவி மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்திவருகிறோம். விசாரணை முடிவில்தான் சுரேஷ் எதற்காக மகனை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார் என்பது தெரியவரும்" என்றனர். 

சுரேஷின் தந்தை ரங்கநாதன் கூறுகையில், ``நான் அந்தப்பகுதியில் உள்ள பண்ணைவீட்டில் காவலாளியாக உள்ளேன். என்னுடைய மகள் சூர்யா, கணவர் பாண்டியனுடன் கோவையில் குடியிருந்துவருகிறார். மகன் சுரேஷ் வீடு, பண்ணை வீட்டின் அருகில்தான் உள்ளது. என்னுடைய பேரன் கிஷோர்தான் தினமும் காலை என்னை வந்து எழுப்புவான். அவனின் முகத்தில்தான் விழிப்பேன். சம்பவத்தன்று அவன் வரவில்லை. இதனால் அவனைத் தேடி சுரேஷ் வீட்டுக்குச் சென்றேன். அங்கு வீடு பூட்டப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோதுதான் சுரேஷ் தூக்கில் தொங்கி கொண்டிருந்தான். படுக்கையில் கிஷோர் இறந்துகிடந்தான். அவன் இறப்பதற்கு முன் இரவில் எனக்கு முத்தம் கொடுத்துவிட்டு டாட்டா காட்டிவிட்டுச் சென்றான். இனிமேல் அவன் எனக்கு எப்போது முத்தம் கொடுப்பான்" என்றார் கண்ணீர்மல்க. 

அப்பகுதி மக்கள் கூறுகையில், ``சுரேஷ் ரொம்ப நல்ல பையன். அவரின் அக்காளுக்கு திருமணம் நடந்தபிறகுதான் அந்தக் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. அக்காள் வீட்டுக்காரர் குடித்துவிட்டு செய்த ரகளையால் சுரேஷ் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த குடும்பமும் பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்துவந்தது. திருமணத்தின்போது அக்காளுக்கு போட வேண்டிய நகையில் பாக்கியிருந்துள்ளது. அதைக்கேட்டு அக்காள் வீட்டுக்காரர் தகராறு செய்துவந்துள்ளார். இதனால்தான் சுரேஷ் இந்த முடிவை எடுத்துள்ளார். கிஷோரை அவர் கொலை செய்ததைதான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வீட்டின் முன் துருதுருவென சிரித்தபடி நிற்பான். அந்தக்காட்சிதான் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது" என்றனர். 

ஒரே நேரத்தில் கணவரையும் பெற்ற பிள்ளையையும் இழந்து தவிக்கும் ஜெயாவுக்கு உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களால் வார்த்தைகளால் ஆறுதல் சொல்ல முடியவில்லை. இருவரின் சடலங்களைப் பார்த்து ஜெயா கதறி அழுத சம்பவம் கல்நெஞ்சையையும் உருக்குவதாக இருந்தது.

பனையூரில் மகனைக் கொலை செய்துவிட்டு தந்தை தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு