Published:Updated:

உயிர் பறிக்கும் சாதி ஒழியட்டும்!

உயிர் பறிக்கும் சாதி ஒழியட்டும்!
பிரீமியம் ஸ்டோரி
உயிர் பறிக்கும் சாதி ஒழியட்டும்!

ரீ.சிவக்குமார்

உயிர் பறிக்கும் சாதி ஒழியட்டும்!

ரீ.சிவக்குமார்

Published:Updated:
உயிர் பறிக்கும் சாதி ஒழியட்டும்!
பிரீமியம் ஸ்டோரி
உயிர் பறிக்கும் சாதி ஒழியட்டும்!

2016-ல் தமிழகம் சந்தித்த அதிர்ச்சியை இப்போது தெலங்கானா சந்தித்திருக்கிறது.

உயிர் பறிக்கும் சாதி ஒழியட்டும்!

தெலங்கானா, நல்லகொண்டா மாவட்டத்தில் உள்ள மிர்லயாகுடா என்ற ஊரைச் சேர்ந்தவர் அம்ருதா. மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றியபோது பிரணய்குமார் என்பவரைக் காதலித்தார். இந்தக் காதலை அம்ருதாவின் தந்தை மாருதிராவ் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனாலும் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். கர்ப்பிணியாக இருந்த அம்ருதாவை மருத்துவப் பரிசோதனைகள் முடித்து வெளியே அழைத்துவந்தபோது, பிரணய் வெட்டிச் சாய்க்கப்பட்டார். கொன்றவர்கள் மாருதி ராவால் ஏவப்பட்டவர்கள்.

இந்தச் சம்பவத்தின் வடு மறைவதற்குள் தெலங்கானாவில் இன்னொரு சம்பவமும் நிகழ்ந்தது. ஹைதராபாத் எஸ்.ஆர்.நகரைச் சேர்ந்த மாதவியும் சந்தீப்பும் காதலித்துத் திருமணம் செய்துகொண்டனர். இருவரின் காதலையும் முதலில் ஏற்க மறுத்த, மாதவியின் தந்தை நரசிம்மாச்சாரி, பிறகு ஏற்றுக்கொள்வதாகச் சொல்லி, ‘புத்தாடைகள் வாங்கித் தருகிறேன்’ என்று இருவரையும் அருகில் உள்ள துணிக்கடைக்கு வருமாறு சொன்னார். அப்போது தந்தை தன் கூட்டாளிகளுடன் இணைந்து இருவரையும் ஆயுதங்களால் தாக்கினார். இந்தக் கட்டுரை எழுதிக்கொண்டிருக்கும் நேரத்தில், இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகமோ தெலங்கானாவோ, ஆள்களும் இடங்களும் மட்டுமே மாறியுள்ளனர். சங்கர் -பிரணய் குமார் - சந்தீப் என்று கொல்லப்படுபவர்களின் பெயர்களும் கௌசல்யா - அம்ருதா - மாதவி என்று பாதிக்கப்படும் பெண்களின் பெயர்களும் மாறியுள்ளன. சின்னச்சாமி, மாருதி ராவ், நரசிம்மாச்சாரி என்று கொலையாளிகளின் பெயர்களும் மாறலாம். ஆனால், கொலைக்கான ஒரே காரணம்... சாதி, சாதிவெறி, சாதித்திமிர்.

உயிர் பறிக்கும் சாதி ஒழியட்டும்!

அம்ருதாவை நேரில் சந்தித்த கௌசல்யா, சங்கர் கொலை செய்யப்பட்ட வீடியோவைக் காட்டியதோடு, ஆணவக்கொலைக்கு எதிரான தன் போராட்டத்தை எடுத்துக்கூறி, சட்டப்படியான தண்டனை பெற்றுத்தருவதற்கு ஊக்கமளித்திருக்கிறார். சாதியெதிர்ப்பு வரலாற்றில் இது ஒரு முக்கியமான, நெகிழ்ச்சியூட்டக்கூடிய நிகழ்வு.

இந்தியக் கலாசாரத்தின் மிக முக்கிய அம்சம் குடும்பம் என்றும், அது உலகில் உள்ள மற்ற சமூகங்களுக்கான முன்மாதிரி என்றும் சொல்லப்படுகிறது. ஆனால், தாங்கள் ஆசையாய் வளர்த்த மகள்களைக் கொல்லவும் அவர்கள் வாழ்க்கையையும் கனவையும் எதிர்காலத்தையும் சிதைக்கவும் இத்தகைய உயரிய குடும்பத்தைக் கட்டிக்காப்பாற்றும் பெற்றோர்கள் தயங்குவதில்லை. குடும்பத்தைவிட, மகள்மீதான  பாசத்தைவிட அவர்களுக்குச் சாதிதான் பெரியது.

உண்மையில் ‘குடும்பம் என்கிற அமைப்பே இந்தியாவில் சாதியைக் காப்பாற்றும் அமைப்பாகத்தான் இருக்கிறது’ என்பதை அம்பேத்கர் விரிவாக விளக்கினார். அகமணமுறை எனப்படும் சாதிக்குள் நடைபெறும் திருமணமே சாதியைத் தொடர்ச்சியாகக் காப்பாற்றிவருவதையும் சாதியின் புனிதத்தைக் காப்பாற்றும் பொறுப்பு பெண்கள்மீதே காலந்தோறும் சுமத்தப்பட்டதையும் அவர் வரலாற்று ஆதாரங்களுடன் எடுத்துக்காட்டினார். சதி என்னும் உடன்கட்டை ஏறுதல், குழந்தைத் திருமணம், கைம்பெண் கொடுமை என அனைத்துக்கும் அடிப்படையாக சாதியே இருந்தது.

நூற்றாண்டுகள் மாறினாலும் சாதி ஆணவமும் ஆணவக்கொலைகளும் மாறவில்லை. அதிலும் குறிப்பாக, இரண்டு முக்கியமான அம்சங்களைக் கவனிக்க வேண்டும். இரண்டு தலித் அல்லாதார் சாதிமறுப்புத் திருமணம் செய்யும்போது, எதிர்ப்பு என்பது கொலை வரை செல்வதில்லை.  அதிலும் குறிப்பாக, திருமணம் செய்துகொண்ட இருவரில் ஆண் தலித்தாகவும் பெண் ஆதிக்கச்சாதியாகவும் இருக்கும்போதுதான் கொலை நிகழ்கிறது. தலித் வித்து, தங்கள் வம்சத்துக்குள் கலந்துவிடக் கூடாது, புனிதத்தைக் குலைத்துவிடக் கூடாது என்ற சாதியப் பதற்றம்தான் கொலையாக மாறுகிறது.

உயிர் பறிக்கும் சாதி ஒழியட்டும்!

இந்தியா முழுவதும் ஆணவக்கொலைகளைத் தடுப்பதற்கான தனிச்சட்டம் உருவாக்கப்பட வேண்டும். மதுவிலக்கு, போதைப்பொருள் தடுப்பு என்று காவல்துறையில் தனிப்பிரிவுகள் இருப்பதைப்போல, ஆணவக்கொலைகளைத் தடுப்பதற்கான தனிப்பிரிவு உருவாக்கப்பட வேண்டும். சாதிமறுப்புத் திருமணம் செய்யும் தம்பதிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். சாதிமறுப்புத் திருமணம் மூலம் பிறந்தவர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும். தீண்டாமை என்பது சட்டப்படி குற்றம். வயதுக்கு வந்த இருவர் திருமணம் செய்துகொள்வதும் சட்டப்படி உறுதிசெய்யப்பட்ட உரிமை. எனவே, சாதிமறுப்புத் திருமணத்துக்கு எதிராகப் பேசும் சாதிச்சங்கத் தலைவர்கள், சமூக ஊடகங்களில் கருத்துகளைப் பரப்புவோர் கைது செய்யப்பட்டுக் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். சட்டங்களால் மட்டுமே சமூக மாற்றத்தைக் கொண்டுவர முடியாது. பாடத்திட்டம் தொடங்கிப் பல்வேறு மட்டங்களில் சாதிக்கு எதிரான பரப்புரை செய்யப்பட வேண்டும்.

ஆணவக்கொலைகள் சாதிமறுப்புத் திருமணம் செய்பவர்களை அச்சுறுத்தும் நோக்கில்தான் செய்யப்படுகின்றன. ஆனால் அவைதான் கௌசல்யா, அம்ருதா போன்ற சாதி எதிர்ப்புப் போராளிகளையும் உருவாக்கிவிடுகிறது.

சாதி எப்போது தோன்றியதோ, அப்போதே சாதி எதிர்ப்புக்கான போராட்டமும் தொடங்கிவிட்டது. எத்தனை மரணங்களைச் சந்தித்தாலும், அது சாதியை மரணிக்கச் செய்யும்வரை ஓயாது.