Published:Updated:

சிவகங்கை மாவட்டத் திட்ட இயக்குநர் மீது போலீஸ் வழக்கு பதிவு!

சிவகங்கை மாவட்டத் திட்ட இயக்குநர் மீது போலீஸ் வழக்கு பதிவு!
சிவகங்கை மாவட்டத் திட்ட இயக்குநர் மீது போலீஸ் வழக்கு பதிவு!

திட்ட இயக்குநர் உள்ளிட்டவர்கள் மீது அ.ம.மு.க மாவட்டச் செயலாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்ட அ.ம.மு.க செயலாளர் உமாதேவன் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளை ஆபாசமாகப் பேசியதால் கட்சித் தொண்டர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டு ஆட்சியர் அலுவலகம் கலவரம் போல் காட்சியளித்தது. அதையடுத்து சிவகங்கை போலீஸார் உமாதேவன் மீது வழக்கு பதிவு செய்து மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டவர் அடுத்த நாள் ஜாமீனில் வெளியானார். சிவகங்கை மாவட்ட ஊரகவளர்ச்சித் துறையில் நபார்டு திட்டத்தில் கிராமப்புற சாலைகள் டெண்டர் விடப்பட்டிருக்கிறது. அந்த டெண்டர் முறையானதாக இல்லை என்றும் அப்படியே அதற்கான வொர்க் ஆர்டர் கொடுத்தால் தனது கட்சிக்காரருக்கும்  வழங்க வேண்டும் என்று திட்ட இயக்குநரிடமும் செயற்பொறியாளரிடமும் வாதம் செய்திருக்கிறார் உமாதேவன்.

இவர்களுக்குள் பேச்சுவார்த்தை முற்றிப்போனதும் அதிகாரிகள் திட்ட இயக்குநர், செயற்பொறியாளர் ஆகியோரை சமாதானப்படுத்திய நேரத்தில் அ.ம.மு.க நிர்வாகிகள் அலுவலகத்துக்குள் நுழைந்ததால் கூடுதல் பதற்றமானது. இதற்கிடையில் நகரப் போலீஸார் குவிக்கப்பட்டு உமாதேவனை நகர் காவல்நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டார். அ.ம.மு.க-வினர் சாலையில் மறியல் செய்தனர். அன்றைய தினம் சென்னையில் அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்த சமயத்தில் இந்தத் தகவல் தெரிந்ததும் உடனே வழக்கு பதிவு செய்து ஜெயிலுக்கு அனுப்ப வேண்டும் என்று எஸ்.பி-க்கு உத்தரவு பறந்தது. ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் உமாதேவன் மன்னிப்புக் கேட்டால் இந்தப் பிரச்னையை விட்டுவிடுவதாக டி.எஸ்.பி-யிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே உமாதேவன் மதுரை மத்திய சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். 

உமாதேவன் மீது திட்ட இயக்குநர் வடிவேலு, செயற்பொறியாளர் முருகன் ஆகிய இருவரும் பயந்துகொண்டு உதவியாளர் ராதாகிருஷ்ணனை புகார் கொடுக்க வைத்தார்கள். இதையடுத்து அ.ம.மு.க-வினரால் திட்ட இயக்குநர் வடிவேலு, செயற்பொறியாளார் முருகன், ஓவர்சீயர் செல்வகுமார், உதவியாளர் ராதாகிருஷ்ணன், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் ராஜசேகரன் ஆகியோர் வீட்டுக்குப் போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் உமாதேவன் கொடுத்த புகார் மீது வடிவேலு, முருகன், ராதாகிருஷ்ணன், செல்வகுமார், ராஜசேகர் ஆகியோர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது அரசு ஊழியர்களிடையே  சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.