Published:Updated:

`3 வகை உணவு; 3 வகை மாணவர்கள்’ - சர்ச்சையில் மெட்ராஸ் ஐ.ஐ.டி

`3 வகை உணவு; 3 வகை மாணவர்கள்’ - சர்ச்சையில் மெட்ராஸ் ஐ.ஐ.டி
`3 வகை உணவு; 3 வகை மாணவர்கள்’ - சர்ச்சையில் மெட்ராஸ் ஐ.ஐ.டி

சென்னை ஐ.ஐ.டி-யில் சைவம் மற்றும் அசைவ உணவுகளை உண்ணும் மாணவர்கள் கைகளைக் கழுவ தனி இடம் ஒதுக்கப்பட்டது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. மேலும், இந்த வழிமுறை நவீன தீண்டாமைக்கு வழிவகுக்கும் என மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.


சென்னை கிண்டியில் இயங்கிவருகிறது ஐ.ஐ.டி கல்வி நிறுவனம். இங்கு தமிழகம் மட்டுமன்றி வெளிமாநிலத்திலிருந்தும் ஏராளமான மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். பல்வேறு சர்ச்சைகளுக்கு முகாந்திரமாக விளங்கும் இங்கு, மாட்டிறைச்சி திருவிழா நடத்தியதாகக் கூறி மாணவர் சூரஜ் என்பவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து கல்வி நிறுவனத்துக்குள் இயங்கும் அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம் தடைவிதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இதை எதிர்த்து மாணவர்கள் போராட்டக்களத்தில் குதித்தனர். அதேபோல சில மாதங்களுக்கு முன்பு, நிகழ்ச்சி ஒன்றில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டபோது, தேசிய கீதத்துக்குப் பதிலாக சம்ஸ்கிருத பாடல் ஒலிபரப்பப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இதற்குப் பல்வேறு அரசியல்கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதனிடையே தற்போது மீண்டும் ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது.

ஐ.ஐ.டி கேன்டீனில் தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதன்படி, சைவ உணவு உண்பவர்களுக்கு ஒரு வழியும், அசைவ உணவு உண்பவர்களுக்கு ஒருவழியும் தனித்தனி கைகழுவும் இடங்களும் அமைக்கப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டு குறித்து ஐ.ஐ.டி மாணவரிடம் பேசுகையில், ``ஐ.ஐ.டி-க்குள் ஏற்கெனவே வெஜிடேரியன், நான் வெஜ்டேரியன், பியூர் வெஜிடேரியன் என்று மூன்று வகையான உணவுப் பழக்கங்கள் நடைமுறையில் இருந்து வருகிறது. வெங்காயம், பூண்டு இல்லாமல் உள்ள உணவுகள் பியூர் வெஜிடேரியன் என்று நிர்வாகம் தரப்பில் தரம் பிரிக்கப்பட்டுள்ளது.10,000 மாணவர்கள் படிக்கும் இந்தக் கல்வி நிறுவனத்தில் 300 மாணவர்கள் இதை விரும்புகின்றனர். `உணர்ச்சிகளைத் தூண்டுகிறது, அதனால் அசைவ உணவை நாங்கள் சாப்பிடுவதில்லை. சுத்தமாக இருக்க வேண்டும்' என்று அந்த மாணவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

நாங்கள் 5 வருடங்களுக்கு முன்பே இந்த நடைமுறையை எதிர்த்தோம். ஆனால், நிர்வாகம் காது கொடுத்து கேட்வில்லை. இதன் உச்சமாகத் தற்போது, தனி வழியே உருவாக்கியுள்ளனர். சைவ மாணவர்கள் சாப்பிட தனி வழி, அசைவ உணவு விரும்பிகள் சாப்பிட தனி வழி, பியூர் வெஜ் சாப்பிடத் தனி வழி என வகைப்படுத்தியுள்ளனர். அது மட்டுமல்லாமல், கைகழுவக்கூட தனி இடம் என்று ஒதுக்கியுள்ளனர். அசைவ உணவு சாப்பிடும் மாணவன், சைவ அறையில் அனுமதியில்லை. இப்படி புதுவிதமான முறையில் தீண்டாமை கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த மெஸ் பிரச்னை நீண்ட காலமாக இருக்கிறது. இன்னும்போனால், மாணவர்களுக்காகத் தனி தனி ஹாஸ்டல் ஒதுக்குவார்கள் எனப் பயமாக உள்ளது. இது தொடர்பாக நிர்வாகத்துக்கு விளக்கம் கேட்டு மெயில் அனுப்பியுள்ளோம். விளக்கம் இன்னும் வரவில்லை” என்றார். இது தொடர்பாக ஐஐடி தரப்பில், ``இது வழக்கமான நடைமுறைதான்; இதில் எந்த பிரச்னையும் இல்லை” என்று தெரிவித்துள்ளனர்.