Published:Updated:

"அந்தப் பிரேதம் எப்படிக் கிடந்தது?" கோகுல்ராஜ் வழக்கில் ரயில்வே அதிகாரியிடம் விசாரணை

கரூரைச் சேர்ந்த மேலை பழனிச்சாமி என்பவர் உங்கள் கவுண்டர் சமுதாயத்தை இழிவுப்படுத்தி எழுதப்பட்ட, `நான் மிகை அலங்காரம் செய்துகொள்கிறேன்' என்ற புத்தகத்தின் ஆசிரியர் புலியூர் முருகேசன் என்பவரை ஆதரித்துப் பேசியதற்காக அவருடைய வீட்டின் முன்பக்கக் கூரையைச் சேதப்படுத்தியதற்காக உங்கள்மீதும் யுவராஜ்மீதும் கரூர் நகரக் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது?

"அந்தப் பிரேதம் எப்படிக் கிடந்தது?" கோகுல்ராஜ் வழக்கில் ரயில்வே அதிகாரியிடம் விசாரணை
"அந்தப் பிரேதம் எப்படிக் கிடந்தது?" கோகுல்ராஜ் வழக்கில் ரயில்வே அதிகாரியிடம் விசாரணை

சேலம் மாவட்டம் கோகுல்ராஜ் கொலை வழக்கு நாமக்கல் முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி இளவழகன் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. திருச்சிக்கு ஆளுநர் வருவதால் பாதுகாப்பு கருதி யுவராஜ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை. மற்றவர்கள் ஆஜரானார்கள். 

சாட்சி எண்: 37

பெயர்: ராஜன் ( ரயில்வே கேங்மேன்)
நீதிமன்ற பெஞ்ச் கிளர்க் யாமினி: சத்தியமா சொல்றேனு சொல்லுங்க.
ராஜன்: சத்தியமா சொல்றேன்.
வழக்கறிஞர் கருணாநிதி: உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்.
ராஜன்: நான் ரயில்வே துறையில் பணிபுரிந்து மூன்று வருடங்களுக்கு முன்பு பணி ஓய்வுபெற்றேன். நான் கேங்மேனாகப் பணிபுரிந்தேன்.
வழக்கறிஞர் கருணாநிதி: 2015-ல் எங்க இருந்தீங்க?
ராஜன்: காவேரி ஆர்.எஸ் ரயில் நிலையத்தில் கேங்மேனாக இருந்தேன்.
வழக்கறிஞர் கருணாநிதி: கோகுல்ராஜ் வழக்கு பற்றித் தெரிந்ததை சொல்லுங்க?
ராஜன்: 24.6.2015-ம் தேதியன்று காலை 7 மணிக்கு 386 கி.மீ பாயின்டிலிருந்து காவேரிபாக்கம்வரை நான் தனியாக இருசக்கர வாகனத்தில் சிறிது தூரம்சென்று, 389 கி.மீ பாயின்டில் இறங்கி நடந்து வந்துகொண்டிருந்தேன். அப்போது குப்பை பொறுக்கும் நபர் ஒருவர், சிறிது தொலைவில் ஒரு பிணம் கிடப்பதாகக் கூறினார். நான் சென்று பார்த்தபோது ரயில்வே தண்டவாளத்தில் 11/13 என்ற இடத்தில் ஒரு ஆண் பிணம் கிடந்தது. சுமார் 30 வயது இருக்கும்.

வழக்கறிஞர் கருணாநிதி:  அந்தப் பிரேதம் எப்படிக் கிடந்தது?
ராஜன்: இரண்டு தண்டவாளங்களுக்கு நடுவில் உடலும், தண்டவாளத்துக்கு வெளியே தலையும் கிடந்தது.
வழக்கறிஞர் கருணாநிதி: அந்தப் பிரேதத்துக்குப் பக்கத்தில் வேறு எந்தப் பொருட்களாவது இருந்ததா?
ராஜன்: இல்லை.
வழக்கறிஞர் கருணாநிதி: உடலின்மீது என்ன ஆடை இருந்தது?
ராஜன்: கத்திரிப்பூ கலர் சட்டையும், புளு கலர் ஜீன்ஸ் பேண்டும் இருந்தது.
வழக்கறிஞர் கருணாநிதி: உடனே காவல் துறைக்குத் தகவல் கொடுத்தீர்களா?
ராஜன்: பிரேதம் கிடந்த இடத்தைக் குறித்துக்கொண்டு காவேரி ரயில் நிலையத்தில் இருக்கும் ஸ்டேஷன் மாஸ்டருக்குத் தகவல் கொடுத்தேன்.
வழக்கறிஞர் கருணாநிதி: (ஆவணத்தைக் காட்டி...) உங்களுக்குப் படிக்கத் தெரியுமா?
ராஜன்: தெரியாது.
வழக்கறிஞர் கருணாநிதி: (ஆவணத்தைக் காட்டி...)இந்த ஆவணத்தில் உள்ள கையெழுத்து உங்களுடையதா?
ராஜன்: ஆமாம்.


வழக்கறிஞர் கருணாநிதி: உங்களை யார் யாரெல்லாம் விசாரித்தார்கள்.
ராஜன்: ஈரோடு ரயில்வே காவல் துறையினர், நாமக்கல் காவல் துறையினர், சி.பி.சி.ஐ.டி காவல் துறையினர் விசாரித்தார்கள்.
ரயில்வே கேங்மேன் ராஜனை, யுவராஜ் தரப்பு வழக்கறிஞர் கோபால கிருஷ்ண லட்சுமண ராஜு (ஜி.கே.) குறுக்குவிசாரணை செய்தார்.
வழக்கறிஞர் ஜி.கே: முதன்முதலில் யார் விசாரித்தார்கள்?
ராஜன்: ரயில்வே காவல் துறையினர்.
வழக்கறிஞர் ஜி.கே: நீங்கள் கூறியதை காவல் துறையினர் எழுதிக்கொண்டார்களா?
ராஜன்: எழுதிக்கொண்டார்கள்.
வழக்கறிஞர் ஜி.கே: அதில் நீங்கள் கையெழுத்து போட்டீர்களா?
ராஜன்: இல்லை.
வழக்கறிஞர் ஜி.கே: காவல் துறையில் யார் விசாரித்தார்?
ராஜன்: டி.எஸ்.பி விஸ்ணுபிரியா.
வழக்கறிஞர் ஜி.கே: (ஆவணத்தைக் காட்டி...) நீங்கள் கையெழுத்து போட்ட இந்தக் கடிதத்தை யார் எழுதியது?
ராஜன்: நான் சொல்லச் சொல்ல கேங்மேன் கார்த்திக் எழுதினார். நான் கையெழுத்து போட்டேன்.
வழக்கறிஞர் ஜி.கே: 481 முதல் 483 வரை பரிசோதனை செய்துகொண்டு சென்று மீண்டும் பரிசோதனை செய்துகொண்டே வருவதுதான் உங்கள் பணி?
ராஜன்: ஆமாம்.
வழக்கறிஞர் ஜி.கே : வழக்கமாக அப்படித்தான் பணி செய்வீர்கள்?
ராஜன்: ஆமாம்.
வழக்கறிஞர்  ஜி.கே: ரயில்வே காவல் துறையினர் மற்றும் டி.எஸ்.பி விசாரித்தபோதே மேலே சொன்னதைத்தான் கூறினீர்களா?
ராஜன்: ஆமாம்.
வழக்கறிஞர் ஜி.கே: ரயில்வே காவல் துறையினர் மற்றும் டி.எஸ்.டி விஸ்ணுபிரியா உங்களை எங்குவைத்து விசாரித்தார்கள்?
ராஜன்: வீட்டில்வைத்து விசாரித்தார்கள்.
வழக்கறிஞர் ஜி.கே: வேறு யாராவது உங்களை விசாரித்தார்களா?
ராஜன்: ஞாபகம் இல்லை.
வழக்கறிஞர் ஜி.கே: டி.எஸ்.பி விஷ்ணுபிரியா உங்களை விசாரித்தபோது, ``24.6.2015-ம் தேதி காலை சுமார் 8 மணிக்குப் பிரேதம் கிடந்த இடமான மின் கம்பம் 383/11-13 அப்ளைன் பாதையில் செல்லும்போது பிரேதம் எதுவும் இல்லை என்றும், திரும்பி வரும்போது சுமார் 11.30 மணியளவில் பிரேதம் ஒன்று கிடப்பதாக அவ்வழியே சென்ற பாட்டில்கள், பேப்பர் பொறுக்கும் நபர் ஒருவர் என்னிடம் சொன்னதாக'' நீங்கள் கூறியுள்ளீர்களா?
ராஜன்: கூறினேன்.
வழக்கறிஞர் ஜி.கே: பிணம் கிடந்த இடத்தில் காவல் துறையினர் உங்களை விசாரித்தார்களா?
ராஜன்: இல்லை.
வழக்கறிஞர் ஜி.கே: காவேரி ரயில்வே நிலையத்துக்குச் சென்று புகார் தெரிவித்த பிறகு மீண்டும் பிணத்தைப் பார்த்தீர்களா?
ராஜன்: இல்லை.
வழக்கறிஞர் ஜி.கே: சி.பி.சி.ஐ.டி காவல் துறையினர் நிர்பந்தப்படுத்தி சொல்லிக் கொடுத்ததன் பேரில் நீங்கள் இருசக்கர வாகனத்தில் சென்றதாகத் தற்போது பொய்யாகச் சொல்கிறீர்கள்?
ராஜன்: இல்லை.  
வழக்கறிஞர் ஜி.கே: சம்பவம் நடந்தபோது நீங்கள் தற்காலிகப் பணியாளராக இருந்தீர்கள்தானே?
ராஜன்: ஆமாம்.
வழக்கறிஞர் ஜி.கே: உங்களுடைய உயர் அதிகாரிகளும், சி.பி.சி.ஐ.டி காவல் துறையினரும் உங்களை நிர்பந்தப்படுத்தியதன்பேரில் நீங்கள் சாட்சியம் அளிக்கிறீர்கள் என்று சொல்கிறேன்?
ராஜன்: இல்லை.

சாட்சி எண்: 38

பெயர்: சுஜிஸ் கே. கோட்டாசெரி (ரயில்வே கேங்மேன்)
நீதிமன்ற பெஞ்ச் கிளர்க் யாமினி: சத்தியமாச் சொல்றேனு சொல்லுங்க.
சுஜிஸ்: சத்தியமாச் சொல்றேன்.
(சுஜிஸ் கோட்டாசெரி கேரளாவிலிருந்து வழக்கறிஞரோடு ஆஜரானார். இவர் மலையாளம் என்பதால் அரசுத் தரப்பில் மொழிபெயர்ப்புக்கு ஆள் இல்லாததால் யுவராஜ் தரப்பு வழக்கறிஞர் அஜுதாகூர் மொழிபெயர்ப்பு செய்தார்.)
வழக்கறிஞர் கருணாநிதி: நீங்க எங்க பணிபுரிந்தீர்கள்?
சுஜிஸ்: நான் சங்ககிரி துர்கா ரயில் நிலையத்தில் 2013-லிருந்து 2016 வரை கேங்மேனாக இருந்தேன்.
வழக்கறிஞர் கருணாநிதி: இந்த வழக்கு பற்றி என்ன தெரியும்?
சுஜிஸ்: எதுவும் தெரியாது.
வழக்கறிஞர் கருணாநிதி: காவல் துறையினர் விசாரித்தார்களா?
சுஜிஸ்: இல்லை.
வழக்கறிஞர் கருணாநிதி: உங்க வழக்கமான பணி என்ன?
சுஜிஸ்: கேட் டியூட்டி.
வழக்கறிஞர் நாராயணன்: 23.6.2015-ம் தேதி சுமார் 4:00 மணிக்கு பணியில் இருந்தீர்களா?
சுஜிஸ்: இல்லை.
வழக்கறிஞர் நாராயணன்: 23.6.2015-ம் தேதி இரவு 9:00  மணிக்கு எங்குப் பணியில் இருந்தீர்கள்?
சுஜிஸ்: கிழக்கு தொட்டிப்பாளையம் கேட்டில் இருந்தேன்.
வழக்கறிஞர் நாராயணன்: வீரசிங் என்பவர் விடுப்பில் சென்றதால் அவருக்குப் பதிலாக நீங்கள் பணியில் இருந்தீர்கள்?
சுஜிஸ்: ஆமாம்.
வழக்கறிஞர் நாராயணன்: 23.6.2015-ம் தேதி இரவு 9 மணிக்கு நீங்கள் பணியில் இருந்தபோது எம்.எம் 540 மகேந்திரா ஜீப் ஒன்று கேட் வழியாகச் சென்றது?
சுஜிஸ்: நிறைய வாகனங்கள் சென்றதால் தெரியவில்லை.
வழக்கறிஞர் நாராயணன்: 100 மீ சென்றபிறகு மேற்சொன்ன வாகனம் மீண்டும் பின்னால் வந்து ரயில்வே கேட்டைக் கடந்துசென்றது?
சுஜிஸ்: பார்க்கவில்லை.
வழக்கறிஞர் நாராயணன்: எம்.எம்.540 மகேந்திரா ஜீப் ரயில்வே கேட்டைக் கடந்துசெல்லுமா?
சுஜிஸ்: செல்லும்.
வழக்கறிஞர் நாராயணன்: நீங்கள் பார்த்தபோது அந்த வாகனத்தில் ஆட்கள் இருந்தார்களா?
சுஜிஸ்: பார்க்கவில்லை.
வழக்கறிஞர் நாராயணன்: ஒரு பிணம் தலை வேறு உடல் வேறாகக் கிடப்பதாக காவல் துறையினர் மறுநாள் 24.6.2015-ம் தேதி காலையில் காவல் துறையினர் விசாரித்தார்கள் என்று சொன்னால்?
சுஜிஸ்: இல்லை.
வழக்கறிஞர் நாராயணன்: எதிரிகள் கேட்டுக்கொண்டதன் பேரிலும், அச்சுறுத்தலின் பேரிலும் நீங்கள் பொய்யாகச் சாட்சியம் அளிக்கிறீர்கள்?
சுஜிஸ்: இல்லை.

சாட்சி எண்: 39

பெயர்: அருண் (தீரன் சின்னமலை பேரவையின் அனுதாபி)
நீதிமன்ற பெஞ்ச் கிளர்க் யாமினி: சத்தியமா சொல்றேனு சொல்லுங்க.
அருண்: சத்தியமா சொல்றேன்.
வழக்கறிஞர் கருணாநிதி: எங்குக் குடியிருக்கிறீர்கள், என்ன தொழில் செய்கிறீர்கள்?
அருண்: நான் நாமக்கல் மாடகாசம்பட்டியில் குடியிருந்து விவசாயம் செய்துவருகிறேன்.
வழக்கறிஞர் கருணாநிதி: (கூண்டுக்குள் நின்றிருப்பவர்களைக் காட்டி...) இவர்களைத் தெரியுமா?
அருண்: யாரையும் தெரியாது.
வழக்கறிஞர் கருணாநிதி: யுவராஜைப் பார்த்திருக்கிறீர்களா?
அருண்: (பந்தாவாக...) போஸ்டரில் பார்த்திருக்கிறேன். ஒருமுறை நேரில் பார்த்திருக்கிறேன். பார்த்தால் தெரியலாம்.
நீதிபதி: வீடியோ புட்டேஜ் பார்த்தால் தெரியுமா?
அருண்: தெரியும்.
வழக்கறிஞர் கருணாநிதி: நீங்க என்ன இனம்?
அருண்: நான் கொங்கு வேளாளர் இனம்.
வழக்கறிஞர் கருணாநிதி: காவல் துறையிடம் ஏதாவது பொருட்கள் ஒப்படைத்தீர்களா?
அருண்: எந்தப் பொருளையும் ஒப்படைக்கவில்லை.
வழக்கறிஞர் கருணாநிதி: (ஆவணத்தைக் காட்டி...) இது உங்க கையெழுத்துதானே? எதற்காகப் போட்டீர்கள்.
அருண்: (ஆவணத்தைக் பார்த்து...) காவல் துறை கேட்டதால் போட்டிருக்கலாம்.
வழக்கறிஞர் நாராயணன்: தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் நோக்கங்கள் தெரியுமா?
அருண்: தெரியாது.
வழக்கறிஞர் நாராயணன்: நாமக்கல்லில் 14.6.2015-ம் தேதி ஒரு கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்துக்கு யுவராஜ் வந்திருந்தார்?
அருண்: ஆம். அப்போதுதான் யுவராஜை முதன்முதலில் பார்த்தேன்.
வழக்கறிஞர் நாராயணன்: உங்களுக்கு ஃபேஸ்புக் ஐ.டி உண்டா?
அருண்: இல்லை.
வழக்கறிஞர் நாராயணன்: mkparun68@gmail.com என்ற ஃபேஸ்புக் அக்கவுன்ட் உங்களுடைய பெயரில் உள்ளது?
அருண்: இல்லை.
வழக்கறிஞர் நாராயணன்: 14.6.2015-ம் தேதி தீரன் சின்னமலை கவுண்டர்கள் பேரவை சார்பில் நாமக்கல் மாவட்டம் கே.பி.ஆர் மண்டபத்தில் பேரவைக் கூட்டத்துக்காக ஏற்பாடு செய்தீர்கள். அதுகுறித்து உங்களுடைய முகநூலில் நோட்டீஸ் பதிவேற்றம் செய்தீர்கள். அந்தக் கூட்டத்தில் யுவராஜ் பேசியபோது எடுத்த புகைப்படங்களையும், உங்கள் முகநூலில் நீங்கள் அப்லோடு செய்தீர்கள்?
அருண்: இல்லை.
வழக்கறிஞர் நாராயணன்: 26.12.2015-ம் தேதி கோயம்புத்தூர் சி.பி.சி.ஐ.டி., ஏ.டி.எஸ்.பி அலுவலகத்தில் வி.ஏ.ஓ செந்தில்குமார் மற்றும் அவரின் உதவியாளர் சிவக்குமார் முன்பு விசாரித்தபோது நீங்கள் நடந்த விவரங்களைச் சொல்லி உங்களுடைய முகநூலில் இருந்தும், தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை முகநூலில் இருந்தும் அழைப்பிதழ் நோட்டீஸ் முதலான 14 புகைப்படங்களை அலுவலக கணினியில் பதிவிறக்கம் செய்தீர்கள். அதனை மேற்படி சாட்சிகள் முன்பாக ஒரு சி.டி-யில் பதிவுசெய்து ஏ.டிஎஸ்.பி-யிடம் தந்தீர்கள். ஏ.டி.எஸ்.பி அந்த சி.டி-யை ஒரு கவரில் வைத்து ஒட்டினார். அந்த கவரில் நீங்களும் ஏ.டி.எஸ்.பி-யும் கையொப்பமிட்டீர்கள். எதிரிகள் உங்கள் சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பதாலும், எதிரிகள் கேட்டுக்கொண்டதன் பேரிலும், எதிரிகளைக் காப்பாற்ற வேண்டி நீங்கள் பொய் சாட்சியம் அளிக்கிறீர்கள் என்று சொல்கிறேன்.
அருண்: இல்லை.
அதையடுத்து அருணை வீடியோ கான்பரன்ஸ் அறைக்கு அழைத்துச் சென்று திருச்சி சிறையில் இருந்து ஆஜராகி இருந்த யுவராஜைப் பார்த்து, யுவராஜைப்போல இருக்கிறார் என்று கூறினார்.

சாட்சி எண்: 40

பெயர்: மகேஸ்வரன் (தீரன் சின்னமலை பேரவையின் கரூர் மாவட்டச் செயலாளர்)
நீதிமன்ற பெஞ்ச் கிளர்க் யாமினி: சத்தியமா சொல்றேனு சொல்லுங்க.
மகேஸ்வரன்: சத்தியமா சொல்றேன்.
வழக்கறிஞர் கருணாநிதி: எங்குக் குடியிருக்கிறீர்கள், என்ன படித்திருக்கிறீர்கள்?
மகேஸ்வரன்: நான் கரூர் மாவட்டம் பெரியகுளத்துபாளையத்தில் குடியிருக்கிறேன். 12-ம் வகுப்புவரை படித்துள்ளேன்.
வழக்கறிஞர் கருணாநிதி: இந்த வழக்கில் தொடர்புடையவர்களில் யார்யாரைத் தெரியும்?
மகேஸ்வரன்: யுவராஜ் மற்றும் அவருடைய சகோதரர் தங்கராஜைத் தெரியும்.
வழக்கறிஞர் கருணாநிதி: நீங்கள் தீரன் சின்னமலை பேரவையில் என்ன பொறுப்பில் இருந்தீர்கள்?
மகேஸ்வரன்: கரூர் மாவட்டச் செயலாளராக இருந்தேன்.
வழக்கறிஞர் கருணாநிதி: யுவராஜ் என்ன பொறுப்பு?
மகேஸ்வரன்: நிறுவனத் தலைவர்.
வழக்கறிஞர் கருணாநிதி: 25.6.2015-ம் தேதி யுவராஜை காவல் துறையினர் தேடுவதாகத் தெரியுமா?
மகேஸ்வரன்: தெரியும்.
வழக்கறிஞர் கருணாநிதி: அது சம்பந்தமாக காவல் துறையினர் உங்க வீட்டிற்கு வந்து விசாரணைக்கு அழைத்துச் சென்றார்களா?
மகேஸ்வரன்: ஆம்.
வழக்கறிஞர் கருணாநிதி: சம்பவத்துக்கு 5மாதம் முன்பு கரூர் ஹோட்டலில் கூட்டம் நடத்தினீர்களா?
மகேஸ்வரன்: அறிமுக கூட்டம் நடத்தினோம்.  
வழக்கறிஞர் கருணாநிதி: நீங்கள் தலைமை தாங்கிய அந்தக் கூட்டத்துக்கு யுவராஜ் வந்திருந்தாரா?
மகேஸ்வரன்: வந்திருந்தார்.
வழக்கறிஞர் கருணாநிதி: உங்க பேரவையின் நோக்கம் என்ன?
மகேஸ்வரன்: கவுண்டர் சமுதாயம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
வழக்கறிஞர் கருணாநிதி: யுவராஜ் தீரன்சின்னமலை பேரவை என்று ஒரு வாட்ஸ்அப் குரூப் வைத்திருந்தார் அந்த குரூப்பில் நீங்களும் இருந்தீர்கள்?
மகேஸ்வரன்: ஆம்
வழக்கறிஞர் கருணாநிதி: (செல்போன்களை காட்டி...)காவல் துறை உங்களிடமிருந்து என்னென்ன போன்கள் கைப்பற்றினார்கள்?
மகேஸ்வரன்: நோக்கியா, சோனி.
பிறகு மகேஸ்வரன் வீடியோ கான்பரன்ஸ் அறைக்கு அழைத்துச் சென்று திருச்சி சிறையில் இருந்த யுவராஜைப் பார்த்து அடையாளம் காட்டினார்.

மதியம் உணவு இடைவேளைக்குப் பிறகு...

வழக்கறிஞர் நாராயணன்: உங்கள்மீதும் யுவராஜ்மீதும் கரூர் காவல் நிலையத்தில் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது?

மகேஸ்வரன்: அது பொய் வழக்கு.
வழக்கறிஞர் நாராயணன்:  கடந்த 27.2.2015-ம் தேதி கரூரைச் சேர்ந்த மேலை பழனிச்சாமி என்பவர் உங்கள் கவுண்டர் சமுதாயத்தை இழிவுப்படுத்தி எழுதப்பட்ட, 'நான் மிகை அலங்காரம் செய்துகொள்கிறேன்' என்ற புத்தகத்தின் ஆசிரியர் புலியூர் முருகேசன் என்பவரை ஆதரித்துப் பேசியதற்காக அவருடைய வீட்டின் முன்பக்க கூரையைச் சேதப்படுத்தியதற்காக உங்கள்மீதும் யுவராஜ்மீதும் கரூர் நகரக் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது?
மகேஸ்வரன்: ஆம்.
வழக்கறிஞர் நாராயணன்:  ஜூன் 2015-ல் கரூர் அரோமா ஹோட்டலில் யுவராஜ் தலைமையில் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் கவுண்டர் சமுதாயத்தில் ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என்றும், கவுண்டர் சாதிப் பெண்களை மற்ற தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த ஆண்கள் காதலித்து திருமணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்திப் பேசினார்.
மகேஸ்வரன்: இல்லை.
வழக்கறிஞர் நாராயணன்:  மாவீரன் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை வாட்ஸ்அப் குருப்பில் நீங்கள் இருக்கிறீர்கள்?
மகேஸ்வரன்: இல்லை.
வழக்கறிஞர் நாராயணன்: உங்களுக்கு மாவீரன் தீரன் சின்னமலை என்ற வாட்ஸ்அப் குரூப்பில் கோகுல்ராஜ் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகப் பேசுவதுபோல் ஒரு வீடியோ வந்தது. அந்த வீடியோவை உங்களிடம் கேட்டவர்களுக்கு, நீங்கள் வாட்ஸ்அப் மூலம் அனுப்பினீர்கள். அந்தச் சமயத்தில் ஒரு சோனி மொபைல் போனை நீங்கள் பயன்படுத்திவந்தீர்கள்?
மகேஸ்வரன்: இல்லை.  
வழக்கறிஞர் நாராயணன்: 7.12.2015-ம் தேதி கோயம்புத்தூர் சி.பி.சி.ஐ.டி ஏ.டி.எஸ்.பி., நாமக்கல் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் உங்களை விசாரித்தபோது உங்களுடைய மூன்று செல்போன்களையும் ஒப்படைத்தீர்கள். எதிரிகள் உங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலும், எதிரிகள் கேட்டுக்கொண்டதன் பேரிலும், எதிரிகளுக்குப் பயந்துகொண்டும், எதிரிகளைக் காப்பாற்றவேண்டி நீங்கள் பொய் சாட்சியம் அளிக்கிறீர்கள்?
மகேஸ்வரன்: இல்லை.

அதையடுத்து நீதிபதி 20-ம் தேதிக்கு வாய்தா தள்ளிப் போட்டார்.