Published:Updated:

`பகலில் கால்டாக்ஸி டிரைவர்... இரவில் கைவரிசை’ - கொள்ளைக்கு உதவிய கூகுள் மேப் 

`பகலில் கால்டாக்ஸி டிரைவர்... இரவில் கைவரிசை’ - கொள்ளைக்கு உதவிய கூகுள் மேப் 
`பகலில் கால்டாக்ஸி டிரைவர்... இரவில் கைவரிசை’ - கொள்ளைக்கு உதவிய கூகுள் மேப் 

கூகுள் மேப் மூலம் பணக்காரர்கள் குடியிருக்கும் இடங்களைத் தேர்வு செய்துவிட்டு இரவில் கொள்ளையடிப்போம் என்று ஆந்திர கொள்ளை கும்பல் போலீஸாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். 


சென்னை தேனாம்பேட்டை, எல்டாம்ஸ் சாலையில் சந்தானம் என்பவரின் வீட்டில் 27 சவரன் நகைகள் சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகரில் டாக்டர் கௌசிக் வீட்டில் 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர நகைகள், மேலும் தி.நகர் டாக்டர் பாலகுமார் வீட்டில் 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளைபோனது. இந்தக் கொள்ளைச் சம்பவங்கள் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.  கொள்ளையர்களைப் பிடிக்க நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டி, சூளைமேடு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரித்தீஷ்குமார் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்த 3 கொள்ளைகளில் தொடர்புடைய கொள்ளைக் கும்பல் தெலங்கானா போலீஸாரிடம் கடந்த டிசம்பர் 1-ம் தேதியன்று சிக்கியதாக சென்னை போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அவர்களிடமிருந்து ஒரு கோடி மதிப்புள்ள வைரம், பிளாட்டினம், தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஹைதராபாத் வடக்கு மண்டல டாஸ்க் போர்ஸ் போலீஸார் வாகன சோதனை நடத்தியபோது ஆந்திராவைச் சேர்ந்த கொள்ளைக் கும்பல் சிக்கியது. விசாரணையில் அவர்களின் பெயர் சதீஷ் ரெட்டி (34), நரேந்திர நாயக் (24), ஸ்ரீனிவாஸ் (25), சுதீர் (27) தெரியவந்தது. இவர்கள் சென்னையிலும் கூகுள் மேப் மூலம் இடங்களைக் கண்டறிந்து கொள்ளையடித்ததாகத் தெலங்கானா போலீஸாரிடம் தெரிவித்தனர். 

 இதையடுத்து நுங்கம்பாக்கம் உதவிகமிஷனர் முத்துவேல்பாண்டி தலைமையில் போலீஸார் ஐதராபாத்துக்கு சென்று கொள்ளையர்களை சென்னைக்கு அழைத்துவந்தனர். அவர்களிடம் விசாரித்தபோது தி.நகர், நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை ஆகிய இடங்களில் கொள்ளையடித்ததை ஒத்துக்கொண்டனர். 

 இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``இந்தக் கொள்ளைக் கும்பலுக்குத் தலைவனாக சதீஷ்ரெட்டி செயல்பட்டுள்ளார். இவர், திநகர் டாக்டர் பாலகுமார் வீட்டில் தனியாக சென்று பின்பக்க கதவை உடைத்து கொள்ளையடித்ததாகத் தெரிவித்துள்ளார்.  ‘‘கடந்த இரண்டு ஆண்டுகளில் ஐதராபாத்தில் இரண்டு இடங்களிலும், நெல்லூரில் ஓர் இடத்திலும் சென்னையில் நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, மாம்பலம் ஆகிய பகுதிகளில் 7 வீடுகளின் பூட்டை உடைத்துக் கொள்ளையடித்ததாகத் தெரிவித்தார். பகல் நேரங்களில் கால் டாக்ஸி டிரைவர்கள்போல் நோட்டமிட்டு இரவு நேரங்களில் கொள்ளையடிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர். கூகுள் மேப்பை பார்த்து பணக்காரர்கள் இருக்கும் இடங்களைத் தேர்வு செய்து அந்த இடங்களில் நோட்டமிட்டு கொள்ளையடித்ததாகவும் கூறியுள்ளார். சதீஷ்ரெட்டி, நரேந்திர நாயக், ஸ்ரீனிவாஸ், சுதீர் ஆகியோரிடமிருந்து 700 கிராம் நகைகளை பறிமுதல் செய்துள்ளோம். கோர்ட்டில் டிரான்சிட் வாரண்டு மூலம் அனுமதி பெற்று சென்னைக்கு அழைத்து வந்துள்ளோம். இங்கு சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்துள்ளோம்" என்றனர்.