Published:Updated:

மாமல்லபுரம் அருகே காவலரைக் கத்தியால் குத்திய ஏட்டு கைது!

மாமல்லபுரம் அருகே காவலரைக் கத்தியால் குத்திய ஏட்டு கைது!
மாமல்லபுரம் அருகே காவலரைக் கத்தியால் குத்திய ஏட்டு கைது!

காஞ்சிபுரம் எஸ்.பி அலுவலகத்திற்கு ரோந்து வாகனத்தைச் சரியான நேரத்தில் கொண்டு செல்லாததால் இரண்டு காவலர்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பு கத்திக்குத்துவரை சென்றிருக்கிறது. இதனால் இரண்டு காவலர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கத்தியால் குத்திய காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அடுத்துள்ள சதுரங்கப்பட்டினம் காவல் நிலையத்தின் தலைமைக் காவலராக பணிபுரிபவர் மலையமான். அதே காவல்நிலையத்தில் முதல்நிலை காவலராக பூபாலன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர்கள் கிழக்கு கடற்கரைச் சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ரோந்து வாகன சோதனைக்காக காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பு அலுவலகத்திற்கு ரோந்து வாகனத்தைக் கொண்டு செல்லவில்லை. இதனால் அதிகாரிகள் மலையமானை வாகனத்தை ஏன் கொண்டு வரவில்லை எனக் கடுமை காட்டி இருக்கிறார்கள்.

இதனால் ஆத்திரமடைந்த மலையமான் கோபமாக கிழக்கு கடற்கரை சாலைப் பகுதியில் மாமல்லபுரம் சுங்கச்சாவடி அருகில் பூபாலன் பணியில் இருந்த இடத்திற்கு வந்தார். அப்போது இருவருக்கும் வாகனத்தைக் கொடுக்காதது தொடர்பாக வாய்த் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பூபாலன் மலையமானைத் தாக்கினார். தனக்குக் கீழ் பணிபுரியும் காவலர் தன்னைத் தாக்கிவிட்டார் என ஆத்திரம் அடைந்த மலையமான், ரோந்து காவல்நிலையத்தில் இருந்த கத்தியை கொண்டுவந்து பூபாலனை குத்தினார். இதனால்,. முகம் உள்ளிட்ட இடங்களில் பூபாலன் பலத்த காயமடைந்தார். காயமடைந்த பூபாலனை சக காவலர்கள் மீட்டு திருப்போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலென்ஸில் ஏற்றி அனுப்பினார்கள். பணியின் போது ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக அந்த இரண்டு காவலர்களையும் மாவட்ட கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி பணியிடை நீக்கம் செய்தார். மேலும் கத்தியால் குத்திய மலையமான் கைது செய்யப்பட்டுள்ளார்.