Published:Updated:

காஞ்சிபுரம் போலீஸ் தாக்கியதில் இளைஞர் மரணமா ?

காஞ்சிபுரம் போலீஸ் தாக்கியதில் இளைஞர் மரணமா ?
காஞ்சிபுரம் போலீஸ் தாக்கியதில் இளைஞர் மரணமா ?

துவிற்பனைக்கு அதிகமாகப் பணம் வாங்குவதைத் தட்டிக்கேட்ட இளைஞர்களைக் கைது செய்து, அவர்களைக் கொடூரமாக தாக்கி இருக்கின்றனர் காஞ்சிபுரம் காவல்துறையினர். இதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இன்னொருவருக்குக் கால்கள் உடைந்தன. 

காஞ்சிபுரத்தில் மாதத் தவணையில் வீட்டு உபயோகப் பொருள்களை விற்பனை செய்யும் வியாபாரம் செய்துவருபவர்கள் முத்து (23), மாணிக்கம் (20) ஆகியோர். இவர்கள் இருவரும் நவம்பர் 28-ம் தேதி அன்று, காஞ்சிபுரத்தில் உள்ள பிரபல ஹோட்டலில் உள்ள பாரில் மது அருந்தினர். அப்போது சர்வர் கொடுத்த பில் தொகை இவர்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருந்ததால், அவரிடம் இவ்வளவு தொகையை ஏன் வசூல் செய்கிறீர்கள் எனக் கேட்டு தகராறில் ஈடுபட்டனராம்.  அதில் ஏற்பட்ட கைகலப்பில் அந்த இளைஞர்கள் அங்கிருந்த டியூப் லைட்டை உடைத்துள்ளனர். இதைத் தொடர்ந்து, போலீஸாருக்கு ஹோட்டல் நிர்வாகத்தினர் புகார் தெரிவித்தனர். அங்கு வந்த விஷ்ணுகாஞ்சி காவல் நிலைய போலீஸாருடனும், அவர்கள் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். போலீஸ் நிலையத்துக்குக் கொண்டுசெல்லப்பட்ட முத்து, மாணிக்கம் இருவரையும் போலீஸார் சரமாரியாகத் தாக்கி உள்ளனர். காயமடைந்த அவர்களை, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர்.

சிகிச்சை அளித்த மருத்துவர்,'எப்படி அடிபட்டது?' என அந்த இளைஞர்களைக் கேட்டுள்ளார். அதற்குக் காவலர்கள் தாக்கியதாக அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். இதையடுத்து, அந்த மருத்துவர், `இப்படிக் கண்டபடி அடித்திருக்கிறீர்கள், உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருந்தால் என்ன செய்வது?' எனக் கடுமையாகப் பேசினாராம். பிறகு இளைஞர்கள் இருவரையும் மீண்டும் காவல் நிலையத்துக்குக் கொண்டு வந்த  காவலர்கள், `டாக்டரிடம் நாங்கள் அடித்ததாகச் சொல்லலாமா?’ எனக் கூறி மீண்டும் கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் மாணிக்கம் மயக்கமடைந்து விட்டார். அப்போதும் அவரைக் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள். மாணிக்கத்திற்கு மூச்சுப் பேச்சு இல்லாததால் அவரை இரவு 10 மணிக்கு மீண்டும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்குக் காவலர்கள் கொண்டு சென்றார்கள். ஆனால், `அவரைச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுவிடுங்கள்' எனச் சொல்லியிருக்கிறார்கள்.

பின்னர், போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அவசர அவசரமாகக் கொண்டு சேர்த்துள்ளனர். `அவர்களை ஊடகங்களைச் சேர்ந்தவர்கள் சந்தித்து விடக்கூடாது' என்பதற்காக இரண்டு காவலர்கள் மருத்துவமனையில் பாதுகாப்புக்கு நின்றுள்ளனர். என்றாலும் சிகிச்சை பலனின்றி மாணிக்கம் இறந்துவிட்டார். மற்றொரு இளைஞரான முத்து கால் உடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி, ``அந்த ஹோட்டலில் அவர்கள் தகராறில் ஈடுபட்ட சி.சி.டி.வி காட்சிப் பதிவுகள் இருக்கின்றன. காவல்துறையினர் அவர்களைத் தாக்கவில்லை. அவர்கள் உடம்பில் காயம் இல்லை. மூளைக்குச் சரியாக ஆக்சிஜன் செல்லாததால் அவர் இதுவரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். நாங்கள் சிகிச்சை அளிக்கவில்லை. நீதிமன்றத்தில் எங்கள் தரப்பு விளக்கத்தைக் கொடுக்கத் தயாராக உள்ளோம்” என்றார்.

``கடந்த 14-ம்தேதி மாமல்லபுரம் பகுதியில் ஏட்டு ஒருவர், சக காவலரையே கத்தியால் குத்தி இருக்கிறார். இதில் அந்தக் காவலர் சிகிச்சை பெற்று வருகிறார். கத்தியால் குத்திய ஏட்டு கைது செய்யப்பட்டுள்ளார். அதுபோல் கடந்த வாரம் காஞ்சிபுரம் காவல் பயிற்சி மையத்தில் உயர் அதிகாரிகள் தங்களை அடிமைபோல நடத்துவதாகப் பெண் காவலர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் கூடுதல் டி.ஜி.பி, விளக்கமளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் காவல்துறையில் உள்ளவர்கள் பெரும்பாலும் மனநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். உயிரிழந்த மாணிக்கம் குடும்பத்துக்கு காவல்துறை பதில் சொல்லியே ஆகவேண்டும்” என்று கவலையுடன் தெரிவிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.