Published:Updated:

``சிறையில் இருந்து வந்தும் திருந்தவில்லை!” -அம்பத்தூரில் சிக்கிய `பாலியல்’ குற்றவாளி

``சிறையில் இருந்து வந்தும் திருந்தவில்லை!” -அம்பத்தூரில் சிக்கிய `பாலியல்’ குற்றவாளி
``சிறையில் இருந்து வந்தும் திருந்தவில்லை!” -அம்பத்தூரில் சிக்கிய `பாலியல்’ குற்றவாளி

வாகனச் சோதனையில் சிக்கிய சில்மிஷத் திருடன் அறிவழகன், திருடச்செல்லும் இடங்களில், 100-க்கும் மேற்பட்ட பெண்களோடு நெருக்கமாக இருந்ததாகவும் அதை வீடியோவாக எடுத்ததாகவும் வாக்குமூலம் கொடுத்துள்ளார். 

 சென்னை பட்டரவாக்கம் பகுதியில், அம்பத்தூர் எஸ்டேட் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக மின்னல் வேகத்தில் பைக்கில் வந்த இளைஞர் ஒருவரை போலீஸார் மடக்கினர். அவரிடம் வாகனத்துக்குரிய எந்த ஆவணங்களும் இல்லை. அதனால், அந்த வாலிபரிடம் போலீஸார் விசாரித்தபோது, அது திருட்டு பைக் என்று தெரியவந்தது. மேலும்,  அவரின் பெயர் அறிவழகன் என்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் திருப்பத்தூர் அருகில் உள்ள மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. அவர்மீது 2017 நவம்பர் மாதம், வேளச்சேரி போலீஸ் நிலையத்தில் வழிப்பறி வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. வழக்கு பதிவுசெய்த 10 நாளில் குற்றப்பத்திரிகை தாக்கல்செய்து, 28 நாளில் தண்டனையை அறிவழகனுக்குப் பெற்றுக்கொடுத்தார் இன்ஸ்பெக்டர் வேலு. சிறையிலிருந்து வெளியில் வந்த அறிவழகன், மீண்டும் கைவரிசைகாட்டத் தொடங்கியுள்ளார்.

 தற்போது, வாகனச் சோதனையில் சிக்கிய அறிவழகனை அம்பத்தூர் எஸ்டேட் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துவந்து இன்ஸ்பெக்டர் விஜயராகவன் தலைமையிலான போலீஸ் டீம்  துருவித்துருவி விசாரணை நடத்தியது. அப்போது, திருடச் சென்ற இடங்களில் 20 -க்கும் மேற்பட்ட  பெண்களை மிரட்டி, அவர்களிடம் தவறாக நடந்ததாக அறிவழகன் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே, அறிவழகன் பற்றிய தகவல் சென்னை போலீஸாருக்குத் தெரியும் என்பதால், இந்த முறை அவரிடம் ஸ்பெஷலாக விசாரிக்க துணை கமிஷனர் ஈஸ்வரன் உத்தரவிட்டார். அதன்பேரில், உதவி கமிஷனர் கர்ணன், இன்ஸ்பெக்டர் விஜயராகவன், சப்-இன்ஸ்பெக்டர்கள் புருஷோத்தமன், ரமேஷ், காவலர்கள் சார்லஸ், அன்பு சதீஷ், முரளி ஆகியோர் கொண்ட தனிப்படையினர் அறிவழகனிடம் விசாரித்து, முழுத் தகவலையும் சேகரித்தனர். 

அறிவழகன், திருடிய இடங்களின் முகவரிக்குச் சென்ற போலீஸார், அங்குள்ள பெண்களிடமும் விசாரித்தனர். அப்போது, அங்குள்ள பெண்கள் கதறி அழுதுள்ளனர். அவர்கள், தங்களின் எதிர்காலம் கருதியும் குடும்பச் சூழ்நிலை கருதியும் அறிவழகன் மீது பாலியல் 
புகார் கொடுக்கவில்லை. இதனால், அவர்மீது பாலியல் ரீதியான நடவடிக்கைகளை போலீஸாரால் எடுக்கமுடியவில்லை. திருட்டு வழக்கில் அவர்மீது அம்பத்தூர் எஸ்டேட் போலீஸார் நடவடிக்கை எடுத்ததோடு, அவரிடமிருந்து 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளைப் பறிமுதல்செய்துள்ளனர். 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``ஆவடி, காமராஜர்புரத்தில் உள்ள ஒரு வீட்டில் திருட்டுப்போனதாக எங்களுக்கு புகார் வந்தது. அதன்பேரில், அந்தப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வுசெய்தோம். அப்போது அறிவழகன், தெருவில் நடந்துசெல்லும் காட்சி சுவர் ஏறிக் குதித்து வீட்டுக்குள் குதிக்கும் காட்சிகள் பதிவாகியிருந்தன. இதனால், அறிவழகனைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது. அவரின் ஒவ்வொரு நடவடிக்கையையும் கண்காணித்துவந்தோம். ஆனால், அவர் எங்களிடம் சிக்காமல் டிமிக்கி காட்டிக்கொண்டிருந்தார். அம்பத்தூர் கள்ளிகுப்பம் பகுதியில் அறிவழகனுக்கு உதவும் ஒரு பெண் உள்ளார். அவரின் வீட்டுக்கு அடிக்கடி அவர் வரும் தகவல் எங்களுக்குக் கிடைத்தது. இதனால், அந்த வீட்டை நாங்கள் கண்காணித்தோம். ஆனால், அவர் எங்களிடம் சிக்கவில்லை. இந்தச் சமயத்தில்தான் வாகனச் சோதனையின்போது எங்களிடம் சிக்கினார். அப்போது, எங்களிடமிருந்து தப்பிக்க அவர் முயன்றார். ஓடும்போது அவர் கீழே விழுந்ததில்தான் அவரின் வலது கை முறிந்தது. அதற்கு சிகிச்சை அளித்து கை கட்டோடு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்துள்ளோம்" என்றனர். 

 போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``அறிவழகன் கல்லூரி படித்த சமயத்திலிருந்தே `இந்தப் பழக்கம்' அவருக்கு ஏற்பட்டுள்ளது. மாணவிகள் கல்லூரி விடுதிக்குள் நுழைந்தபோது சிக்கியுள்ளார். அதன்பிறகு, வேலை தேடி ஆவடியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார். அங்கு, பக்கத்து வீட்டின் பாத்ரூமை எட்டிப்பார்த்தபோது, பொதுமக்களிடம் சிக்கி தர்மஅடி வாங்கியுள்ளார். அதன்பிறகு உறவினர்கள் அறிவழகனை வீட்டை விட்டு விரட்டியுள்ளனர். இதனால் கிண்டி, அடையாறு, சைதாப்பேட்டை பகுதிகளில் தங்கியிருந்து திருடியுள்ளார். திருடச் செல்லும் இடங்களில் 75-க்கும் மேற்பட்ட பெண்களிடம் தவறாக நடந்துள்ளார். அதை வீடியோவாகவும் எடுத்துள்ளார். வேளச்சேரி போலீஸாரிடம் சிக்கியபோது, அந்த வீடியோக்கள் மூலம் அவரின் இன்னொரு முகம் எங்களுக்குத் தெரியவந்தது. இந்த முறை, அம்பத்தூர் காவல் சரகத்தில் திருடச்சென்ற இடங்களில்  பெண்களிடம் அத்துமீறி நடந்துள்ளார். ஆனால், அதை வீடியோவாக எடுக்கவில்லை. தற்போது அறிவழகன், சாதாரண செல்போனை மட்டும் பயன்படுத்துகிறார். வீடியோ எடுத்தால் சிக்கிக்கொள்வோம் என்ற பயத்தில் முன்னெச்சரிக்கையாக இருந்துள்ளார். அறிவழகனால் பாதிக்கப்பட்ட பெண்களிடம் விசாரித்துவிட்டோம். ஆனால், அவர்கள் யாரும் புகார் கொடுக்கவில்லை. இதனால், திருட்டு வழக்கில் அவரை கைதுசெய்துள்ளோம்" என்றார். 

 யார் இந்த அறிவழகன் என்று விசாரித்தபோது, அவரின் தந்தை அரசு அலுவலகத்தில் பணியாற்றிவருகிறார். அவரின் சகோதரர் இன்ஜினீயராகப் பிரபல ஐடி நிறுவனத்தில் வேலைபார்க்கிறார். தங்கை கல்லூரி படித்துவருகிறார். அறிவழகனும் பிஎஸ்சி, எம்.பி.ஏ படித்துவிட்டு பெங்களூருவில் பணியாற்றினார். ஓசூரில் அவர், ஒரு விவகாரத்தில் சிக்கியபிறகு சென்னைக்கு வந்தார். இங்கு தனியாக வீடு எடுத்துத் தங்கும் அவர், சில நிறுவனங்களில் வேலைபார்த்தார். ஆனால், அதில் போதிய  வருமானம் கிடைக்கவில்லை. ஆடம்பரமாகவும் சந்தோஷமாகவும் வாழ ஆசைப்பட்ட அறிவழகன், திருட்டுத் தொழிலில் ஈடுபட்டார்.  அப்போது, தனியாக இருக்கும் பெண்களிடம் எல்லை மீறுவதோடு, அதைத் தன்னுடைய செல்போனில் வீடியோவாக எடுப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். தற்போது அவர், திருமுல்லைவாயலில் குடியிருக்கிறார். திருமணமாகவில்லை. அவர் ஒவ்வொரு முறை போலீஸில் சிக்கும்போதும் சட்டரீதியாக அவரைக் காப்பாற்ற வழக்கறிஞர்கள் டீம் ஒன்று செயல்படுவதாகத் தகவல் கிடைத்துள்ளது.''