Published:Updated:

கோகுல்ராஜ் கொலை வழக்கில் புதிய திருப்பம்!

`அவருக்குத் தமிழ் தெரியாது. மலையாளம் மட்டுமே தெரியும்' என்றதையடுத்து மொழிபெயர்ப்பு இல்லாமல் தவித்தோம். பிறகு, யுவராஜ் தரப்பு வழக்கறிஞர் அஜூதாகூர் மொழிபெயர்த்து கொடுத்தார்.

கோகுல்ராஜ் கொலை வழக்கில் புதிய திருப்பம்!
கோகுல்ராஜ் கொலை வழக்கில் புதிய திருப்பம்!

சேலம் மாவட்டம் ஓமலூர் பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கு நாமக்கல் முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி இளவழகன் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. அரசு சிறப்பு வழக்கறிஞர் கருணாநிதி, கோகுல்ராஜ் தாய் சித்ராவின் வழக்கறிஞர் நாராயணன் மற்றும் யுவராஜ் தரப்பு வழக்கறிஞர் கோபால கிருஷ்ண லட்சுமண ராஜூ ஆகியோர் வாதாடி வருகிறார்கள்.

இந்நிலையில், "அரசு சிறப்பு வழக்கறிஞர் கருணாநிதி சிறந்த முறையில் வாதாடுவதில்லை. அவருடைய வாதத்தில் எங்களுக்குத் திருப்தி இல்லை. தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமைச் சட்டத்தின்படி பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் விரும்பும் வழக்கறிஞரை நியமிக்கும் உரிமை இருப்பதால் உயர் நீதிமன்றம் சென்று அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞராகப் பவானி பா.ப.மோகனை நியமிக்க விருப்பம் தெரிவித்தோம். அதையடுத்து உயர் நீதிமன்றம் கோகுல்ராஜ் கொலை வழக்கின் அரசுத் தரப்பு வழக்கறிஞராக பா.ப.மோகனை நியமித்துள்ளது'' என்கிறார்கள் கோகுல்ராஜ் குடும்பத்தினர்.

இதுபற்றி இவ்வழக்கை நடத்திவரும் நாமக்கல் சி.பி.சி.ஐ.டி போலீஸாரிடம் விசாரித்தபோது, ``அரசு நியமித்த வழக்கறிஞரைப் பற்றி நாங்கள் தவறாக எதுவும் கூற முடியாது. இருந்தாலும் அரசு சிறப்பு வழக்கறிஞர் கருணாநிதி எங்களிடம் வழக்குச் சம்பந்தமாக எந்தவொரு ஆலோசனையும் செய்வதில்லை. நாங்களாகவே அவரைச் சந்தித்து வரும் சாட்சிகளையும், அவர்களுக்கும் வழக்கிருக்கும் தொடர்புகளையும் சொன்னால்கூடக் காது கொடுத்துக் கேட்பதில்லை.  

யுவராஜ் தரப்பு வழக்கறிஞர் கோபால கிருஷ்ண லட்சுமண ராஜூ சாட்சிகளை மிரட்டும் தொனியில் ஒருமையில் கேள்விகளைக் கேட்டால்கூட அரசு சிறப்பு வழக்கறிஞர் கருணாநிதி குறுக்கீடு செய்யாமல் அமைதியாகவே இருக்கிறார். ரயில்வே கேங்மேன் சுஜிஸ் கே.கோட்டாசெரி-க்கு தமிழ் கொஞ்சம்தான் தெரியும். மலையாளம்தான் பேசுவார் என்று கூறியும், மொழிபெயர்ப்பு தேவையைப் பற்றி வாய்திறக்கவில்லை. நீதிபதி முன்பு விசாரிக்கும்போது, `அவருக்குத் தமிழ் தெரியாது. மலையாளம் மட்டுமே தெரியும்' என்றதையடுத்து மொழிபெயர்ப்பு இல்லாமல் தவித்தோம். பிறகு, யுவராஜ் தரப்பு வழக்கறிஞர் அஜூதாகூர் மொழிபெயர்த்துக் கொடுத்தார்.  

அதேபோல கோகுல்ராஜை 23.6.2015-ம் தேதி இரவே ரயில்வே தண்டவாளத்தில் பாயின்ட் 386-க்கும், 389-க்கும் இடையில் தண்டவாளம் 11/13 என்ற இடத்தில் கொலை செய்துபோட்டுவிட்டார்கள். அங்குப் பணியில் இருந்த ரயில்வே கேங்மேன் ராஜன் 24-ம் தேதி காலை 7:00 மணிக்கு 386-வது பாயின்ட்டிலிருந்து 389-வது பாயின்ட்டுக்கு தண்டவாளத்தில் செல்லாமல் டூவீலரில் செல்கிறார்.

பிறகு, 389-வது பாயின்ட்டிலிருந்து தண்டவாளத்தின் வழியாகத் திரும்பி நடந்து வரும்போது அங்குக் குப்பை பொறுக்கிக் கொண்டிருந்த ஒருவர் கூறியதையடுத்து, காலை 11:30 மணிக்குப் பிணத்தைப் பார்க்கிறார். இந்தத் தகவலை நீதிபதியிடம் அரசு சிறப்பு வழக்கறிஞர் கருணாநிதி சரியாக எடுத்துரைக்கவில்லை. ஆனால், யுவராஜ் வழக்கறிஞர் கோபால கிருஷ்ண லட்சுமண ராஜூ கேங்மேன் காலை 7:00 மணிக்குத் தண்டவாளத்தின் வழியாகத்தான் போனார். அப்போது பிணம் இல்லை. திரும்பி வரும் போது பிணம் இருந்ததாகத் திரித்துச் சொல்கிறார். இதை அரசு வழக்கறிஞர் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்.

இப்படி ஏனோதானோ என்று வழக்கைக் கையாண்டு வருவது வருத்தமாக இருக்கிறது. மேற்கொண்டு அவரைப் பற்றி எந்தத் தவறான கருத்தையும் சொல்ல முடியாது. யார் அரசு வழக்கறிஞராக வந்தாலும் எங்கள் தரப்பில் குற்றங்களை நிரூபிக்கப் பல ஆதாரங்கள் இருப்பதால் குற்றவாளிகள் இவ்வழக்கிலிருந்து ஒருபோதும் தப்பிக்க முடியாது'' என்றார்கள்.

இதுபற்றி கோகுல்ராஜ் அண்ணன் கலைச்செல்வனிடம் பேசியபோது, ``கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணைக்காக நானும், அம்மாவும் நீதிமன்றம் சென்றோம். எங்களிடமும் விசாரணை நடத்தினார்கள். எங்கள் தரப்பில் அரசு நியமித்த சிறப்பு வழக்கறிஞர் கருணாநிதியின் வாதங்கள் திருப்தியாக இல்லை. என் தம்பி கோகுல்ராஜ் கொலைக்கு முக்கியச் சாட்சியாக இருந்த ஸ்வாதியிடம் வழக்கறிஞர் கருணாநிதி விசாரணை மேற்கொண்ட விதமும் எங்களுக்கு மனநிறைவு இல்லாததைப்போல இருந்தது.

அதையடுத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உதவியோடு நாங்கள் உயர் நீதிமன்றம் சென்று எங்கள் தரப்பு வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் பா.ப.மோகனை நியமிக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தோம். அதையடுத்து உயர் நீதிமன்றம் அரசுத் தரப்பு வழக்கறிஞராகப் பா.ப.மோகனை நியமித்து ஆர்டர் போட்டிருக்கிறார்கள். அதை நாங்கள் நாமக்கல் கலெக்டரிடம் கொடுத்திருக்கிறோம். இனி, நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு வழக்கறிஞராக பா.ப.மோகன் சார் ஆஜராவார். எங்களுக்கு நிச்சயம் நியாயம் கிடைக்கும்'' என்றார்.

இதுபற்றி மூத்த வழக்கறிஞர் பா.ப.மோகனிடம் கேட்டதற்கு, ``இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கோகுல்ராஜ் கொலை வழக்கை நான் விசாரிக்க வேண்டும் எனப் பாதிக்கப்பட்டவர்கள் அரசிடம் கேட்டார்கள். ஆனால் அரசு, ஓய்வுபெற்ற அரசு வழக்கறிஞர் கருணாநிதியை நியமித்தது. கோகுல்ராஜ் குடும்பத்தினர் உயர் நீதிமன்றம் சென்றார்கள். தற்போது உயர் நீதிமன்றம் கோகுல்ராஜ் கொலை வழக்கில் அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞராக என்னை நியமித்துள்ளது. அந்த ஆணையை நாமக்கல் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி இருக்கிறது. அவரிடமிருந்து எனக்கு வந்ததும் வழக்கில் ஆஜராவேன். இன்னும் அந்த ஆர்டர் என் கையில் கிடைக்கவில்லை'' என்றார்.

இதுபற்றி நாமக்கல் கலெக்டர் ஆசியா மரியம், ``உயர் நீதிமன்ற உத்தரவையடுத்து கோகுல்ராஜ் கொலை வழக்கின் அரசுத் தரப்பு வழக்கறிஞராக பா.ப.மோகனை நியமித்து ஆணையை அவருக்கு அனுப்பிவிட்டோம்'' என்றார்.

அடுத்த வாய்தாவிலிருந்து நீதிமன்றத்தில் அனல் பறக்கும்.