Published:Updated:

`கொள்ளையடிக்க துப்பாக்கி; கையெறி குண்டு சப்ளை!’ - சிறைக்கு அனுப்பப்பட்ட ஆளுநர் மாளிகை காவலர்

`கொள்ளையடிக்க துப்பாக்கி; கையெறி குண்டு சப்ளை!’ - சிறைக்கு அனுப்பப்பட்ட ஆளுநர் மாளிகை காவலர்
`கொள்ளையடிக்க துப்பாக்கி; கையெறி குண்டு சப்ளை!’ - சிறைக்கு அனுப்பப்பட்ட ஆளுநர் மாளிகை காவலர்

மேலூரில் மருத்துவர் பாஸ்கரன் வீட்டில் துப்பாக்கி முனையில் லட்சக்கணக்கில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் சி.ஆர்.பி.எஃப் காவலர் உள்ளிட்ட மேலும் 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


மதுரை மாவட்டம், மேலூர் அழகர்கோயில் சாலையில் க்ளினிக் வைத்துள்ளார் டாக்டர் பாஸ்கரன். மேலூரில் பிரபல மருத்துவராக இருந்துவரும் இவர், காந்திஜி பூங்கா சாலை ரகுமான் திருமண மஹால் முன்பு சொகுசு பங்களா ஒன்றைக் கட்டி வசித்துவருகிறார். இந்நிலையில் பாஸ்கரன் வீட்டில் கடந்த 6-ம் தேதி மர்மக்கும்பல் ஒன்று துப்பாக்கி முனையில் கொள்ளையடித்துச் சென்றது. இதுதொடர்பாக, தென்மண்டல காவல் ஐ.ஜி சண்முக ராஜேஸ்வரன், எஸ்.பி மணிவண்னன் உள்ளிட்டோர் நேரில் விசாரணை நடத்தி 4 தனிப்படைகள் அமைத்து தேடிவந்தனர். இதில், இந்தக் கொள்ளை சம்பவத்துக்கு துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் கொடுத்து உதவிய மத்திய ரிசர்வ் படை காவலரான (சி.ஆர்.பி.எஃப்) குமார் மற்றும் முன்னாள் ஆயுதப்படை காவலரான ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 26 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

மேலும், பல்வேறு குற்றவழக்கில் தொடர்புடையவர்களை ஒருங்கிணைத்து நெட்வொர்க் அமைத்து செயல்பட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில் நேற்று ஆயுதப்படை காவலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 4 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 32 லட்சம் பணம், கார், 3 துப்பாக்கி, தோட்டாக்களைப் பறிமுதல் செய்த நிலையில், இவர்கள் அளித்த தகவலின் பேரில் மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த சி.ஆர்.பி.எஃப் காவலர் குமார், ஆனந்த கிருஷ்ணன், சுரேஷ்குமார், ராஜகுரு, மணிகண்டன், பழனிவேலு, கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 7 பேரை கைது செய்த மாவட்ட தனிப்படை போலீஸார், அவர்களிடமிருந்து 9.5 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் ஒரு செல்போன் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து மேலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் பழனிவேல் முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறைக்குக் கொண்டுச் சென்றனர்.

இந்தக் குற்றவழக்கில் தொடர்புடைய மேலும் சிலரையும் போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர். இதுவரை இந்த வழக்கில் 11 பேரையும், 41.5  லட்சம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள சி.ஆர்.பி.எஃப் காவலர் குமார் கடந்த 2005-ம் ஆண்டு பணியில் சேர்ந்துள்ளார் என்பதும் தமிழக ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.