Published:Updated:

வேலி தகராறில் ஒருவர் அடித்துக் கொலை! கண்டுகொள்ளாத கரூர் போலீஸ்?!

"பாலவிடுதி போலீஸ் ஸ்டேஷன்ல பலமுறை கேஸ் கொடுத்தும் எடுத்துக்கலை. எங்களோட ரெண்டு பசங்களும் கோயம்புத்தூர்ல வேலை பார்க்கிறதால, நாங்க ரெண்டு பேரும் மட்டும்தான் இங்க இருந்தோம்."

வேலி தகராறில் ஒருவர் அடித்துக் கொலை! கண்டுகொள்ளாத கரூர் போலீஸ்?!
வேலி தகராறில் ஒருவர் அடித்துக் கொலை! கண்டுகொள்ளாத கரூர் போலீஸ்?!

``என் கண் முன்னாலேயே என் கணவரை அடிச்சதோடு, என்னையும் கட்டையால அடிச்சுப் போட்டுட்டு பக்கத்து வீட்டுக்காரங்க எங்கேயோ ஓடிப் போய்ட்டாங்க. அறுபது நாள் ஆஸ்பத்திரியில வெச்சு 14 லட்சம் ரூபா வரை செலவுசெஞ்சோம். ஆனாலும், என் புருஷனைக் காப்பாத்த முடியலை. என் புருஷனை கொன்னவங்களை இந்த கேஸிலிருந்து தப்பிக்கவைக்க கொலையாளிகளோட உறவினர்களான தி.மு.க ஒன்றியத் துணைச் செயலாளரும், ஓய்வுபெற்ற டி.எஸ்.பி-யும் ட்ரை பண்றாங்க. கொலை தொடர்பா குற்றஞ்சாட்டப்பட்டு, பின்பு ஜாமீனில் வெளியே வந்த நபரோ, உன்னையும் கொன்னுபுடுவே'னு மிரட்டுறார். போலீஸும் அவங்களுக்குச் சாதகமா இருக்கு" என்று கண்ணீர்வடிக்கிறார் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அம்சவள்ளி. 

கரூர் மாவட்டம்,கடவூர் ஒன்றியத்தில் இருக்கிறது தெற்கு அய்யம்பாளையம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் லெட்சுமணன். இவரின் மனைவிதான் அம்சவள்ளி. லெட்சுமணனை, கடந்த ஆகஸ்ட் மாதம் பக்கத்து வீட்டுத் தம்பதியான ராமனும், அவரது மனைவி சின்னப்பொண்ணுவும் அடித்தே கொன்றுவிட்டதாக அம்சவள்ளி அழுதுபுலம்பினார். அவர்கள் அடித்ததில் கை உடைந்து கட்டுப் போட்டிருந்த அம்சவள்ளியிடம் பேசினோம்.

``அவங்களுக்கும், எங்களுக்கும் இடப்பிரச்னை. அதனால், வேலி போடமுடியாமல் இருந்துச்சு. ஆனா, இதைக் காரணமாவெச்சு ரெண்டு பேரும் எங்ககிட்ட சண்டை போடுவாங்க. பாலவிடுதி போலீஸ் ஸ்டேஷன்ல பலமுறை கேஸ் கொடுத்தும் எடுத்துக்கலை. எங்களோட ரெண்டு பசங்களும் கோயம்புத்தூர்ல வேலை பார்க்கிறதால, நாங்க ரெண்டு பேரும் மட்டும்தான் இங்க இருந்தோம். சம்பவத்தன்று உண்மையான எல்லையை விட்டுட்டு, எங்க பக்கம் தள்ளியே வேலி போட்டுக்கிட்டு இருந்தோம். அப்போது அங்குவந்த சின்னப்பொண்ணு, சாணியைக் கரைச்சு வந்து என் கணவர் முகத்துல ஊத்துனாங்க. அவர் தடுமாறி விழவும், ராமன் கட்டையைத் தூக்கிட்டு வந்து என் கணவரை தலையிலேயே அடிச்சார்.

தடுக்கப்போன என்னையும்,கையில அடிச்சார். பிறகு, என் கணவரை அரசு ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டு ஓடினோம். அங்கே, `என் கணவரைக் காப்பாத்த முடியாது'னு சொன்னாங்க. அதனால, மதுரையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்குத் தூக்கிட்டு ஓடினோம். இதற்கிடையில், பாலவிடுதி போலீஸ் ஸ்டேஷன்ல கேஸ் கொடுத்தோம், ஆரம்பத்துல எடுத்துக்கலை. சின்னப்பொண்ணுவின் அண்ணன் தங்கவேலுவும், தம்பி தமிழ் பொன்னுச்சாமியும் பிரஷர் கொடுத்தாங்க. எங்களையும் மிரட்டினாங்க. போராடிதான், `கொலை முயற்சி'னு வழக்கை பதியவெச்சோம். பின்னர், ராமனை மட்டும் போலீஸ் கைதுபண்ணிச்சு. நாங்க, கேஸ் கொடுத்ததுக்காக ஆள்களை அனுப்பி, எங்க வீட்டை தமிழ் பொன்னுச்சாமி அடிச்சு உடைச்சார்" என்றார் சோகமாக.

அம்சவள்ளியின் மூத்த மகன் அன்பரசன், ``மதுரை ஆஸ்பத்திரியில சீரியஸா இருந்த எங்கப்பாவுக்கு 14 லட்சம் ரூபாய் வரை செலவு பண்ணி, 2 ஆபரேஷன் பண்ணினோம். ஆனாலும், சீரியஸாதான் இருந்தார். அதுக்குமேல அந்த ஆஸ்பத்திரியில செலவு பண்ண வழியில்லாம, கோயம்புத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோனோம். ஆனால், சிகிச்சை பலனில்லாமல் இறந்துபோயிட்டார். இதுக்கிடையில், போலீஸோட எங்க வீட்டுக்கு அடிக்கடி வந்த தமிழ் பொன்னுச்சாமி, கேஸை வாபஸ் வாங்கச் சொல்லி தனியாக இருந்த எங்கம்மாவை மிரட்டினார். ஆனா, நாங்க ஒரு வக்கீலை வெச்சுதான் எஃப்.ஐ.ஆர் போட வைத்தோம். அப்பயும் சின்னப்பொண்ணுவை பாலவிடுதி போலீஸ் கைதுபண்ணலை. எங்க இடத்துல வேலி போட்ட பாவத்துக்காக, எங்கப்பாவை அவங்களால இழந்துட்டோம். 

`எங்கப்பாவை கொன்னவங்களை மனசாட்சியே இல்லாம தப்பிக்கவைக்க பார்க்குறீங்களே'னு கேட்டு போலீஸ் ஸ்டேஷன்ல கண்ணீர்விட்டுக் கதறினோம். ஆனா, மனசாட்சி இல்லாத போலீஸ், `இங்கவந்து கூட்டம்போட்டா, உங்களைப் புடிச்சு உள்ளே வெச்சுடுவோம்'னு மிரட்டினாங்க. எங்கப்பாவை இழந்ததுக்குக் காரணமே, எங்கப்பா கொலையாளி ராமன் மேல ஆரம்பத்துல பலதடவை கொடுத்த கேஸ்களுக்கு நடவடிக்கை எடுக்காததுதான். 

இந்நிலையில், தி.மு.க ஒன்றிய துணைச் செயலாளரும் சின்னப்பொண்ணுவின் தம்பியுமான தமிழ் பொன்னுச்சாமியும், அவரின் ஓய்வுபெற்ற டி.எஸ்.பி அண்ணன் தங்கவேலும், இந்தக் கொலை கேஸை ஒண்ணுமில்லாம ஆக்கப் பார்க்குறாங்க. எங்க வழக்கறிஞரையும் மிரட்டிக்கிட்டு இருக்காங்க. இதற்கிடையில், சில நாள்களுக்கு முன்பு ஜாமீன் கிடைச்சு, ராமன் வெளியே வந்துட்டார். சின்னப்பொண்ணுவுக்கும் காசை செலவு பண்ணி முன்ஜாமீன் வாங்கிட்டாங்க. இப்ப அவங்க குடும்பமே சேர்ந்து, `எங்களை ஒண்ணும் பண்ண முடியாது. இந்த கேஸ் அவ்வளவுதான். இப்படியே பண்ணிக்கிட்டு இருந்தா, மிச்சமீதி இருக்கும் உங்களையும் போட்டுத் தள்ளிடுவோம்'னு மிரட்டுறாங்க. ராமனோட மகன் முருகபெருமாளும் அடிக்கடி வந்து, `கேஸ் வாபஸ் வாங்கலன்னா மொத்தப் பேரையும் கொன்னுடுவே'ன்னு மிரட்டுறார்" என்றார்.

ராமன் தரப்பு கருத்தை அறிய அவரது வீட்டுக்கே போனோம். ஆனால், அவர்கள் நம்மிடம் பேச மறுத்துவிட்டனர்.

இதுகுறித்து தமிழ் பொன்னுசாமியிடம் பேசினோம். ``எல்லாம் பொய்க் குற்றச்சாட்டுகள். எனக்கு ராமனும் இறந்த லெட்சுமணனும் உறவினர்கள்தான். அதனால், இந்த விசயத்தில் நான் யாருக்கும் சார்பாகவும் நடக்கவில்லை. சொந்தப் பிரச்னையில், இரண்டு தரப்புக்கும் கைகலப்பாகி, இப்படி ஆகிவிட்டது. அதுக்கு போலீஸ், கேஸை பதிவு பண்ணி ராமனைக் கைது பண்ணுச்சு. தலைமறைவா இருந்த சின்னப்பொண்ணுவை தேடிக்கிட்டு இருந்துச்சு. இந்த கேஸ் விசயமா வந்த போலீஸ், ஊர்ல முக்கியஸ்தர்னு என்னை லெட்சுமணன் வீட்டுக்கு அழைச்சுட்டுப் போனுச்சு. அதைவெச்சு, நான் ராமன் தரப்புக்கு சார்பா இருப்பதாக லெட்சுமணன் குடும்பம் கதை கட்டிவிடுது. இதுல என் பெயரையும், என் அண்ணன் தங்கவேல் பெயரையும் தேவையில்லாமல் இழுக்குறாங்க" என்றார்.

சின்னப்பொண்ணுவின் அண்ணன் ஓய்வுபெற்ற டி.எஸ்.பி தங்கவேலுவிடம் பேச முயன்றோம். பலமுறை முயன்றும் முடியவில்லை. 

பாலவிடுதி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சேகரிடம் பேசினோம். ``ராமனும், அவரது மனைவியும் லெட்சுமணனை அடித்தபோது, கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து ராமனைக் கைதுபண்ணினோம். தலைமறைவா இருந்த சின்னப்பொண்ணுவைத் தேடிக்கிட்டு இருந்தோம். அதன்பிறகு, லெட்சுமணன் இறந்தபிறகு கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி எஃப்.ஐ.ஆர் பதிவு பண்ணினோம். அதற்குள், ராமனுக்கு ஜாமீன் கிடைத்துவிட்டது. சின்னப்பொண்ணுவுக்கு முன்ஜாமீன் கிடைத்தது. அதனால்,மேற்கொண்டு வழக்கு நிலுவையில் இருக்கு. நாங்க யாருக்கும் அடிபணியலை. இந்த வழக்கை முறையாதான் விசாரிச்சுக்கிட்டு இருக்கோம்" என்றார்.